No icon

இளமைப் பருவமும், மறைப்பணி ஆர்வமும்...

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் வழியில்...

அருள்தந்தை மிக்கேல் அன்சால்தோ சொந்த மண்ணை, மக்களை துறந்து, மறைப்பணி ஆற்ற 1771 இல் பாண்டிச்சேரியில் கால் பதித்தார். அவர் இயேசுவின் பெயரை எல்லோருக்கும் அறிவித்திட வேண்டும் என்ற இலட்சியத் தீபத்தை, தன் உள்ளத்தில் ஏந்தி வந்தார்.            

இறைமகன் இயேசுவின் சீடராய்...

இயேசு சபையின் குருவாய்...

அனாதைகளின் அடைக்கலமாய்...

ஆதரவற்றோரின் புகலிடமாய்...

கைவிடப்பட்டோரின் கலங்கரை தீபமாய்...

விளங்கிய புண்ணியவான், விளிம்பு வாழ் மக்களின் விடிவெள்ளியாய் புதுவை மண்ணில் தடம் பதித்த ஆண்டு  மக்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியான ஆண்டு! அருள்தந்தை மிக்கேல் அன்சால்தோ சே.. இத்தாலி நாட்டில் சிசிலி தீவிலுள்ள மெசினா நகரில் 1739 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 29 ஆம் நாள் பிறந்தார். இயேசு சபை பள்ளியில் கல்வி பயின்று தனது 15 ஆம் வயதில் இயேசு சபையில் நவத்துறவு பயிற்சியில் ஜனவரி 15, 1754 இல் சேர்ந்து, 16.01.1756 இல் முதல் வார்த்தைப்பாடும், 19.04.1767 குருப்பட்டமும், 15.08.1770 இல் இறுதி வார்த்தைப்பாடும் பெற்றுக்கொண்டார்.   வேதம் போதிக்க, கடல் கடந்து வந்த மறைப்பணியாளர்களைப் பற்றிக் கேட்டறிந்து, அவர்களைப் போல திருத்தூதுப் பணியாற்றும் ஆர்வம் அவரில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது

இலட்சியவாதியாக...

1771-1775 வரை ஐந்து ஆண்டுகள் பாண்டிச்சேரியை வலம் வந்து, சமய-சமூக-அரசியல்-பொருளாதாரச் சூழலைப் பார்த்தறிந்தார். குழந்தைத் திருமணத்தால் சின்னஞ்சிறு வயதிலேயே விதவைகள் ஆக்கப்பட்டுஎங்கள் வாழ்வு மலராதா?’ என்று ஏங்கும் சிறுமிகளின் நிலை, பிரெஞ்சுப் புரட்சியால் கணவர்களை இழந்த விதவைப் பெண்கள், தந்தையை இழந்த மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளின் பாதுகாப்பற்ற நிலை, பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் அவல நிலை, பெண்களைச் சூறையாடும் தேவதாசி முறைஅடிமைகள் ஏலம் விடப்படும் மனித மாண்பு இழந்த நிலை (7 முதல் 16 வயதிற்குட்பட்ட 166 குழந்தைகள் ஒவ்வொருவரும் ரூபாய் மூன்றிலிருந்து இருபது வரைக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்), விளிம்பிற்கு வெளியே தள்ளப்பட்ட தலித் மக்கள், வழிபாட்டுத் தலங்களில் மற்றும் கோவில்களில் ஒதுக்கி வைக்கப்படும் நிலை, வறுமையோடு  அன்றாட உணவுக்குப் போராடும் நிலை, அரசியல் போர், பகை உணர்ச்சியால் மக்கள் படும் மனச்சுமை இவைகளால் அல்லலுற்ற மக்களைக் கண்டு நெஞ்சம் குமுறினார்.

புதுவையின் சமூகச் சூழலமைவு இறைப்பணியின் தொடக்கத்திலேயே அவரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவெடுத்து, வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்க 1775 இல் ஆதரவற்றோர் இல்லம் அமைத்து, புனித அலோசியஸ் கொன்சாகாவின் பாதுகாவலில் ஒப்படைத்தார். அவர்களைக் கண்காணிக்க அன்னம்மாள், எலிசா என்று இரு அன்னையர்கள் தாங்களே முன்வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அன்சால்தோவின் தன்னலமற்ற பணியால் ஈர்க்கப்பட்ட பெண்கள் பலர் அன்சால்தோவோடு இணைந்து பணி செய்வதற்காக வருகைப் புரிந்தனர். அவர்கள் தேவ அழைத்தல் என்னும் கொடையைப் பெற்றவர்கள் என்பதை உய்த்துணர்ந்த தந்தை, அன்னை அன்னம்மாள் அவர்களுக்கும் மற்றும் ஆர்வமுள்ள  பெண்களுக்கும் துறவு வாழ்வின் அடையாளமான வெண்ணுடை அளித்தார். தந்தையால் ஒழுங்குகள் கொடுக்கப்பட்டன. தகுதியுள்ளவர்கள் திருப்பலியில் வார்த்தைப்பாடுகள் கொடுத்து தங்களையே அர்ப்பணித்தனர். இவ்வாறு தந்தை மிக்கேல் அன்சால்தோ 1775 இல் புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை நிறுவினார்.

அன்னை அன்னம்மாளை துறவறக் குழுமத்தின் தலைவியாகவும், அன்னை எலிசாவை ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளராகவும் நியமித்தார். கல்வியால் மட்டுமே பெண்கள் சமுதாயத்தில் அடையாளம் பெற முடியும்விளிம்பிலிருந்து மையத்தில் இடம் பெற முடியும் என்ற தீர்க்கமான முடிவால் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் பெண்களுக்கென 1787 இல் பள்ளிக்கூடம் தொடங்கினார். விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் சாதியக் கொடுமையால் ஒடுக்கப்படும் பெண்களுக்கென நெசவுத் தொழிற்கூடம் அமைத்து வாழ்வில் வெளிச்சம் காணச் செய்தார்.

இப்பணியில் தந்தை அவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம். ஆயினும், அவற்றினைக் கண்டு அஞ்சி பின்வாங்கவில்லை. இமயம்போல தடை வரினும், அவர் கொண்ட கொள்கையில் உறுதி உடையவராய், இறை உறவில் ஆழம் கொண்டவராய், பரமனின் பராமரிப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவராய் பணியைத் தொடர்ந்தார்.

தந்தையின் பணியில் அண்ணன் ஜோசப் அன்சால்தோவின் உடனிருப்பும், உதவியும் அளவிட முடியாதவை. எதிர்பாராத விதமாக அண்ணன் ஜோசப் அன்சால்தோ விண்ணகம் சென்றது தந்தை மிக்கேல்  அன்சால்தோவிற்கு மாபெரும் இழப்பாக இருப்பினும், அண்ணன் வேறொரு வாழ்க்கைக்குச் சென்று விட்டார் என்று விசுவாசக் கண்களோடு ஏற்றுக்கொண்டார். “ஏக்கத் தின் மறுபக்கத்தில்தான் என் மகிழ்ச்சி காத்திருக்கிறதுஏமாற்றத்தின் மறுபக்கத்தில்தான் என் வெற்றி அமைந்திருக்கிறதுஎன்று இறைவனைப் பற்றிக்கொண்டு நம்பிக்கையோடு பணியைத் தொடர்ந்தார்

குழந்தைகளை-பெண்களைப் பராமரித்தலில், இறைவார்த்தையைப் போதிப்பதில், மறைக்கல்வி கற்பிப்பதில், திருமுழுக்கு அருட்சாதனம்  வழங்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார்புதுவை நகரின் பெரும் பகுதியில் அப்போஸ்தலிக்க ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார். திருத்தந்தை ஆறாம் பத்திநாதரிடமிருந்து 1804 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டதால், பாண்டிச்சேரியின் ஆயர் ஷம்பனுவாவின் பிரதிநிதியாக கீழ்ப்படிதலு டன் சென்னை கப்புச்சின் மடத்திற்கு 1805 இல் அப்போஸ்தலிக்க மேற்பார்வையாளராகச் சென்றார்.

ஹென்றியோன் என்பவர்கத்தோலிக்க நாடுகளின் பொது வரலாறுஎன்ற நூலில்  மைக்கேல் அன்சால்தோ அடிகள்கிறித்தவர், துறவி, அப்போஸ்தலிக்க மதிப்பீடுகளுக்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு. உயரிய உள்ளமும், ஆழ்ந்த அறிவும், தவத்தின் வளமையும், தியாகத்தின் எளிமையும் ஒருங்கே கொண்ட பெரிய மேதை இவர்என்று அழகுபடக் குறிப்பிட்டுள்ளார். கடமையும், பணியுமே தன் கடுந்தவமாகக் கொண்ட தவப் பெரியார் இவர். அன்பு செய்வது ஒன்றையே மாபெரும் அறமாகக் கொண்டு, தொண்டு செய்வதில் உயர்ந்து நின்றவர்.

விண்ணகப் பயணம்...

கடின உழைப்பு, அயராக் கண்கள், தபசு வாழ்வு, தன்னலமற்ற பணி, சுவைகுன்றிய உணவு, அடிக்கடி பயணம் போன்றவற்றால் தந்தையின் உடல் நலம் குன்றியது.

பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” (பிலி 3:14) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கேற்ப, கடவுள் கொடுத்த அழைப்பை ஏற்று 1805 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளில் பரிசைப் பெற சொந்தத் தாய் நாடாம் விண்ணகத்திற்குப் பயணமானார். சென்னையில் உள்ள கப்பூச்சின் மடத்தில் தனது இன்னுயிரை ஈந்தார்

நிறுவனர் தந்தை மிக்கேல் அன்சால்தோ அவர்களின் வாழ்வு மற்றும் நற்பண்புகளை ஆய்வு செய்து  உரோமை புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயம், அவரைஇறை ஊழியர்என்று அங்கீகரித்து, அருளாளர் நிலைக்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்க 2020 டிசம்பர் 3 ஆம் நாள் தடையின்மை ஆணை (Nihil Gostat)) வழங்கியது. உயர் மறைமாவட்ட ஆய்வு பணிகளின் நிறைவு திருநிகழ்வுகளின் கொண்டாட்டம் 21.06.2023 அன்று எம் சபையின் பாதுகாவலரின் விழா நாளில் நடைபெறுவது மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகிறது

வளர்ச்சிப் பாதையில்...

துறவு வாழ்வு நடத்தி வந்த அன்னையர்கள் தந்தையின் விண்ணகப் பயணத்திற்குப் பிறகு தொய்வடைந்த நிலையில் இருந்தனர். தந்தையின் உள்ளுயிர் அவர்களில் வாழ்ந்து கொண்டிருந்தது. ஆயனில்லா ஆடுகளைப் போன்று செய்வதறியாது  தனித்திருந்த அன்னையர்களை அறிந்து, வழி காட்டி, வரலாறு கொடுக்கவும், உயர் மறைமாவட் டத்தின் நேரடிப் பார்வைக்குச் சகோதரிகளின் துறவற வாழ்வைக் கொண்டு வரவும் அருள்தந்தை ஜூலியன் சார்லஸ் லெகோதே MEP அவர்கள் தணியாத தாகம் கொண்டார்.

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் மறைவுக்குப் பிறகு ஆண்டுதோறும் திருப்பலியில் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து வாழ்ந்து வந்த அன்னையர்கள் வெளிப்படையாக வார்த்தைப்பாடு கொடுக்க அருள்தந்தை லெகோதே MEP பேராவல் கொண்டார். அவரின் பெரும் முயற்சியால் 1858 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் முறையாக, ஆடம்பரமாக வார்த்தைப்பாடு கொடுத்து, தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

தந்தை லிஜியோன் MEP அடிகளாரின் அயரா முயற்சியாலும், பேராயர் கிளமெண்ட் போனான், பேராயர் லவுனான் ஆண்டகைகளின் பேருதவியா லும் திருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் அவர்களால் 1886 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் திருச் சபையின் ஒப்புதல் பெற்ற பிரான்சிஸ்குவின் முறையான மூன்றாம் சபையோடு இணைக்கப்பட்டது.

பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபை 1996 அக்டோபர் 4 ஆம் நாள் திருத்தந்தையின் நேரடி ஆட்சிக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15) என்ற இறைவார்த்தைக்கேற்பசகோதரிகள் பாண்டிச்சேரி, இந்தியா, மியான்மர், எருசலேம், ஆஸ்திரியா, ஐரோப்பிய நாடுகளிலும் நிறுவனர் தந்தையின் உள்ளுயிரை வாழ்வாக்கி ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்துப் பணி செய்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, வாழ்வு உரிமைகள் மறுக்கப்பட்ட மானுடத்தின் உயர்வுக்காகத் தங்களையே அர்ப்பணித்து  பணி செய்து வரும் சகோதரிகள், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து, சாட்சியாய் வாழ்ந்து, சபையின் நோக்கத்தையும், தனிவரத்தையும் வாழ்வாக்கி, நிறைவை நோக்கிப் பயணிக்கின்றனர்.

எட்டாம் நூற்றாண்டில் சமுதாய நீதிக்காக, குறிப்பாக சமுதாயத்தில் வன்கொடுமையால் நசுக்கப்பட்ட பெண் குழந்தைகள், விதவைகள் மற்றும் பெண்களுக்காகக் குரல் கொடுத்த இறைவாக்கினர் ஆமோஸ் போன்று, 18 ஆம் நூற்றாண்டில் சமுதாயச் சீர்கேடுகளைச் சீரமைக்க உதித்த இறைவாக்கினராக இறை ஊழியர் அன்சால்தோ இன்றும் விளங்குகிறார்.

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் பரிந்துரையால், அவர் நிறுவிய புனித அலோசியஸ் கொன்சாகா சபையும், அவர் பணியாற்றிய மற்ற சபைகளும் நிறுவியவரின் உள்ளுயிரையும், நோக்கத்தையும்சபையின் தனிவரத்தையும் வாழ்வாக்கிப் பணி செய்ய வாழ்த்துகிறேன்.

Comment