No icon

மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பணி

​​​​​​​பணியின் தொடக்கம்

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பங்குகளிலும், கத்தோலிக்கப் பள்ளிகளின் மேலாளராகவும் இருந்த அருட்தந்தை A. அந்தோணி, தனது 38 வது வயதில் இரு விழிகளிலும் பார்வை இழக்க நேர்ந்தது. பார்வையிழப்பின் பாதிப்பை அனுபவித்த அவர்கள் மேலை நாடுகளில் பயிற்சி பெற்று பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்துடன், ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து அவர்கள் தலைமையில் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் லூசியா பார்வையற்றோர் சங்கம் உருவானது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 3 பார்வையற்ற நபர்களுடன் இஞ்ஞாசியார்புரத்தில் ஓர் இல்லம் தொடங்கினார்கள். பின்னர் தூத்துக்குடி மீளவிட்டான், சில்வர்புரத்தில் 1978 ஆம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டு, 1985 ஆம் ஆண்டு முதல் சில்வர்புரத்தில் இல்லம் செயல்பட்டு வருகின்றது.

வளர்ச்சிப் பாதையில் லூசியா

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான பார்வையற்றோரும், ஏனைய மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். 30 நிறுவனங்களின் கூரையின் கீழ் சிலரே பயனடைகின்றனர். எனவே லூசியா நிறுவனத்தைக் கடந்து பணி விரிவாக்கம் பெற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. சமூக அடிப்படை மறுவாழ்வுத் திட்டத்தில் லூசியா அமைப்பு இறங்கியது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பார்வையற்றோர், ஏனைய மாற்றுத் திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பார்வையற்றவர்களை அவரவர் வீட்டிலே வைத்துப் பராமரிப்போம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் உதவிகளை நடுவத்திலிருந்து செய்வோம் என முடிவெடுக்கப்பட்டது.

அதற்காகக் களப்பணியாளர்கள் பயிற்சிக்கு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். களப்பணியாளர் துணையுடன் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பயனாக மாற்றுத் திறனாளிகள் யாரையும் சார்ந்து நிற்காமல் சொந்தமாக உழைத்துச் சம்பாதிக்க லூசியா நிறுவனம் பயிற்சிகளை வழங்கியது.

லூசியாவின் பணிகள்

* பார்வையற்றவர்களுக்கு கட்டில், நாற்காலி பின்னுதல், துண்டு போர்வை நெசவு, பாய் நெசவு, காகித உறை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளித்து தகுந்த பணிகளில் பணியமர்த்தப்பட்டார்கள்.

* லூசியா பல்வேறு முனைகளில் வளர்ந்தது.

* முடநீக்கியல் சாதனம் முனைகளில் வளர்ந்தது.

* முடநீக்கியல் சாதனம் தயாரிக்கும் தொழிற்கூடம்  அனைத்து  உபகரணங்களுடன் 1990 இல் துவங்கி செயல்பட்டு வருகிறது.

* இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்குடன் லூசியா மாறுபாட்டுத் துவக்கப்பள்ளி 23.09.1991 இல் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு ஆசிரியர்களுக்கு அரசு போதனாமுறை மானியம் பெறப்பட்டது.

* நவீன தசைப்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய தசைப்பயிற்சி கூடம் 1991 இல் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

* மாற்றுத்திறனாளிகள் குடும்பமாக வாழ 33 வீடுகள் கட்டி குறைந்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

* விபத்து மற்றும் சர்க்கரை நோயினால் கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை கால் பயிற்சி பெற்ற நபரால் செயற்கை கால்கள் செய்யப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

* துவக்கப்பள்ளியானது  01.04.2003 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது.

* 01.04.2015 முதல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

* 2012 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு ஆசிரியர் மற்றும் 1 தசைப்பயிற்சியாளருக்கான தொகுப்பூதியம் பெறப்பட்டு வருகிறது.

* மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் தசைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

* எம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தேவைப்படும் உதவி துணைக் கருவிகள் இலவசமாக செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

* மாணவர்களுக்குத் தோட்டம், கை வேலை, விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

* ஒவ்வொரு ஆண்டும் லூசியா திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு அனைத்து சீர் வரிசைகளும் வழங்கப்படுகிறது.

ஹெலன் பிளாரிட்டி இல்லம்

இந்த பின்புலத்தில் கள்ளிகுளத்தில் ஹெலன் பிளாரிட்டி நிறுவனம் தொடங்கப்பட்டது. இது மறைமாவட்ட நிறுவனம் இல்லையென்றாலும்மறைமாவட்டக் குரு தந்தை Y. D. இராஜன் அவர்களின் தனி அக்கறையால் பராமரிக்கப்பட்டு, அளப்பரிய பணிகள் ஆற்றுவதால் இங்கு பெருமையுடன் பதிவிடுகிறோம்.

மறைமாவட்டத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கானப் பணி நெல்லை மாவட்டத்திலும் தொடர வேண்டும் என்பதற்காக இந்நிறுவனம் செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் எனும் பெயருடன் விளங்குகிறது.

லூசியாவில் செயல்படுத்தப்படும் அத்தனை பணிகளும் இவ்வில்லத்திலும் இன்னும் கூடுதல் சிறப்புடன் நிறைவேற்றப்படுகிறது. பார்வையற்றவர்கள், கால் ஊனமுற்றவர்கள், பேச்சுத் திறனற்றவர்கள், செவித்திறன் குறைந்தவர்கள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர் என முதன்மையான ஐந்து ஊனங்களும், அவைகளின் உட்பிரிவுகளாக இருபத்தியொரு ஊனங்களும் ஆய்வில் கண்டறியப்பட்டன. நெல்லை மாவட்டக் கிராமங்களில் எல்லாம் கணக்கெடுப்பும், ஆய்வும் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இவ்வாய்வுகளைப் பயன்படுத்துகின்றது.

ஆண்டுதோறும் மாவட்ட மறுவாழ்வுத் துறையின் விருதுகளைப் பெற்றுள்ளது. இல்லத்தின் இயக்குனர் தந்தை Y. D. இராஜன் தமிழக அரசால் சிறந்த சமூகப் பணியாளர் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துச் சலுகைகளும், எல்லா வகையான அடையாள அட்டைகளும் இவ்வில்லத்தால் பயனாளிகளுக்குப் பெற்றுத் தரப்படுகிறது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம் எனப் பணிகள் விரிவாக்கம் பெற்றுள்ளன. தமிழக, இந்திய அரசின் துணையோடும் தனியார் நிறுவனங்களின் உதவியோடும் மாற்றுத் திறனாளிகளுக்கானப் பணி தொய்வில்லாமல் தொடர்கிறது.

Comment