No icon

மூவேளை செபவுரை

கண்களைத் திறந்து கடவுளின் கொடைகள் குறித்து வியப்புறுங்கள்

நம் வாழ்வில் இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்த ஆச்சரியம் நம் கண்களைத் திறந்து, மற்றவர்களுக்கு நாம் நன்மை புரிபவர்களாக நம்மை மாற்றவேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்த ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கியது பற்றி எடுத்துரைக்கும் தவக்காலம் 4வது ஞாயிறு நற்செய்தி குறித்து மார்ச் 19 ஆம் தேதி நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் கண்களைத் திறந்து  கடவுளின் கொடைகள் குறித்து வியப்புறுங்கள் எனக் கூறினார்.

பிறவியிலேயே பார்வையற்றவர் குணமடைந்த இந்த நிகழ்வு, நம்மை கடவுள் எவ்வளவு தூரம் அன்புகூர்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது என எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த புதுமை குறித்து வரவேற்பு மனநிலையுடனும், ஆர்வமற்ற மன நிலையிலும், அச்ச மனநிலையிலும், உறுதியான மனநிலையிலும் மக்கள் பல்வேறு விதமாக இப்புதுமைக்கு பதில் வழங்குவதைக் காண்கிறோம் என மேலும் உரைத்தார்.

பார்வையற்ற நிலைக்கு ஒரு காரணம் தேடும் இயேசுவின் சீடர்கள், இதற்கு காரணம் இவரின் பாவமா அல்லது இவர் பெற்றோரின் பாவமா என்ற கேள்வியைக் கேட்க, இயேசுவின் பதிலோ, பார்வையற்றவரின் இருப்பு நம் வாழ்வில் சொல்லும் செய்தி என்ன மற்றும் இதன் வழி கடவுள் நம்மிடம் கேட்பதென்ன என்று சிந்திப்பதற்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது என்றார்.

புதுமையால் குணம்பெற்றவர் உண்மையிலேயே பார்வையற்றவராக இருந்தார் என்பதை நம்பாத சிலரையும், மதத்தலைவர்கள் மீதான அச்சத்தால் இப்புதுமை குறித்து பேச விரும்பாத பார்வையற்றவரின் பெற்றோரையும் நாம் இங்கு பார்க்கிறோம் என்ற திருத்தந்தை, கடவுளின் புதுமைக்கு தங்கள் இதயத்தைத் திறக்காதவர்களையும் இப்புதுமைக் குறித்து வியப்படையாதவர்களையும், மாற விரும்பாதவர்களையும் அச்சத்தால் தங்களை மூடியிருப்பவர்களையும் இந்த நிகழ்வுக் காட்டுகிறது என்றார்.

பார்வைப் பெற்றவரோ அந்நிகழ்வுக்கு அச்சமின்றி சான்றுபகர்வதை நாம் காண்கிறோம், என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாமும் நம் வாழ்வில் நாம் பெற்றவைகளுக்கு எவ்வாறு பதிலுரை வழங்குகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டர். நம் வாழ்வில் இறைவன் வழங்கிய  கொடைகள் குறித்து எண்ணி வியப்படையும் அருளை நமக்கு வழங்குமாறு இறைவனிடம் வேண்டுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளிடம் கூறினார்.

Comment