டிஜிட்டல் சகாப்தத்தில் குருத்துவ அறநெறி
திருத்தந்தையின் “Vos estis lux mundi” புதிய நடைமுறை
சமீபத்திய கிறித்தவ பாதிரியாரின் பாலியல் குற்றங்கள் குறித்த செய்தி ஊடகங்களுக்கு தொடர்ந்து தீனிப்போட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இப்பதிவு என்பது மனிதர்கள் என்கிற ரீதியில் நம்(குருக்கள்) பலவீனத்தை உணர்வதும், குருத்துவப்பணியை ஏற்றிருப்பவர்கள் என்கிற வகையில் நமக்கு ‘தவறு செய்ய உரிமை இல்லை’ என்கிற உண்மையை ஏற்றுசெயல்படவும், அனைத்திற்கும் மேலாய், கடந்த மார்ச் 25 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் தனது சுயவிருப்பத்தின் பேரில் (motu proprio) வெளியிட்ட அறிக்கையான, “சிறார் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பாலியல் முறைகேடுகளைத் தடுத்தல் மற்றும் எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றிற்கான “Vos estis lux mundi” ஏட்டின் புதுப்பிக்கப்பட்ட விதிகளைப் பற்றி சுருக்கமாய் தெரிந்து கொள்வதற்குமே!
சவால்கள் மத்தியில் திருப்பணியாளர்கள்
திருப்பணியாளர்களின் வாழ்வும், பணியும் குறித்துப்பேசும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு, “மனிதரிடமிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்துவதற்காக, மக்கள் சார்பாக கடவுள் முன்பணிபுரிய ஏற்படுத்தப்பட்ட திருப்பணியாளர்கள் மற்ற மனிதர்களுடன் சகோதரர்களாக வாழ்கின்றார்கள். இவ்விதமே இறைமகனாம் ஆண்டவர் இயேசுவும் தந்தையினால் மனிதர்களிடம் அனுப்பப்பட்ட மனிதராக நம்மிடையே வாழ்ந்தார். பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் தம்முடைய சகோதரர், சகோதரிகளைப் போல் ஆகவிரும்பினார்... ஆண்டவர் எந்தப் பணிக்காக அவர்களை (குருக்களை) அழைத்திருக்கிறாரோ, அதற்கு அவர்கள் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதற்காகவே, அவர்கள் இவ்வுலக வாழ்வு அல்லாத மற்றொரு வாழ்வுக்குச் சாட்சிகளாகவும், அவ்வாழ்வை வழங்குவோர்களாகவும் திகழாவிட்டால், கிறிஸ்துவின் பணியாளர்களாக இருக்க முடியாது... (இயல்-1, எண்-3) என்கிறது.
மனிதர்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இவ்வுலகிலே வாழ்ந்தாலும் இறைபணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற ரீதியில் உலக போக்கிலான வாழ்வைத் தொடரக் கூடாது என்பதே சங்கப் படிப்பினை. ஆனால், உலகத்தின் மாற்றங்கள் துறவு நிலையினரின் வாழ்விலும் பல்வேறு தாக்கங்களை அன்றாடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். குறிப்பாக, இன்றைய நவீன தகவல் தொழில் நுட்பத்தால் “தூரங்கள் சுருங்கிவிடுவதும் அல்லது அந்தரங்க வாழ்வின் உரிமைகள் இல்லாமல் செய்யும் அளவிற்கு தூரங்கள் மறைந்துவிடுவதும் விந்தையாகவே உள்ளது. அனைத்துமே ஆய்விற்கும், பரிசோதனைக்கும் உட்பட்ட காட்சிப் பொருளாகவே மாறிவிட்டன. மக்களின் வாழ்வு இப்பொழுது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தகவல் தொடர்பு, மக்களின் வாழ்வினை பிணைத்து வெறுமையாக்கி இணைப்புப்பட்டை அமைத்து பல நேரங்களில் பெயர் அறியப்படாத முறையில் திறந்த வெளிக்கு கொணரப்படுகின்றது. பிறரின் மதிப்பைச் சிதைத்து, மறைத்து, பிறரை உதாசீனப்படுத்தி தூரத்தில் நிறுத்துகின்றது. வெட்கம் அற்று பிறரின் வாழ்வின் தரவுகளை ஊடுருவுகின்றோம்” (திருத்தந்தை பிரான்சிஸ், அனைவரும் உடன்பிறந்தோர் திருமுகம் எண்:42). இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலில் குருத்துவ வாழ்வை கிறித்தவ விழுமியங்களால் பலப்படுத்துவதற்கான முயற்சிகளைக் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நல்ல மனச்சான்று உருவாக்கத்தை நமக்குள் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்ப தேவையுள்ளது.
ஒரு சிலரால் எல்லார்க்கும் கெட்டப் பெயர் - இதென்ன நியாயம்?
சிறையில் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் அந்த குருவானவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேவேளையில் யாரையும் நான் வற்புறுத்தவில்லை, யாருடைய அனுமதியுமின்றி இச்செயல்களில் ஈடுபடவில்லை, யாருடைய விருப்பமுமின்றி நடந்துகொள்ளவில்லை... என்கிற தன் விளக்க நியாயத்தையும் தெரிவித்திருக்கிறார். அவரது நியாயம் ஏற்புடையதா? சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பரவ விட்டவர்கள் அவரின் தனியுரிமையில் (privacy) தலையீடு செய்துள்ளார்கள் என்பது சரியாகுமா? இச்சம்பவத்திற்குப் பின் “ஒரு சிலரால் எல்லார்க்கும் கெட்டப் பெயர்” என்கிற நியாதிபதிகளின் வார்த்தைகளையும் கேட்க முடிகிறது. அப்படியெனில், நாம் எல்லாரும் நீதிமான்களா? முன்வைக்கும் இக்கேள்விகள் எல்லாம் நியாயம் கற்பிக்கவோ அல்லது சரி-தவறு சொல்லி தீர்ப்பு எழுதவோ அல்ல; ‘உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்பதுபோல தவறிழைப்பவர் யாராக இருந்தாலும் தவற்றிக்கேற்ற தண்டனையை சட்டம் வழங்கும்.
அதேவேளையில் ‘நான் அப்படியல்ல’; ‘நான் நல்லவன்’ என்றெல்லாம் தங்களுக்குத்தானே நற்சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் தாங்களும் பலவீனமானவர்கள் என்கிற எண்ணத்தை சிந்தையில் நிறுத்தி, நன்மையை நோக்கி நாளும் வளர முயற்சிக்க வேண்டும். வெளியில் தெரியாது என்பதால் எதையும் செய்யலாம் என்கிற மனநிலை கொண்டிருப்பவர்கள் முகமூடிகளை அகற்றி பொறுப்பேற்றிருக்கும் நற்பணிக்கு என்றும் பிரமாணிக்கமாய் வாழ்வதற்குரிய செயல்களை மேற்கொள்ள வேண்டும். வெளியில் தெரிந்ததால் அவர் குற்றவாளி, மறைமுகமாக இதுபோன்ற பல குற்றங்கள் நம்மிடையே நிகழாமலில்லை என்கிற உண்மையை ஒத்துக்கொள்வோம். உண்மையை ஏற்றுக்கொள்கிறபோது தான் தீமைகளை களைவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்போம்.
யார் தவறிழைத்தாலும் தவறு தவறே! தவறு செய்து வெளிப்படையாக மாட்டிக் கொள்பவர்கள் மறைமுகமாக தவறு செய்து கொண்டிருக்கிறவர்களுக்கான எச்சரிக்கையாகவும் மாறுகிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நம் கத்தோலிக்க கிறித்தவர்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் குருத்துவத்தை, மணத்துறவை, ஒப்புரவு அருட்சாதனத்தை கேலிக்கு உட்படுத்தி, பலரும் பதிவிடும் காட்சிகளைக் காண முடிகிறது. இதனை வருத்தம் கடந்து துறவு நிலையினராகிய நாம் நமது இயல்பை - இருப்பை - செயல்களை சுய ஆய்வு செய்வதற்கான அழைப்பாக கருதுவோம். பொதுவெளியில் எதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும்போதுதான் விழிப்பு நிலை உத்வேகம் கொள்கிறது. அங்ஙனமே நாமும் உத்வேகம் கொள்வோம். குறிப்பாக, சக குருக்களைக் குறித்து நாமே சமூக வெளிகளில் தவறாக வதந்திகளைப் பரப்புவது, மொட்டைக் கடிதங்கள் எழுதுவது என்கிற அழிவுக் கலாச்சாரங்களை கைவிடுவோம். ஒருவரின் சுயமதிப்பை அழிப்பது என்பது அந்நபர் மீது நாம் தொடுக்கும் வன்முறை ஆதிக்கமே! தவறுகள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில் உண்மைக்கு முரணான அவதூறுகள் எப்பொழுதுமே களையெடுக்கப்பட வேண்டும்.
“Vos estis lux mundi” - புதிய பதிப்பு
இறைபணியில் உள்ள ஒருவர் தவறுசெய்கிறபோது, அவரை காப்பாற்றும் நோக்குடன் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக, தவறு செய்தவரை இடம் மாற்றுவது, பாதிக்கப்பட்டவர்களை அமைதியாக இருக்க வற்புறுத்துவது, நீதியைத் தடுக்க சட்ட இயந்திரங்களைப் பயன்படுத்துவது... இப்படி குற்றங்களை மூடிமறைக்கும் போது அநீதிகள் குறையாமல் தொடரும். இதனை நன்கறிந்த திருத்தந்தை கடந்த “Vos estis lux mundi” யின் புதிய பதிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
அவை திருஅவைக்குள் பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், எதிர்த்துப் போராடுவதற்குமான திருத்தந்தையின் திட்டவட்ட புதிய விதிகள்தான். 2019 ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, நான்காண்டு சோதனை நடைமுறைகளுக்குப்பின், தலத்திருஅவை ஆயர்கள், திருப்பீடத்துறையின் தலைவர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னர் முந்தைய பதிப்பிற்கு மாற்றாக இப்புதிய விதிகளை திருத்தந்தை அறிவித்துள்ளார். இது இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
யாருக்கானது?
ஒரு குறிப்பிட்ட தலத்திருஅவையை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள ஆயர்கள், திருஅவை சமூகத்தின் உயர் அதிகாரிகள், திருஅவையின் அங்கீகாரம் பெற்ற அல்லது திருஅவையால் உருவாக்கப்பட்ட அனைத்துலக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஆகியோரின் பாலின முறைகேடுகள் தொடர்புடையதாக இப்புதிய விதிகள் உள்ளன.
அழுத்தம் பெறும் திருத்தங்கள் : சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.
* புகாரளிப்பவர் மீது எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், இப்போது இந்தப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்கிறது.
* குற்றம் கூறும் நபர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் நற்பெயருக்கும் தனிப்பட்ட முறையில் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
* விசாரணைக்கு உட்பட்டவர்கள் தங்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் போது குற்றமற்றவர்கள் என்ற அனுமானம் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு கேட்கப்படும் பகுதியும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
* சிறார் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபருடன் பாலியல் நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்ட நிலையில், புதிய பதிப்பு, ஆறாவது கட்டளையான ‘கொலை செய்யாதே’ என்பது பற்றியும் வலியுறுத்துகின்றது.
* முறைகேடுகள் குறித்து புகாரளிக்க உதவும் வகையில் வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது.
* விசாரணையைத் தொடரும் பணி, சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் இடத்தின் ஆயரின் பணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஆயர்கள், திருஅவை பணித்துறையின் உயர் அதிகாரிகள், திருஅவை பன்னாட்டுச் சங்கங்களின் தலைவர்கள் ஆகிய அனைவரும் அவரவர் பணிக்குபொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்கள் அறிந்திருக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்துகின்றது.
* இந்த ஆவணம், சிறார், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மட்டுமன்றி, அருள் பணியாளர்களால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், பாலியல் முறைகேடுகள் மற்றும் வயதுக்கு வந்த அருள்பணித்துவ மாணவர்கள், நவதுறவியர் ஆகியோரின் முறைகேடுகளையும் உள்ளடக்க வேண்டும் என உரைக்கிறது.
இறுதியாக
மனித சட்டத்தின் செயல்பாடு குறித்துப் பேசுகையில் புனித தாமஸ் அக்குவினாஸ், “சட்டம் நல்லொழுக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார். திருஅவை நமக்கு வழங்கியுள்ள சட்டங்கள் அனைத்தும் நம்மை நல்லொழுக்கத்தில் வளர்த்தெடுக்கும் அறநெறிமுறைகளே! எனவே, அவற்றை கட்டாயத்தால் அல்ல; அன்பால் கடைப்பிடிப்போம். நாம் நமது தவறுகளைக் கண்டும் காணாமல் மூடிமறைக்கும் அலட்சிய அநீதியால்தான் மூன்றாம் தரப்பினரால் அம்பலப்பட்டு சந்திசிரிக்கும் நிலைக்கு ஆளாகிறோம். எனவே, முளையிலே நமது தவறுகளை கிள்ளியெறிய முனைவோம். உயர் படிநிலையில் உள்ளவர்களில் பலரும் தங்கள் சொந்த கடமைகளுக்கு நியாயம் கற்பிக்கத் தவறுவதாலும் பிழைகள் தொடர்கிறது. சிபாரிசுகள், பாராபட்சங்களைத் தூக்கியெறிந்து, யார் தவறுசெய்தாலும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அறநெறி வளர்ப்போம். அனைத்திற்கும் மேலாய், “ஒரு குருவானவர் மனசாட்சியை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது” (புனித மாக்ஸ்மில்லியன் கோல்பே). மனசாட்சியே இறைவனின் குரல். அக்குரல்படி நடப்போம்.
Comment