மேட்டியோ புருனி
சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட திருத்தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 03 Apr, 2023
மார்ச் 29 ஆம் தேதி புதன் மாலை, முன்பே திட்டமிடப்பட்ட சில பரிசோதனைகளுக்காகவும், சுவாச தொற்றைப் போக்கும் சிகிச்சைக்காகவும் உரோமையுள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சில நாள்கள் தங்கி சிகிச்சைப் பெறுவார் என்றும் திருப்பீடச் செய்தி தொடர்பகத்தின் இயக்குனர் மேட்டியோ புருனி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் சுவாச பிரச்சனைகளால் அவதியுறுவதாகக் கூறிவந்த வேளை, புதன்கிழமை காலை வழக்கம்போல் திருப்பயணிகளுக்குப் புதன் மறைக்கல்வி உரை வழங்கிய பிறகு, பிற்பகலில் மருத்துவப் பரிசோதனைக்காக ஜெமெல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனை முடிவுகள் திருத்தந்தை அவர்களுக்கு சுவாச நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்கின்றன என்றும், அதற்குச் சில நாள்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை அவருக்குத் தேவைப்படும் என்றும், ஆனால் திருத்தந்தைக்கு கோவிட் - 19 நோய்த்தொற்று இல்லை என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மருத்துவப் பரிசோதனையின்போது, தங்களின் நெருக்கத்தையும் செபங்களையும் வழங்கிய அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்துள்ளார். திருத்தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக திருப்பிடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது. 17 வயதில் கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றபோது திருத்தந்தைக்கு நுரையீரலின் ஒரு சிறிய பகுதி அகற்றப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது. 86 வயதில் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை விரைவில் குணம்பெற்றிட இறைவேண்டல் செய்வோம்.
Comment