No icon

‘தனிமை’

இறைமக்கள் பார்வையில் அருள்பணியாளர்கள்

இறையழைத்தல் என்பது, இளங்குருமடத்தில் குருமட மாணவனாக இணைந்து, குருவாக உருவாகும்வரை உள்ள பயணம் மட்டுமல்ல; மாறாக, என்றென்றும் குருவான இயேசுவுடன் நிரந்தரமாக இணையும்வரை தொடரும் தொடர் பயணம்”.

- திருத்தந்தை பிரான்சிஸ்

அருள்பணியாளர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு முன் அவர்களின்தனிமைபற்றி சொல்லியே ஆகவேண்டும். பங்கில் ஆடம்பரமாக திருவிழாக்கள், கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற நாட்களில் வெகு சிறப்பான கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் முடிந்த பிறகு அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு திரும்பி சென்று விடுவார்கள். ஆனால், குருவானவர் மட்டும் அவர் அறையில் தனிமையாக இருப்பார். அவருடன் பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். அதுவும் வார நாட்களில் காலை திருப்பலி முடிந்தவுடன் இன்னும் மோசம். பகல் முழுவதும் தனிமைதான். துறவு இல்லங்களில் வாழும் குருக்களுக்கும் இதே நிலைதான். இதனாலேயே குருக்கள் திருப்பலி முடிந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே பறந்து விடுகிறார்கள். அறையில் இருப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்காக, தம் குடும்பம், உறவுகளை விட்டு நமக்காக பணியாற்ற வருகிறார்கள். அவர்களுக்கு நாம் தான், உறுதுணையாக, ஆதரவாக இருக்க வேண்டும்.

சரி, இப்போ, அவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும், இறைமக்கள் குருக்களிடம் எதிர்பார்ப்பது என்ன என அலசுவோம்.

1) இறை மனிதராக, இறைவனோடு ஒன்றித்து செயல்படுபவராக.

2) செப மனிதராக, எல்லா செயல்களிலும் செபத்தை முன்னிலைப்படுத்துபவராக.

3) நல்ல ஆயனாக, தம் மந்தையின் முடை நாற்றம் முழுவதும் அறிந்தவராக.

4) மக்களை படித்தவராக, தொடர்ந்து உறவில் இருப்பவராக.

5) நம்பிக்கை ஊட்டுபவராக, தெளிவான விளக்கங்கள் தருபவராக.

6) திருஅவை மற்றும் திருவிவிலியம் பற்றிய ஆழமான அறிவுக் கொண்டவராக, அதனை சரியான புரிதலுடன் விளக்குபவராக.

7) மறையுரை, வாசகங்கள் அடிப்படையில் சுருக்கமாக.

8) தூய்மை உள்ளவராக, கற்பில் மேன்மை உள்ளவராக சிந்தனையில், வாக்கில், செயல்பாடுகளில்.

9) எளிமை, பணிவு, வெளிப்படை தன்மை உள்ளவராக.

10) உண்மை உள்ளவராக, நேர்மையானவராக, மனித நேயம் மிக்கவராக.

11) சாதி வேறுபாடுகள் பார்க்காமல் அனைவரும் சமம் என்ற மனப்பான்மை உள்ளவராக.

12) இறைமக்கள், எளிதில் ஒப்புரவு பெற உதவுபவராக, நம்பகத்தன்மை உடையவராக.

13) மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு செவி மடுப்பவராக, தனக்கு எல்லாம் தெரியும் நான் நிறைய படித்திருக்கிறேன் என்ற தற்பெருமை அற்றவராக, என்னை விட உனக்கு அதிகம் தெரிந்திருக்கிறதோ என்ற மனநிலை அற்றவராக.

14) மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்பவராக.

15) ‘நாம் அனைவரும் பொதுநிலையினராகவே திரு அவையில் நுழைந்தோம், குருவாகவோ, ஆயராகவோ அல்ல என்பதை உணர வேண்டும்’, என திருத்தந்தை பிரான்சிஸ் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக,

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலத்தீன் அமெரிக்க குருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் தற்கால குருக்கள், 1. இறைவேண்டலில் கடவுளோடு நெருக்கம், 2. தல ஆயரோடு, துறவுமட அதிபரோடு நெருக்கம், 3. அருள்பணியார்களுக்கு இடையே நெருக்கம், 4. இறைமக்களோடு நெருக்கம் ஆகிய நான்கு வகையான உறவுகள் பற்றியும் எப்படி இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பகிர்ந்த கருத்துகளோடு முடிக்கிறேன்.

a)செபிக்காத அருள்பணியாளர் குப்பைத் தொட்டிக்குள் தன்னை வைக்கிறார். எனவே, எப்போதும் செபிப்பவராக தன்னை இறைவனோடு நெருக்கமானவராக.

b) ஆயர், துறவுமட அதிபர், அருள்பணியாளர்களின் தந்தை. ஒருவேளை ஆயர் வேண்டப்படாதவராக இருக்கலாம். ஆனால், அருள்பணியாளரும் அத்தகையவரே. எனவே, இருவிரு தரப்பினரும் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

c)அருள்பணியாளர்களிடம் இருக்கின்ற மிக கேவலமான தீய குணத்தில் ஒன்று புறணி பேசுதல் (மூன்றாவது நாக்கு, சீஞா 28:14. அடிக்குறிப்பு) ஆகும். மற்ற குருக்களைப் பற்றி மிகவும் மோசமாக பேசுவது. இது அவர்கள் வாழ்வையே அழித்து விடும். மற்றவர்களும் நம் உடன் சகோதரர்கள் என உணர வேண்டும்.

d)அருள்பணியாளர்கள் தங்களின் பங்கு மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை மறந்து, மேம்போக்காக வாழ்கின்றவராக இருத்தல் கூடாது. அவர்களின் எல்லாத் தேவைகளையும் அறிந்தவராக இருக்க வேண்டும்.

முடிவாக,

இறைமக்கள் தங்கள் அருள்பணியாளர்களை மிகவும் மதிக்கிறார்கள். இளம் குருவாக இருந்தாலும் வயதில் பெரியவர்கள் கூட அவரிடம் பணிந்து, வணங்கி சிலுவை பெற்றுக் கொள்வார்கள். இதை புரிந்துக் கொண்டவர்களாக குருக்கள் தங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் சிறந்த முன்மாதிரியான வாழ்வு வாழ வேண்டும்.

காண்க : - 1திமொ 6 : 10- 12; 1கொரி 7: 24; உரோ12 : 3; யோவா15 : 16.

Comment