No icon

நற்செய்தியாளர் லூக்காவின் கண்ணோட்டத்தில்

இயேசுவின் பாடுகளும் மரணமும்

தவக்காலம் - இது மனமாற்றத்தின் காலம்; பாவ மன்னிப்பின் காலம்; இறை உறவில் வளர உதவும் காலம்; இவைகள் எல்லாம் உண்மை தான். எனினும், இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் குறித்துத் தியானித்து, அவரோடு இணைந்து உயிர்த்தெழுவதற்கு அழைக்கும் அருளின் காலம். அதிலும் குறிப்பாக, இயேசு எவ்வாறு நம் பாவங்களுக்குக் கழுவாயாக (1யோவா 2:2) கல்வாரி மலையில் பலியானார் என்பதை அறிந்து கொண்டு, நாமும் பாவத்தையும் சாவையும் வெல்வதற்கு இயேசுவின் இறையதிகாரம் பெற்றவர்களாக மாறுகிறோம் என்பதைக் கற்றுத் தரும் காலம் (யோவா 16:33). எனினும், லூக்கா நற்செய்தியாளர் ஒரு புதிய கண்ணோட்டத்தை இயேசுவின் பாடுகளிலும் மரண நிகழ்வுகளிலும் தந்துள்ளார். அதாவது, பாடுகள், மரணம் ஆகியவற்றைச் சார்ந்து நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இறைத் திருவுளம் நிறைவேற்றும் இயேசு எவ்வாறு சீடர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும் வகையில் ஓர்மாசற்ற மறைசாட்சிஎன்றும், ‘துன்புறும் நேர்மையாளர்என்று எடுத்தியம்பிட லூக்கா முயன்றுள்ளார். எனவே, இதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. கிறிஸ்து நிகழ்வு (Christ-event)

திருவிவிலிய அறிஞர்கள்கிறிஸ்து-நிகழ்வு (Christ-event) என்ற சொற்றொடரை, இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்துக் காட்டப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பற்றி முதலில் புரிந்துகொள்வோம்.

தொடக்கத் திருஅவையில், இயேசுவின் உடனடிச் சீடர்கள் (திருத்தூதர்கள்), அதாவது முதல் நற்செய்தியாளர்கள் எனப்படுவோர், ‘இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மட்டுமே நற்செய்தியாக முழக்கமிட்டு, அறிவித்து வந்தனர். இம்மூன்று நிகழ்வுகளையே இயேசுவின் பணிகளின் சிகரம் என்று அழைக்கின்றனர். இதையே நற்செய்தியின் அடித்தளம் என்றும், நற்செய்தியின் மையம் என்றும், முதல் நற்செய்தி (First Gospel) என்றும் அழைத்தனர். லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய இரண்டாவது நூலானதிருத்தூதர் பணிகள் நூலில் இந்த முதல் நற்செய்தியைப் பற்றி மிக அழகாக விவரித்துள்ளார் (காண். 2:1-41). அதுபோல புனித பவுலும் முதல் நற்செய்தியின் உள்ளடக்கத்தை 1கொரி 15:3-5 இல் சுருக்கமாகத் தந்துள்ளார்.

பெந்தகோஸ்தே நாளில், எருசலேமில் கூடியிருந்த யூதர்களுக்கும் யூதர் அல்லாதவருக்கும் பேதுரு தூய ஆவியாரால் நிரம்பிஇயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தார். அவ்வாறு அவர் அறிவித்த முதல் நற்செய்திஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைப் பற்றியதாகும். இயேசுவைப் பற்றிய நற்செய்தி நூல்கள் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்னரே, தொடக்கத் திருஅவையின் திருத்தூதர்களும் சீடர்களும் தாங்கள் சென்ற இடங்களில்நற்செய்தியாக அறிவித்து வந்ததும் இதுவே. இதுவே நீண்ட காலம்வாய்மொழி நற்செய்தியாக (Oral Gospel) இருந்து வந்துள்ளது.

இம்முப்பெரும் நிகழ்வுகளைத் தொடக்கத் திருஅவை இஸ்ரயேல் மக்களின் சமய நம்பிக்கையின் பின்னணியில்புதிய பாஸ்கா விழாவாகக் கொண்டாடி வந்தது. அதற்காக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தயாரித்தும் வந்தது. பெரும்பாலும், புதிதாகத் திருமுழுக்குப் பெற இருப்பவர்களும் சாவான பாவங்களுக்குட்பட்டவர்களும் நாற்பது நாட்களும் கடுமையான நோன்பிருந்து செபித்து வந்தனர். பாஸ்கா திருவிழிப்பு நாளில் அவர்கள் திருமுழுக்குப் பெற்றனர். பெரும் பாவிகள் இறைச் சமூகத்தோடு மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். இவ்வாறு, திருஅவை இன்றளவும் தொடர்ந்து கொண்டாடி மகிழும்இப்புதிய பாஸ்கா விழாவை விவிலிய அறிஞர்கள்கிறிஸ்து நிகழ்வு (Christ-event) என்று அழைக்கின்றனர்.

நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பிறப்பு தொடங்கி, அனைத்து நிகழ்வுகளும் இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் நோக்கியே நகர்வதாகவும், அவைகளையும் கடந்து உயிர்ப்பையும் நோக்கி நகர்வதாக விவரித்துள்ளனர். எனினும், லூக்கா மட்டும் உயிர்ப்பையும் கடந்து இயேசுவின் விண்ணேற்பை நோக்கி அனைத்தும் பயணிப்பதாகக் காட்டுகின்றார். இந்நிகழ்வுகள் அனைத்தும் திருச்சட்டமும் இறைவாக்குகளும் நிறைவேறும் வகையில் நடைபெறுவதாகவே நற்செய்தியாளர்கள், அதிலும் குறிப்பாக லூக்கா காட்டுகின்றார். லூக்கா நற்செய்தியாளர் இரண்டு அலகுகளில் (22:1-23:56) இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் பற்றி அழகாக விவரித்துள்ளார். எனினும், இவைகளின் விதைகளை இயேசுவின் பிறப்பின் நிகழ்வுகளிலும், பணிக்கால நிகழ்வுகளிலும் தந்துள்ளதை அறிய வருகின்றோம்.

2. நற்செய்தியின் தொடர்ச்சி

லூக்கா நற்செய்தியாளர்இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும்’ 22:1-23:56 இல் தந்துள்ளார். இவைகளில் உள்ள நிகழ்வுகள் அனைத்தும் நற்செய்தியின் முந்திய நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். இதை மிக எளிய வகையில் புரிந்துகொள்ள, பின்வருமாறு விளக்க விரும்புகிறேன்.

இயேசுவை ஏன் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்? அதற்குப் பதில் தேட, இயேசுவின் வாழ்வில் அவர் செய்த இறையாட்சிப் பணிகள், போதனைகள், வல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறித்துப் பேசியாக வேண்டும். எனினும், சுருக்கமாகச் சொல்வது என்றால், இயேசு பல வல்ல செயல்கள் செய்து, சமயத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் மிகப் பெரும் சவாலாக மாறினார். அதன் உச்சகட்ட நிகழ்வுகளாக, இயேசு எருசலேமில் நடத்திய வெற்றிப் பவனியும் எருசலேம் கோவிலில் வியாபாரம் செய்தவர்களை விரட்டியடித்து தூய்மை செய்ததுமே ஆகும் (லூக் 19:28-48).

இதனால், அரசியல் தலைவர்களைவிட, குறிப்பாக சமயத் தலைவர்களே இயேசுவை ஒழித்துவிட வழிதேடினார்கள். இயேசுவின் பணியின் தொடக்கத்திலிருந்து, எவ்வாறு எதிர்ப்புகள் அல்லது மோதல்கள் எழுந்தன என்றும் (லூக் 4:28-29), இறுதியில், பாஸ்கா விழாவில் பிலாத்துவைக் கட்டாயப்படுத்தி, இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொள்ளும் அளவுக்குச் சென்றார்கள் என்பதையும் லூக்கா விவரித்துள்ளார் (லூக் 19:39,47; 20:19,20; 22:1-6,22,47-53; 23:1-49).

2. இயேசுவின் பாடுகளின் தொடக்கம்

இயேசுவின் பாடுகள் எப்பொழுது தொடங்கின?’ என்று கேட்டால், நாம் அனைவரும்குருத்து ஞாயிறுஎனப்படும்இயேசுவின் பாடுகளின் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்குகின்றதுஎன்றே பதில் கூறுவோம். ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசுவின் பாடுகளின் பயணம் அவரின் பிறப்பின் நிகழ்விலிருந்து தொடங்குகின்றது. இதைக் குறித்தே மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டினோம். எனினும், இதற்குரிய விளக்கத்தைக் காண்போம்.

லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய வரலாற்று ஆய்வுப் படைப்பான நற்செய்தியைப் பல்வேறு கருத்துக்கள் அடிப்படையில் வடிவமைத்திருப்பதை அறியலாம். அதாவது, நிகழ்ச்சிகளின் விவரிப்பு மெல்ல மெல்ல இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு நோக்கி நகர்வதை அறிய முடியும். இதற்காக, ‘மோதல் அல்லது எதிர்ப்புஎன்ற கருத்துக் கட்டமைப்பை லூக்கா உருவாக்கி, ஒவ்வொரு நிகழ்வும் எவ்வாறு நகர்கின்றது என்பதை விவரித்துள்ளார். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில், ‘கிறிஸ்து நிகழ்வுபற்றிய வழக்கமான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வது நல்லது. எப்படி?

கிறிஸ்து நிகழ்வு என்பதுஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்புஎன்னும் கண்ணோட்டம் விவிலிய ஆசிரியர்களிடையே இருந்தாலும், அதில்இயேசுவின் பிறப்பையும்இணைத்துக் கொள்வதே சிறந்தது ஆகும். இயேசுவின் பிறப்பின் நிகழ்விலிருந்தே கிறிஸ்து நிகழ்வு தொடங்கிவிட்டது என்ற பார்வையைச் சிமியோன் இறைவாக்கு வழியாக லூக்கா நமக்குத் தந்துள்ளார். எனவே. கிறிஸ்து நிகழ்வு என்பதுஇயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்புஆகிய நிகழ்வுகளின் தொகுப்பாகும். இதை விளக்கமாகக் காண்போம். இதைப் புரிந்துகொள்ள லூக் 2:21-35யை வாசிக்கவும்.

அது இயேசு பிறந்த நாற்பதாவது நாள். அந்நாள் ஆண் மகனைப் பெற்ற யூதத் தாய்க்குரிய தூய்மைச் சடங்கின் நாள். அந்நாளில், இயேசுவை அவரின் பெற்றோர்கள் எருசலேம் கோவிலுக்குக் கொண்டு சென்றார்கள். வழக்கம் போல், ஆண் குழந்தை பெற்ற ஒரு தாய்க்கு நடைபெறும் தூய்மைச் சடங்கு கோவிலில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அச்சடங்கு இயேசுவைப் பெற்ற மரியாவுக்குத் தேவையில்லை (என்றும் கன்னியானவர்) என்பதைக் காட்டும் வகையில், அச்சடங்கு நடப்பதைப் பற்றி எதுவும் பேசாது மௌனம் காக்கின்றார் லூக்கா.

ஆனால், ‘தலைமகனைஅர்ப்பணம் செய்யும் சடங்கு பற்றி மட்டும் விரிவாக எழுதியுள்ளார். இச்சடங்கைச் செய்வதற்காக, பெற்றோர் குழந்தையைக் கோவிலுக்குள் கொண்டு வந்தனர் (லூக் 2:27). அப்போது, தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு கோவிலுக்கு வந்த சிமியோன் என்பவர் இயேசுவைக் குறித்தும் அன்னை மரியாவைக் குறித்தும், “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு, பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:34-35) என்று இறைவாக்குரைத்தார்.

இதனடிப்படையில், இயேசு எவ்வாறுஎதிர்க்கப்படும் அடையாளமாகமாறினார் என்றும், எவ்வாறு பலரின் வீழ்ச்சிக்குக் காரணமாகவும், பலரின் எழுச்சிக்குக் காரணமாகவும் அமைந்தார் என்பதையும் நற்செய்தி நூலிலும், லூக்கா தான் எழுதிய இரண்டாவது நூலானதிருத்தூதர் பணிகள்நூலிலும் காண முடிகின்றது.

அதாவது, இயேசுவை ஏற்று, அவர்மீது நம்பிக்கை கொண்ட யூதர்களும் யூதரல்லாதோரும் எழுச்சி கண்டு மீட்பைப் பெற்றனர் என்றும், இயேசுவை ஏற்க மறுத்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாது, எதிர்த்து, சூழ்ச்சி செய்து, அவரைக் கொன்றுவிட முயன்றவர்களின் (பரிசேயர், சதுசேயர், மறைநூல்வல்லுநர், தலைமைச் சங்கத்தினர்) வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தார் என்பதை விவரித்துள்ளார். இவைகளைக் குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள விரும்புவோர் லூக்கா நற்செய்தியையும் திருத்தூதர் பணிகள் நூலையும் ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு வாசிப்பது நல்லது. எனினும், இங்கு நற்செய்தியாளர் யோவானின் வார்த்தையை நினைவுகூர்வதும் சாலச் சிறந்தது: ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்’ (யோவா 1:11-12).

 அதாவது, கிறிஸ்து நிகழ்வு (Christ-event) இயேசுவின் பிறப்பிலிருந்து தொடங்கியது என்று காட்டும் லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் பணிவாழ்விலும் அந்நிகழ்வு தொடர்ந்தது என்பதையும் தெளிவாக்கியுள்ளார். எவ்வாறு? இதற்குரிய சிறு விளக்கத்தைக் காண்போம். இயேசு தன்னுடைய பணிவாழ்வில் கலிலேயா பகுதிகளில் இறையாட்சிப் பணி செய்து, பலரையும் குணப்படுத்தி, சீடர்களை உருவாக்கினார் என்பதை லூக்கா மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்கள் போன்றே விவரித்துள்ளார்.

கலிலேயா பணிகளை முடித்துவிட்டு, எருசலேம் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை அறிந்த இயேசு, தன்னுடைய பாடுகளையும், மரணத்தையும், உயிர்ப்பையும் குறித்து சீடர்களுக்கு இருமுறை முன்னறிவித்தார் (லூக் 9:22; 43-45). அதாவது, ‘இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானிக்கும்’ (லூக் 9:51) முன்னரே, இருமுறை தனக்கு நிகழவிருக்கும் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்து தன் சீடர்களுக்கு முன்னறிவித்தார்.

முதல் முறை இயேசு முன்னறிவித்த போது, அதைக் குறித்து சீடர்கள் எள்ளளவும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை (லூக் 9:22). அதுமட்டுமல்லஇயேசு தன் சிலுவை மரணத்தைப் பற்றி எடுத்துக் கூறுகையில், தன்னைப் பின்பற்றும் சீடர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளையும் பற்றியும் அதில் விளக்கிக் காட்டினார் (காண். லூக் 9:23-27). அதாவது, சீடராக இருப்பவரும் அவரைப் போல் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதையே காட்டுகின்றார்.

இரண்டாவது முறையாக, இயேசு முன்னறிவித்த போது, சீடர்களின் நிலை பற்றி லூக்கா பின்வருமாறு விவரித்துள்ளார் : “அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்து கொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும், அவர் சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்” (லூக் 9:45). அதாவது, அவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அது மறைவாய் இருந்தது. அதுமட்டுமல்ல, இயேசுவிடம் விளக்கம் கேட்க முடியாத அளவுக்கு அவர்களிடம் அச்சம் இருந்தது.

ஆகவே, இயேசுவின் பாடுகளும் மரணமும் அவரின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளிலும், அவரின் பணி வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும் தொடங்குகின்றன என்றால் மிகையாகாது. இனி இயேசுவின் பாடுகள் மரணம் குறித்து வரும் நிகழ்வுகளைக் காண்போம்.

(தொடரும்)

Comment