No icon

‘அடுப்பே கதி’

வலுவிழந்த மக்களுக்கு வலுவூட்ட…

 “உலகெங்கும் சென்று படைப்புகளுக்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற்கு 16:15) என்ற அன்புக் கட்டளையைக் கொடுத்துச் சென்றார் இறைமகன் இயேசு. இயேசுவின் இந்த அன்புக்  கட்டளையை மனதில் இருத்தி, இத்தாலிய தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்து, இயேசுவின் அன்பு இத்தகையது என்பதைத் தன் பணி வாழ்வில் வாழ்ந்து காட்டியவர் இறைப்பணியாளர் தந்தை மிக்கேல் அன்சால்தோ. அவர் காட்டிய வழியில், வருங்காலச் சமுதாயத்தை மாற்றி எழுதும் அறிவுத் திறன் இன்றையப் பெண் குழந்தைகளிடம்தான் உள்ளது என்பது கொன்சாகா சபை அருள்சகோ தரிகளின் கணிப்பு, காலத்தின் எதிர்பார்ப்பு.

எளியவர்களின் இறைதூதனாய்...

அன்றையச் சமூகத்தில் நிலவிய கடுமையான போர், அதில் தம் சொந்தங்களை இழந்த குழந்தைகள், பெண்கள், ஆதரவற்ற அனாதைகள் ஆகிய அனைவரின் அடைக்கலமாய், ஆறுத லாய் மாறினார் தந்தை மிக்கேல் அன்சால்தோ. வறுமை ஒரு பக்கம்; சமூதாயத்தில் சாதியக் கொடுமைகள் மறுபுறம் என ஒடுக்கப்பட்ட தலித் ஏழைப் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வே ஒரு கேள்விக்குறியாய் மாறியிருந்த அத்தகைய சமூகத்தின் கலங்கரை விளக்காய், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, எளியவர்களாம் இவர்களின் இறைத்தூதனாய் இறைவனால் அனுப்பப்பட்டவர்தான் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ.

புனித பவுலடியாரின் மன உறுதியைப் போன்று, “வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; சாவது எனக்கு ஆதாயமேஎன்ற உறுதியுடன் தன் பணியைத் துவங்கினார் புதுச்சேரி மண்ணில்.

இவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி...

புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் நிறுவனர் தந்தை இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்கள் கொண்டிருந்த அதே மறைபரப்புப் பணி ஆர்வம் எம்மிலும் பற்றி எரிகிறதுஇருநூறு ஆண்டுகளுக்கும் மேலாய் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் பணி செய்து வந்த அருள்சகோதரிகளை இந்தியா முழுவதிலும் பணி செய்யவும், குறிப்பாக சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் மலைவாழ் மக்கள், ஏழைகள் மத்தியில் அர்த்தமான பணி ஆற்றவும் சபை பொதுப் பேரவையில் முடிவு செய்து, சகோதரிகளை இந்தியாவின் வட மாநிலங்களுக்கு அனுப்பினர்.

முதன் முதலாய் குஜராத் மாநிலத்தில் தங்கள் காலடிகளைப் பதித்த சகோதரிகள், பத்து வருடங்களுக்குள் இந்தியாவின் பல வட மாநிலங்களுக்கும் சென்று காலடிப் பதித்து அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகின்றனர்.

நற்செய்திப் பணியின் தூதுவர்களாய்...…

எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்க, நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன்”  என்ற தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்கேற்ப, சகோதரிகள் தந்தை மிக்கேல் அன்சால்தோவின் தீராத நற்செய்தி வேட்கையைத் தமதாக்கிக் கொண்டு, வீடுகளைச் சந்திப்பது, நோயாளிகளைச் சந்தித்து ஜெபிப்பது, ஆறுதலளிக்கும் இறைவார்த்தைகளால் அவர்களின் மனக்காயங்களை ஆற்றி, கிறிஸ்துவின் சீடர்களாக்கி நற்செய்திப் பணியைச் சிறப்புடன் ஆற்றி வருகின்ற னர். எதிர்ப்புகள் மத்தியிலும், இந்துத்துவா ஆதிக்கத்தின் மத்தியிலும், துணிவுடன் இறைபணி ஆற்றி தந்தை மிக்கேல் அன்சால்தோவின் கனவுகளை நினைவாக்கி வருகின்றனர்.

கிறிஸ்துவைப் பற்றிப் பேசவே முடியாத வட மாநிலங்களில், தங்கள் பணிவாழ்வினால் கிறிஸ்துவை அறிவித்துச் சான்று பகர்கின்றனர் நம் சகோதரிகள். இயேசுவை இன்னும் அறிந்து கொள்ளாத எத்தனையோ மக்கள் உள்ளனர். எனவே, வட மாநிலங்களில் அதிகமாக நற்செய்திப் பணி தேவைப்படுகிறதுஆம், தந்தை மிக்கேல் அன்சால்தோ கொண்டிருந்த தீராத நற்செய்திப் பணி ஆர்வம், முன்பின் தெரியாத இந்திய மண்ணிற்கு அழைத்து வந்தது. புதிய மொழி, கலாச்சாரம், உணவு முறைகள் அத்தனையையும் அவர் தனதாக்கி, இந்திய மக்களைத் தன் மக்களாகக் கருதி அவர் ஆற்றிய நற்செய்திப் பணியைப் போன்று எம் சகோதரிகள் முன் பின் தெரியாத வட மாநிலங்களுக்குச் சென்று அவர்களில் ஒருவராக மாறி, அவர்களின் மொழி, கலாச்சாரம், உணவு முறைகள் அத்தனையையும் தங்களுடையதாக்கி அவர்கள் கிறிஸ்துவை கண்டு கொள்ள உழைத்து வருகின்றனர். வட இந்தியாவில் 15 குழுமங்கள் உள்ளன. சகோதரிகள் பங்குப் பணி மற்றும் மறைக்கல்வி வழியாக இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு, பெண்களுக்கு, முதியவர்களுக்கு நற்செய்திப் பணியாற்றி வருகின்றனர்.

சமுதாய மாற்றுப் பணி...

வட மாநிலத்தில் காலடிப் பதித்த நாள்முதல் குஜராத்தில், மெசானா என்ற ஊரில் அளப்பரிய சமுதாயப் பணிகளும், சமுதாய மாற்றுப்பணிகளும் செய்து வருகின்றனர்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்ற அவல நிலை இந்த 21-வது நூற்றாண்டிலும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட ஏழைகள் அனைவரையும் இனம் கண்டு, குறிப்பாக படிப்பறிவில்லாத பெண்கள், வீட்டை விட்டு வெளியில் அதிகமாக வராத கைம்பெண்கள், கைவிடப்பட்ட விதவைகள், வெளி யுலகம் அறியாத இளம் பெண்களை ஒன்றுகூட்டி, அவர்களின் சக்தியை உணரச் செய்து சாதனை படைக்கின்றனர். ‘அடுப்பே கதிஎன்று கிடந்த பெண்களுக்குப் பல பயிற்சிகள் மூலம் சுய தொழில் கற்றுக்கொடுத்து, சுயமாகச் செயல்பட வழி வகுத்துள்ளனர்.

அழகுப் பொம்மைகள் செய்வது, பை தைப்பது, தையல் பயிற்சி வகுப்புகள், அழகு நிலையப் பயிற்சி, சமையல் கலை, மெழுகுவர்த்தி செய்வது போன்ற கணக்கிலடங்காத அரும்பெரும் பணிகள் ஆற்றி வருகின்றனர்அது மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி தந்தை மிக்கேல் அன்சால்தோவின் நினைவு நாளை, கைம்பெண்கள் தினமாகக் கொண்டாடி தந்தை அன்சால்தோவின் கனவுகளை நனவாக்கி வருகின்றனர்வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த கைம்பெண்களும், கைவிடப்பட்ட பெண்களும் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி, பெண்களின் மாண்பு மிளிர பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியன்று பெண்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தலைநிமிர்ந்து கூட நடக்காத பெண்கள், ஆண்களைக் கண்டால் தலையையும், முகத்தையும் முந்தானையால் மறைத்துக் கொள்ளும் பெண்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்பதும், நடப்பதும், தங்கள் சொந்தக் காலில் நின்று தன் குடும்பத்திற்காய் உழைப்பதும் பெண்களை மேம்பாடு அடையச் செய்து, தரணியில் தரமோடு வாழ பயிற்சி கொடுக் கின்றனர்.

மறைமாவட்டச் சமுதாயப் பணி இயக்கங்களோடு இணைந்து பல பயிற்சி வகுப்புகள், கைத்தொழில் வகுப்புகள் மற்றும் பெண்கள் குழுக்கான சிறுசேமிப்புத் திட்டத்தை உருவாக்கி (Self help groups) குடும்பங்களில் அவசரத் தேவைகளில் உதவும் திட்டத்தை சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் மத்தியில்  சமுதாய முன்னேற்றப் பணிகளைத் திறம்படச் செய்து தடம் பதித்து வருகின்றனர். வயலும், வீடும் என்றிருந்த மலைவாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப் படுத்தி, தங்கள் சொந்தக் கால்களில் நிற்க தையல் பயிற்சி அளித்து, தங்கள் வயல்களில் பயிரிட விழிப் புணர்வும், வருவாய் பெருக்க வழிமுறைகளையும் கற்றுத்தருகின்றனர். அதேபோன்று மேற்கு வங்காளம் (அம்மத்பூர்) ஜார்கண்ட் (தும்கா) போன்ற இடங்களிலும் மலைவாழ் மக்களிடையே பணியாற்றி வரும் சகோதரிகள், சந்தாலி மக்களின் குழந்தைகளின் கல்வியில் அதிக ஆர்வம் காட்டி, விடுதிகளில் இருக்கும் இந்தச் சந்தாலி இனக் குழந்தைகளுக்குக் கல்வியறிவை ஊட்டுகின்றனர். தந்தை மிக்கேல் அன்சால்தோவின் கனவு இன்று பல அருட்பணிகள் மூலம்  நனவாகி வருகின்றது.

கல்விப்பணி

வட மாநிலங்களில் இயங்கிவரும் பெரும் பாலான குழுமங்கள் கல்விப்பணியை மையமாகக் கொண்டிருக்கின்றன. கல்வியால்தான் பெண்ணினம் சமுதாயத்தில் மாண்புடன் வாழ முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தின தந்தையின் பணியைத் தொடர்ந்து கல்விப்பணி ஆற்றி வருகின்றனர்.

அகமெத்பூர், பசோனி, குர்ஜி, போபால், ஜாஜ்ஜர் (டெல்லி), துதி, தும்கா, பகாடிய, டுங்கர்பூர், காசிப்பூர், கிரோலி (ஆக்ரா), கோடார், மெசானா, லின்ச் (மெசானா), நானிசிங்கிலோட்டி ஆகிய அனைத்து இடங்களிலும் சிறப்பாக கல்விப்பணி செய்து வருகின்றனர்.

இந்த இடங்களில் பெரும்பாலான குழந்தைகள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்  மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளே கல்வி பயில்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் தீபங்களாய் மறைமாவட்ட மற்றும் இயேசு சபைக் குருக்களோடு கரம்கோர்த்து தரமான கல்வியை அளித்து வருகின்றனர் எம் அருள்சகோதரிகள். விடுதிகளில் தங்கும் மாணவர்கள் கல்வி-கேள்வி ஒழுக்கங்களில் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கின்றனர்.

நலப்பணி...

நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்”…(எரேமியா 30:17) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்தவர் தந்தை மிக்கேல் அன்சால்தோ அவர்கள். நம் தந்தை அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றுபவர்களாய் சகோதரிகள் குர்ஜி (பாட்னா) பகாடியா மருத்துவ மனையில் பிற சபை சகோதரிகளோடு இணைந்து மருத்துவப் பணியைத் திறம்படச் செய்கின்றனர். அவர்களின் பணிவும், கனிவான அன்பும் மக்களுக்கு நலம் அளிக்கிறது இது நம் தந்தையின் அன்பான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.

நிறைவாக...

தந்தை மிக்கேல் அன்சால்தோ இறைப்பணியில் கொண்டிருந்த தணியாத ஆர்வம் அவரை எளியவர் களின் இறைதூதனாய் ஆக்கியது. விளிம்பில் வாழ்ந்தவர்களின் விடிவெள்ளியாக்கியதுஅவரின் அடிச்சுவட்டை உறுதியாய் பின்பற்றி, தந்தை அவர்கள் தொடங்கிய பணிகளுக்கு இன்னும் சிறப்புறப் பணியாற்றி, இறைவனுக்கும், எம் இறை ஊழியர் மிக்கேல்  அன்சால்தோவுக்கும் இணை யில்லா புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் எம் அருட்சகோதரிகள்

இறை இயேசுவின் பெயரை இன்னும் அறியாத பலருக்கும், இறையன்பைச் சுவைக்காத மலைவாழ் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட- விளிம்பிற்குத் தள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அனைவருக்கும் தங்கள் ஓயாது உழைப்பினால் தந்தைக்கு பெருமையும், ஒருபோதும் அழியாத புகழையும் கொன்சாகா குடும்பத்திற்குச் சேர்த்து வருவது எம் அருள்சகோதரிகளின் பணிகளே.…

வட மாநிலங்களில் அருள்சகோதரிகளின் இறைபணி தொடர்ந்து வலுப்பெற நாம் நம் ஜெபங்களை  உரித்தாக்குவோம்!

 

Comment