No icon

பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயரின் ஆசியுரை

விளிம்பு வாழ் மக்களின் விடிவெள்ளியாக...

பிரான்சிஸ்குவின் புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை நிறுவிய ‘இறை ஊழியர்’ மிக்கேல் அன்சால்தோ திருஅவைக்கும் புதுவை-கடலூர் உயர் மறை மாவட் டத்திற்கும், சமுதாயத்தின் விளிம்பு வாழ் மக்களுக்கும் செய்த அருள்பணிகளை எண்ணி வியக்கிறேன். இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ 1771 - 1805 வரை நமது உயர் மறைமாவட்டத்தில் அளப்பரிய அருள்பணிகளை ஆற்றியிருப்பது ஆச்சரியத்திற் குரியது. மக்கள் ஆன்மிகத்தில் ஆழம்பெற பங்குப் பணியையும்,  சமுதாயத்தில் விளிம் புக்கு வெளியே தள்ளப்பட்ட மக்களையும், ஆதரவற்றக் குழந்தைகளையும் பாதுகாக்க சமூகப் பணியைத் துணிவுடன் செய்துள்ளார். அலோஷியஸ் கொன்சாகா பெயரில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கி, அவர்களைக் கண்காணிக்க தனது சேவையால் ஈர்க்கப்பட்ட பெண்களுக்குத் துறவுப் பயிற்சியளித்து, வார்த்தைப்பாடு எடுக்கச் செய்து புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை 1775 இல் நிறுவியுள்ளார்.

‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று சூளுரைக்கப்பட்ட அந்நாள்களில் பெண் கல்வி ஒன்றே பெண்களைச் சமுதாயத்திலும், சமயத்திலும் முகவரி கொடுத்து மாண்புறச் செய்யும் என்று 1787 இல் பெண் களுக்கென அன்சால்தோ கல்விக்கூடத்தைத் தொடங்கியுள்ளார். அன்பு செய்ய மட்டுமே அறிந்த அன்சால்தோ ‘ஆன்மாக்களைக் காக்க’ (Save the Souls) என்ற இலட்சியத்தோடு சமய மறுமலர்ச்சிக்காய் பாடுபட்டுள்ளார். பாண்டியின் பெரும்பாலான பகுதிகளில் அப்போஸ்தலிக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்று பணி செய்துள்ளார். ஆறு மறைப்பணியாளர்கள் செய்யும் பணியை, தந்தை ஒருவரே செய்தார் என்று வரலாறு சுட்டிக்காட்டுவது அவரின் அயரா உழைப்பை அறியச் செய்கிறது. 1771-லிருந்து பேராலயப் பங்கு திருமுழுக்குப் பதிவேட்டிலும், உழவர் கரை பங்கில் 1768-1776 வரை உள்ள திருமுழுக்குப் பதிவேட்டிலும் அன்சால்தோவின் கையொப்பம் உள்ளது. பேராலயத்தில் காலை 5 மணி முதல் 10 மணி வரை ஒப்புரவு கேட்டுள்ளார். இறை பக்தி மற்றும் மரியன்னை பக்தியை மக்களுக்கு ஊட்டி, மறைப்பணியால் நற்செய்தி அறிவித்து, மறைக்கல்வி கற்பிப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டு, ஓய்வின்றி உழைத்திருக்கிறார் என்பது புலனாகிறது. இவரைப் போன்ற தன்னலமற்ற உயர்ந்த மாமனிதர்களின் சேவை இன்றும் நமது திருஅவைக்குத் தேவை.

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் துறவற வாழ்வைப் புதுப்பித்தல் பிரிவில், “சபை நிறுவியவரின் உள்ளுயிர், நோக்கம், திட்டம், மரபுகளைக் குடும்பச் சொத்தாக்கி சரியாய் தெரிந்து போற்றிப் பேணவேண்டும்” என்று  எழுதப்பட்டிருப்பது போல, புனித அலோஷியஸ் கொன்சாகா சபைச் சகோதரிகள், தங்கள் நிறுவனரின் உள்ளுயிரை வாழ்வாக்குகின்றனர். விளிம்பு வாழ் மக்களின் விடிவெள்ளி யாகத் திகழ்கின்றனர். சகோதரிகள் அன்று முதல் இன்று வரை நமது உயர் மறைமாவட்டத் திலும் மற்றும் உலகின் பல பகுதிகளில் உள்ள குக்கிராமங்களிலும் அன்சால்தோவின் கனவை நனவாக்கி வருகின்றனர். சகோதரிகளின் சேவையைப் பாராட்டுகிறேன். சபைத் தலைவி சகோ. ராஜாமணி அவர்களையும், நிர்வாகப் பணியாளர்களையும் மற்றும் சகோதரிகளையும் வாழ்த்தி இறையாசீரை வழங்குகிறேன். இறை ஊழியர்  திருஅவைக்கும் குறிப்பாக நம் உயர் மறைமாவட்டத்திற்கும், தந்தை அன்சால் தோவை புதுவை மண்ணிற்குப் புரட்சிப் பூபாளமாக அனுப்பிய இயேசு சபைக்கும், அப்போஸ்தலிக்க மேற்பார்வையாளராக அனுப்பப்பட்ட கப்புச்சின் சபைக்கும், இயக்குநராகப் பணியாற்றிய பாண்டி கார்மேல் மடத்திற்கும், வித்திட்ட தூய அடைக்கல அன்னை சபைக்கும், நிறுவிய புனித அலோஷி யஸ் கொன்சாகா சபைக்கும் இறைவன் எல்லா வரங்களையும், கொடை களையும் பொழிந்து,  உடனிருந்து நன்மைகளால் நிரப்ப செபிக்கிறேன். 

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவைப் பற்றிய பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்ட ஆய்வின் (ஆராய்ச்சி மற்றும் விசாரணை) நிறைவு விழாவில் நடை பெறும் ஆடம்பரத் திருநிகழ்வில் இறை ஊழியர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப் பெற செபிக்கிறேன்.

 

Comment