No icon

வினுத் கும்பாங்

மதம்மாறுவோருக்கு அரசு சலுகைகள் வழங்கப்படக் கூடாது – ஆர்எஸ்எஸ்

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறும் பழங்குடியின மக்களின் அரசு சலுகைகள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இந்து அடிப்படைவாத அமைப்பின் ஒரு பகுதியாகவும், அஸ்ஸாம் பழங்குடியின மக்களின் பாதுகாவலனாகவும் தன்னை காட்டி கொள்ளும் அஸ்ஸாமின் ஜனஜாதி தர்ம சமஸ்கிருதி சுரக்ஷா மஞ்சா (JDSSM) இயக்கமானது ஆளும் ஒன்றிய அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளது.

JDSSM இயக்கத்தின் தலைவர் வினுத் கும்பாங் "அந்நிய மதங்களுக்கு மாறும் பழங்குடியின மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் அந்நிய மதங்களுக்கு மாறிய அந்த நொடியே தாங்கள் சார்ந்திருக்கும் பழங்குடியினத்தின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மத சடங்குகளின் மேல் உள்ள உரிமை என அனைத்தையும் இழந்து விடுகிறார்கள். அதுபோல மதம் மாறினால் அரசு சலுகைகளையும் அவர்கள் இழந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படக் கூடாது" என்று கூறினார்.

இதுகுறித்து பேராயர் மூலச்சிரா, "கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்களுக்கு அரசின் சலுகைகள் மறுக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்தது. அதை மீண்டும் மக்களுக்கு பெற்று தர வேண்டும் என்பது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்களின் நீண்ட நாள் கனவு. மேலும் ஒருவர் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது மதத்தைத் தேடி கொள்கிறார். தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் தன்னை ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றிக் கொள்கிறார். இந்நிலையில், இதற்காக அரசாங்கம், அரசு சலுகைகளை நிறுத்துவது உண்மையாகவே நீதிக்கு எதிரானது, அரசியல் அமைப்பு சட்டம் தருகிற சமத்துவத்திற்கு எதிரானது" என்று கூறினார்.

இந்தியாவில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் அந்நிய மதங்களாகவும், பௌத்தம், சீக்கியம், ஜெயின் போன்ற மதங்கள் இந்திய நாட்டின் பாரம்பரிய மதங்களாகவும் கருதப்படுகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் மத வழிபாட்டு முறைகளை ஏற்று, மற்ற மதங்களைப்போல தங்கள் மதத்தையும் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கையை வைத்து வருகிறார்கள். ஆனால் அரசாங்கமானது அவர்களை இந்து மதத்தினுடைய ஒரு பகுதியாகவே உள்ளடக்கி வைத்திருக்கிறது.

Comment