திருத்தந்தை பிரான்சிஸ்
பாலியல் முறைகேடுகள் இறைவனின் நற்செய்தியை இழிவுபடுத்துகிறது
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 21 Mar, 2023
திருஅவையில் உள்ளவர்களால் பாலியல் முறைகேடுகள் நடபெறும்போதெல்லாம் அது கடவுளின் மக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்றும், இத்தகைய முறைகேடுகள் இறைவனின் நற்செய்தியை இழிவுபடுத்தும் செயல்களாக அமைகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் முறைகேடுகள் வழக்குகளை திறம்பட கையாள்வதில் கவனம் செலுத்தி, அம்முறைகேடுகளைத் தடுப்பது குறித்து, மார்ச் 8 முதல் 16 வரை பராகுவே நாட்டிலுள்ள அசன்சியனில் நிகழ்ந்துவரும் இரண்டாவது இலத்தீன் அமெரிக்க மாநாட்டில் பங்குபெறும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தத் தீமையை எதிர்கொள்ளவும், அது மீண்டும் நிகழாமல் தடுக்கவும் தலத்திருஅவையின் தலைவர்கள் அதிகம் பங்களிப்பு செய்துள்ளதைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாடு, நமது திருஅவையில் மாற்றத்திற்கான விருப்பத்தின் உறுதியான வெளிப்பாடாகவும், அதில், பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நமது உறுதிப்பாட்டை செயல்படுத்துவதன் பிரதிபலிப்பாகவும் அமையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருஅவை முழுவதும் சரியான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் போதுமான தன்மையை மேற்பார்வையிடவும் சரிபார்க்கவும், மேலும் முன்னேற்றங்கள் இன்னும் எங்குத் தேவை என்பதை சுட்டிக்காட்டி ஒரு அறிக்கையை தொகுக்கவும் உரிமை வயதற்றவரின் (Minor) பாதுகாப்பிற்கான திருப்பீட அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வமைப்பின் இத்தகைய சீரிய முயற்சிகளை பராகுவே நாட்டின் பாதுகாவலியான அசன்சியன் அன்னையிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்காவிலுள்ள தலத்திருஅவையின் இந்தப் புதிய முயற்சிக்கு அன்னை மரியா ஒரு முன்மாதிரியாகவும், தலத்திருஅவையின் பணியிலுள்ள அனைவருக்கும் வலிமையின் ஆதாரமாகவும் இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comment