No icon

இயக்குனர் மத்தேயோ புரூனி

திருத்தந்தையின் உடல் நலம் தேறிவருகிறது

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் மாதம் 7ஆம் தேதி குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 9 வெள்ளி இரவும் எவ்வித பிரச்சனையும் இன்றி தூங்கியதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருப்பீடத் தகவல் தொடர்பு அறிக்கைத் தெரிவிக்கின்றது.

மூன்றாவது நாள் இரவும் திருத்தந்தை நிம்மதியாகத் தூங்கியதாகக் கூறும் திருப்பீடத் தகவல் துறையின் அறிக்கை, திருத்தந்தை தன் அறுவை சிகிச்சைக்குப் பின் நன்முறையில் இருப்பதாகவும், உடலுக்குத் தேவையான சக்தியை வழங்கும் திரவம் வழக்கம்போல் நோயாளிகளுக்கு கை நரம்பு வழியாக வழங்குவது நிறுத்தப்பட்டு, திரவ உணவை அவர் உட்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.

வெள்ளி மாலையில் அங்கிருந்த குழுவுடன் அவர் செபித்ததாகவும், பின்னர் திருநற்கருணைப் பெற்றதாகவும் கூறும் திருப்பீடத் தகவல் துறை அறிக்கை, திருத்தந்தை நலமடைய செபித்தும், வாழ்த்துக்களை வெளியிட்டும் மக்கள் அனுப்பிவரும் செய்திகள் திருத்தந்தையின் மனதைத் தொட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

குறிப்பாக, ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகள் தங்கள் கையால் படங்களை வரைந்து அவர் நலனுக்காக வாழ்த்துக்களை அனுப்பியுள்ள அன்புக்காகவும், நோயாளிகளிடையே பணிபுரியும் அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும், திருத்தந்தை தன் நன்றியை வெளியிடுவதாகவும் அவ்வறிக்கையில், திருப்பீடத் தகவல் தொடர்பு இயக்குனர் மத்தேயோ புரூனி தெரிவித்துள்ளார்.

Comment