No icon

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’

அன்சால்தோவின் உள்ளுயிரில்

இறைவன் யாரை முன்குறித்தாரோ, அவரைத் தம் பணிக்காகப் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவ்வாறு இறைவனால் முன்குறித்து, பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, காண்போர் வியப்புறும் வண்ணம் இறை ஊழியத்தில் நிலைத்திருந்து, காலம் கடந்து வாழ்பவர்தான் கொன்சாகா நிறுவனர் தந்தை மிக்கேல் அன்சால்தோ.

யார் இந்த மாமனிதர்?

இத்தாலி நாட்டில் சிசிலி தீவில் உள்ள மெசினா நகரில் 1739 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் பிறந்தார்ஆரம்பக் கல்வியும், மேல் நிலைக் கல்வியும் படித்த இவர் 1754 ஆம் ஆண்டு ஜனவரி 15 இல் நவதுறவு பயிற்சியில் இயேசு சபையின் குருமடத்தில் சேர்ந்தார். பலேர்மோவில் உள்ள இயேசு சபைக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல், மருத்துவம், இறையியல் படித்தார். ஐந்து ஆண்டுகள் இலக்கிய மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1767 செப்டம்பர் 19 அன்று இயேசு சபைக் குருவாகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார்.

இவரின் பணித் தாகம்

இயேசு சபையில் இணைந்த பின், மறைப்பணிக்காகக் கடல் கடந்து சென்று ஆற்றிய மறைப் பணியாளர்களைப் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். அவர்களைப் பற்றிய நூல்களை வாசித்தார். தானும் அவர்களைப் போன்று திருத்தூதுப் பணியாற்ற வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார். சபைத் தலைவரின் அனுமதி பெற்று, பிரெஞ்சு கப்பல் ஒன்றின் மூலமாக இந்தியாவுக்குப் பயணமானார். ஏறக்குறைய ஐந்து மாதகால பயணத்திற்குப் பின்பு 1771 இல் பாண்டிச்சேரி அரிக்கைமேடு வந்தடைந்தார்.

தந்தையைப் பாதித்த புதுவைச் சூழல்

புதுவையில் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சாதியத் தாக்கம், அரசியல் அராஜகம், சமயப் பூசல்கள், இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த அந்நியரின் அத்துமீறல்கள், தொடர்ந்து நடைபெற்ற போர்க்கலவரம், இடையில் ஏற்பட்ட பஞ்சம் இவைகளை எல்லாம் உற்று நோக்கினார்.

அக்கணமே அவர் உள்ளத்தில் உதித்த உள்ளுயிரானது இளம் விதவைப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, தினமும் வறுமையோடு வாழ்பவர்களுக்கு வளமையினைத் தருவது, அரசியல், போர், பகை உணர்ச்சியினால் உழலும் மக்களின் துன்பச் சூழலிலிருந்து விடுவிப்பது என்பதே அவரின் நிலைப்பாடு; அது அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு முதல் படியாக, பெண்கள் கல்விபெற வேண்டும், கைத்தொழில் கற்று, பொருள் ஈட்டி வறுமைப் பிணியில் இருந்து மீள வேண்டும் என்று திட்டங்கள் வகுத்தார். பெண்களுக்கென ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்தினார்.

தந்தை மிக்கேல் அன்சால்தோவின் உள்ளத்தில் கனன்ற  இந்த அக்கினிப் பிரவேசம் 248 ஆண்டுகள் கடந்தும்  கொன்சாகா துறவியராகிய சலோம் மாநிலத்தின் கீழ் இயங்கும் பணித்தளங்களில் இன்றும் பிரகாசமாக ஒளிர்ந்து, சபையின் இலக்கு மக்களுக்கு ஒளி கொடுத்து வருகின்றனர்.

இறைவார்த்தையை வாழ்வாக்கும் நற்செய்தியாக

நற்செய்தி அறிவிப்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு பணி செய்த நிறுவனர் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிஎளியோருக்கு நற்செய்திஎன்ற எம் சபையின் நோக்கத்தை ஆர்வமுடன் நிறைவேற்றி வருகின்றனர்.

புதுவையின் ஒரு பகுதியான உழவர்கரையில் 1893 ஆம் ஆண்டிலிருந்து எம் சகோதரிகள் பணி செய்து வருகின்றனர். சகோதரிகள் கல்விப் பணியுடன் மறைப்பணியும் ஆற்றி வந்தார்கள். அவர்களின் திருமறைப் பணியைத் தடுக்கும் வகையில் அரசு ஆணை ஒன்றை 16-09-1898 அன்று அன்றைய புதுவை அரசு வெளியிட்டது. “புதுவை அரசு பள்ளிகளில் மறைக்கல்வியைப் போதிக்கக்கூடாதுஎன்பது அந்த ஆணை. அரசாணையைக் கண்ட அன்னையர்கள் அரசின் அதிகார பலத்தைக் கண்டு பயந்து போகவுமில்லை, தாங்கள் கொண்ட கொள்கையில் பின்வாங்கிடவும் இல்லை. தங்களுடைய எதிர்ப்பை மிகத் துணிவுடன் செயல்வடிவில் வெளிப்படுத்தினர். ‘மறைக்கல்வி போதிக்க அனுமதிக்காத இடத்தில் வேறு பணி செய்ய மாட்டோம்எனப் பள்ளிப் பணிகளிலிருந்து விலகினர். பள்ளிகளில் பணி செய்வதன் மூலம் கிடைத்த ஊதியத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் அதைக் குப்பையென எண்ணித் தூக்கி எறிந்தனர். அத்துடன் நின்றுவிடவில்லை, வீடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணி, சமூகப் பணி முதலியவற்றைச் செய்து மக்கள் கொடுத்த நன்கொடையைக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் ஒதியத்தூர் பணித்தளத்தில், 25 பேர் கொண்ட பொதுநிலையினர் குழுக்களை ஒருங்கிணைத்து, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விவிலியம் அறியவும், அன்னை மரியா, எம் சபை நிறுவனர் பாதுகாவலர் பற்றியும் மற்றும் அனைத்துப் புனிதர்களின்  பக்தி முயற்சியை வளர்க்கவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் வழியில் கல்விப்பணி

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்என்னும் பொன்மொழிக்கு ஏற்ப இறைவனையே பிரசன்னப்படுத்தும் கல்விப்பணியைக் கொடுப்பதில், முனைப்புடன் செயல்பட்டவர். ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று பெண்களை இரண்டாம் தரமாகக் கீழ்ப்படுத்திய காலத்தில் கல்விச் சாலையை உருவாக்கி கல்வி அளித்தவர்.

அன்சால்தோஎன்றாலேதுணிவுஎன்பது பொருள். ‘பெண்களுக்குக் கல்வி ஒன்றே சமுதாயத்தில் மாண்பினைத் தரும்என்று உணர்ந்தவராய், எத்தனையோ இடர்கள், எதிர்ப்புகள் மத்தியிலும் துணிவுடன், வீரமுடன் பெண்களுக்கென்று முதன்முதலில் 1787 இல் கல்விக்கூடத்தை  நிறுவினார்.

இன்று தந்தையின் வழியில்  சகோதரிகள் கல்விப் பணியை அற்புதமாய் ஆற்றி வருகின்றனர். அன்சால்தோ உயர்நிலைப் பள்ளி, அன்சால்தோ அகாடமி முதலியன அன்சால்தோவின் பெயரைத் தாங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல இல்லங்களும், காப்பகங்களும் தந்தையின் பெயரால் இயங்கி வருகின்றன. சலோம் மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் தனித்துவம் நிறுவனர் தந்தையின்  உள்ளுயிரின் பரிணாமமாக வும், அடையாளமாகவும் திகழ்கின்றது.

*             மாணவர் சேர்க்கையில் இலக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது,

*             வறுமையில் உழல்பவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவது,

  மறைக்கல்வி, நல்லொழுக்கம் வழியாக, கிறித்தவ மதிப்பீடுகளையும்அறநெறி மதிப்பீடுகளையும் வளர்ப்பது,

*             கத்தோலிக்க மாணவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையை அளிப்பது,

*             மனிதநேயத்தை வளர்க்கும் கல்வியை அளிப்பது.

ஆன்மிகத்தை வேரூன்றி, ஆன்மாக்களை அறுவடை செய்யும் கல்வி

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத் தரிசிக்கும் வகையில் அமைதியான ஆன்மிகத்தை தன்னிலும், பிறரிலும் காண தியானம், கருத்தரங்குகள், ஜெப வழிபாடுகள், சமய விழாக்கள் மூலம் ஆழ்ந்த ஆன்மிகத்தை மாணவச் சமூகத்திற்குக் கொடுக்க முடிகின்றது. இன்றைய நவநாகரிக உலகில் மாணவர்கள் சமூக ஊடகங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் சூழலில், இவர்களின் இன்ப-துன்பங்களை முதிர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளச் செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இத்தகைய நிலையில் ஆற்றுப் படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கவும், மகிழ்வுடன் கல்வி கற்கவும் சூழல்கள் உருவாக்கப்படுகின்றன.

ஏழை, ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பு

புதுவையிலும், தமிழகத்திலும் இயங்கி வரும் காப்பகங்கள் மற்றும் உள்விடுதிகள் வழியாக, பல நூறு மாணவர்கள் வந்து தங்கி கல்வி, கலைகள், ஆன்மிகச் சிந்தனைகள், ஒருங்கிணைந்த ஆளுமைப் பயிற்சிகள் பெற்றுத் தரமான மாணவர்களாக உருவாக்கப் படுகின்றனர். பாதுகாவலர் புனித அலோசியஸ் கொன்சாகாவின் விழா நாளில் குழந்தைகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காகஒரு ரூபாயும், 12  மெழுகுவர்த்திகளும் காணிக்கை கொடுக்க வேண்டும்என்று திட்டம் வகுத்து செயல்படுத்தினர். தந்தை இறந்த பிறகு அவரின் இறப்பு நினைவு நாளில் நவம்பர்  3 அன்று, காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் 10 ரூபாயும், மெழுகுவர்த்தியும் காணிக்கை கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது. ஆண்டுதோறும் நிறுவனர் தந்தை யின் இறப்பு தினத்தை நினைவுகூரும் நாளில் (நவம்பர் 3)  குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு காப்பகமாக பல கருத்தரங்குகள், பயிற்சிகள், போட்டி கள் நிகழ்த்தி, சிறப்புப் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

அன்சால்தோ வாழ்ந்த காலத்தில் குழந்தை களுக்காக அவர் செய்த செயல்பாடுகளை நாடகமாக, நாட்டியமாக, பாடல்களாக விளக்கி, தந்தையின் பணியை மாணவர்கள் மனதில் விதைக்கின்றனர். குழந்தைகளின் ஆன்ம ஈடேற்றத்திற்கும், கல்வி-கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கவும் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றன. காப்பகங்களில் தங்கிப் படித்த பல மாணவி யர் இன்று சமூகத்தில் ஆசிரியர்களாக, பேராசிரி யர்களாக, மருத்துவத் துறையில் வல்லுநர்களாக, சிறந்த நிர்வாகிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் பார்க்கும்போது அன்சால்தோ விரும்பிய குழந்தைகளைப் பராமரிக்கும் பணி இன்றும் தொடர்கின்றது. சபை தொடங்கியவரின் உள்ளுயிர், திட்டம் மற்றும் மரபுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சகோதரிகள் தங்களின் உள்ளுயிரை வாழ்வாக்குகின்றனர்.

முதியோர், கைவிடப்பட்ட பெண்கள், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோர்க்கு ஆதரவாக

வில்லியனூர் செயின்ட் லூயிஸ் முதியோர் இல்லத்தில் சமூகத்தில் யாராலும் பராமரிக்க முடியாத முதியவர்களை வைத்துப் பராமரிக்கின்றனர். புளிச்சபள்ளம் எழுச்சி மையத்தில் தையல், கணினிப் பயிற்சி மற்றும் ஏழைப் பெண்களைக் கொண்டு மிதியடி தயாரிப்பது, பள்ளி பைகள் தைப்பது  போன்ற கலைகள் கற்றுத் தரப்பட்டு வாழ்வாதாரத்தைப்  பெருக்க உதவி செய்கின்றனர்.

கெங்கப்பட்டு என்னும் பணிதளத்தில் Michael Ansaldo self development center  வழியாக ஆண்டுதோறும் 50 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி, தையல் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு அரசு சான்றிதழும் பெற்றுத் தரப்படுகின்றன. இதனைக் கொண்டு பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

கள்ளக்குறிச்சி பணித்தளத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தோடு இணைந்து, சலோம் சமூகப் பணி மையத்தின் வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஏழைப் பெண்களுக்குத் தையல் இயந்திரம், சலவைப்பெட்டி  பெற்றுக் கொடுக்கப்பட்டது. பினாயில், சலவைத்தூள், மெழுகுதிரி போன்றவைகள் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இவற்றின் வழியாக, தந்தை அவர்களின் கனவு நனவாகின்றது என்பதைக் கண்கூடாக அறிய முடிகின்றது.

நலவாழ்வு பணி

இயேசுவின் குணமளிக்கும் பணியைத் தன் வாழ்வின் மேல்வரிச் சட்டமாகக் கொண்ட நிறுவனர் தந்தை செய்த பணிகளைச் சகோதரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். நலவாழ்வு பணித்தளங்களில் உடலாலும், மனதாலும்  பாதிக்கப்பட்டவர்களுக்குப் புனித அலோசியஸ் கொன்சாகா மற்றும் பிரான்சிஸ் அசிசி வழியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு அலோபதி, இயற்கை வைத்தியம், அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற மருத்துவச் சிகிச்சை முறைகள் நடைபெறுகின்றன

நிறைவாக:

இயேசு விரும்பிய இலட்சியப் பணியை இம்மண்ணில் விதைத்த எம் நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்களின் கனவு மெய்ப்பட உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளையும், சகோதரிகளின் பணியால் பயன்பெறும் நல்லுள்ளங்களையும் நினைத்து, பெருமிதம் அடைகின்றோம். நிறுவனரின் தேடல் பணியை இன்னும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி, அனைத்து நிறுவனங்களும் நிறுவனர் விரும்பும் அதே பணியை இன்னும் வீரியமுடன் செய்ய இறையருள் துணைபுரிவதாக!

 

Comment