No icon

மலரும் மண உறவு தம்பதியர் இயக்கம்

தூத்துக்குடி மறைமாவட்டம்

மலரும் மண உறவு பயிற்சி

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல (யோவா 13:34) என்ற இயேசு கிறிஸ்துவின் அன்புமொழியை அடிப்படையாகக் கொண்டு, கணவன், மனைவி இருவரும் அன்புகூர்ந்து, அந்த அன்புறவில் தினமும் மகிழ்வுடன் வாழ்ந்திடத் தம்பதியர்களுக்காகவே தம்பதிகளால் நடத்தப்படும் சிறப்பான பயிற்சியே மலரும் மண உறவுப் பயிற்சி ஆகும். நன்றாக வாழும் தம்பதியரை இன்னும் சிறப்பான தம்பதியராக வாழத் தூண்டுவதே இப்பயிற்சியின்  நோக்கமாகும். தம்பதிகள் தங்களது விருப்பு வெறுப்புகளையும், ஏக்கங்களையும், தேவைகளையும் ஒருவருக்கொருவர் தயக்கமின்றி உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த கடவுள் கொடுக்கிற மிகப்பெரிய வாய்ப்பு என இதைக் கருதலாம். பயிற்சிக்கு அழைப்பது யாராக இருந்தாலும் பயிற்சிக்குக் கரம் பிடித்து அழைத்து வருவதும், பங்குபெற வைப்பதும் கடவுளே. இப்பயிற்சியை ஒரு தம்பதியும், ஒரு குருவும் வழங்கினாலும் அவர்கள் ஒரு சிறு கருவி மட்டும்தான். பங்குபெறும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் இப்பயிற்சியை வழங்கிப் பெற்றுக்கொள்கிறார்கள். இப்பயிற்சி நமது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இப்பயிற்சியின் மூலம் மிகுந்த பலன் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் 40 பங்குகளுக்கு மேல், ஏறத்தாழ 600 தம்பதிகள் பங்கு பெற்றுப் பலன் அடைந்துள்ளார்கள்.

பங்கு பெற்ற தம்பதியர்களின் சார்பாக

மலரும் மண உறவு பயிற்சிக்கு வந்த எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகியது. விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை வளர்ந்தது. ஒருவர் மனதில் உள்ள ஏக்கங்கள், கவலைகளை நாங்கள் புரிந்து கொண்டோம். அதன்படி செயல்படும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மலரும் மண உறவு பயிற்சிக்கு மிக்க நன்றி என்பது பங்கு பெற்ற ஒரு தம்பதியரின் சான்று.

மலரும் மண உறவு இயக்கம் மிகவும் உன்னதமான ஒரு திட்டம். தம்பதியர்களிடையே ஏற்படும் காதல் உணர்வுகள், ஐயங்கள், எதிர்பார்ப்புகள், தயக்கம், சோகம் அனைத்தையும் பகிர்ந்து உரையாடுவதன் மூலம் அன்பு என்ற தூய ஆவியாரின் கொடையினால் பிணைக்கப்படுகிறோம். “இப்பயிற்சியில் கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் மிக பயனுள்ளதாக இருந்தன. உள்ளக் குமுறலை எழுதிப் பகிர்தல், இரவு தனிமையில் பகிர்ந்து கொள்ள வைத்த முறை மிகவும் பாராட்டுக்குரியதுஎன்கின்றனர் பலர்.

மனைவியின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருள்வாழ்வியம் (ஆன்மீகம்) என்பது சிறப்பான இல்லற வாழ்வில் அமைந்துள்ளது என்பதை உணர்ந்தோம்”. “படுக்கை அறையிலும் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல், தினமும் கண்டிப்பாக சிறிது நேரம் கலந்துரையாடல் செய்வது போன்றவை எங்களை மாற்றியதுஎனப் பலர் உறுதியாகக் கூறுகின்றனர்.

மலரும் மண உறவு பயிற்சி யாருக்கு? யார்? எப்போது?

திருமணமான தம்பதிகள் எல்லாரும் பங்கு பெறலாம். குறிப்பாக திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள்ளான இளம் தம்பதிகள் பங்கு பெற்றால் மிகவும் சிறப்பு. குருக்களும், இருபால் துறவிகளும் இதில் பங்கு பெறலாம். இரண்டு நாள் முழுமையான பயிற்சி என்றாலும் கூட பங்குபெறும் தம்பதிகளின் இடம், சூழலுக்கேற்ப பயிற்சி நேரம் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பங்குத் தளங்களிலோ, இல்லங்களிலோ இப்பயிற்சியை நடத்தலாம்.

மலரும் மண உறவுப் பயிற்சியின் வரலாறு

1952-ல் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த அருட்திரு. கபிரியேல் கால்வோ அவர்கள் தம்பதிகளின் அன்புறவின் வளர்ச்சிக்காக இதனை வடிவமைத்தார்.

1962-ல் பார்சிலோனாவிலும் - அங்கிருந்த தம்பதிகளின் துணையோடு அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஆங்கிலத்தில் வழங்கினார்கள்.

1973-ல் அருட்திரு. பீட்டர் டி. சூசா & டிக் - பாட்ரிக் முயற்சியால் பம்பாய், பெங்களூரில் ஊன்றப்பட்டது.

1997-ல் தமிழ்நாட்டில் காலூன்றி தமிழிலேயே பயிற்சிகள் தரப்பட்டன.

2002-ல் தூத்துக்குடியில் அருட்திரு. ரூபர்ட் அருள்வளன் அடிகளின் வழிகாட்டலில் சில தம்பதியர் உருவாக்கம் பெற்றனர். அருட்திரு. ரூபர்ட் அருள்வளன் அவர்களது பெருமுயற்சியால் பல ஆங்கிலப் பாடங்கள் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டன. அவை தூத்துக்குடி மறைமாவட்டத்திலும், பிற மறைமாவட்டத்திலும் பயன்படுத்தப்பட்டன.

அருட்திரு. சேவியர் அருள்ராஜ். அருட்திரு. ஜெய்கர், அருட்திரு. .தே. செல்வராஜ், அருட்திரு. பன்னீர் செல்வம் ஆகியோரின் வழிகாட்டலில் மலரும் மண உறவுத் தம்பதியர் மகிழ்வுடன் கூடுகின்றனர்.

2006-ல் தூத்துக்குடி குழுவானது இந்திய மலரும் மண உறவு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழக அளவில் சிறப்புப் பெற்றது. நமது மறைமாவட்ட மலரும் மண உறவுத் தம்பதியர் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று மலரும் மண உறவு இயக்கத்தைப் பரப்பினர். அதனைத் தொடர்ந்து மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ், மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களின் ஆசியாலும், ஆதரவோடும் குடும்ப நலப் பணிகளில் சிறப்புப் பணியாக மலரும் மண உறவை எடுத்து நடத்த, அதன் செயலர் தந்தை அருட்திரு. ஜெய்கரை நியமித்துள்ளார்கள். வேதியர் திரு. ஜேசுதாஸ் - கிருபா மற்றும் பொறுப்புத் தம்பதிகள், பயிற்சி வழங்கும் தம்பதிகள் - குருக்களின் சிறப்பான உடன் உழைப்பால் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தம்பதிகளின் வாழ்வு சிறக்க இப்பயிற்சியை வளர்ப்போம்-ஜெயிப்போம். உலகிலே குடும்ப வளர் வாழ்வு பயிற்சிகளில் மிக மிகச் சிறப்பான ஒன்றான மலரும் மண உறவு பயிற்சியில் அனைவரும் பங்கெடுக்க ஆவண செய்வோம்.

Comment