இவர்களால் முடிந்தது என்றால்…!
திருப்பிக் கொடு
- Author முனைவர் அ. மரிய தெரசா --
- Thursday, 29 Jun, 2023
அது இன்றைய, நேற்றைய செய்தி அல்ல; காலங்காலமாக ஏதோவொரு வடிவத்தில் காட்சியாக, சொல்லாக, செயலாக, எழுத்தாக நம்மை வந்தடையும் சாதாரண, ஆனால், உள்ளத்தின் உள் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் செய்தியே!
இவ்வுலகில் பிறந்த யாராக இருந்தாலும் தனித்து வாழ்ந்துவிட முடியாது. அனைத்துத் திறமைகளும் இருந்தாலும், தானாகவே அனைத்துக் கடமைகளையும் முடித்துவிடவும் இயலாது. தங்கத்தட்டில் சாப்பிடும் சீமானாக வாழ்ந்தாலும், வெள்ளிக் கரண்டியோடு அவதரித்திருந்தாலும் தேவை என்ற ஒன்று, அல்லது பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அனைவருக்கும் வரும். அரசனாக அரியணையில் அமர்ந்திருந்தாலும், ஆண்டியின் உதவி தேவைப் படும். படிப்பறிவு இல்லாதவனின் பட்டறிவும், ஞானம் பெற்ற படித்தவனுக்கும் பாடம் சொல்லும்.
ஏதோ ஒருவிதத்தில், யாரோ ஒருவரிடமிருந்து, ஏதாவதொன்றை நாம் பெற்றுக்கொண்டும், பயன்படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றோம். ‘நான் என் சுய காலில் நிற்கின்றேன், எனக்கு யாரும் உதவி செய்யவில்லை; நானாகவேதான் இந்த உயரத்துக்கு வந்தேன்’ என்று சொல்பவனிடம் கூட, பூமி அமைதி காக்கின்றது. ஆனால், ஆச்சரியப்படுமாம்! ‘அட முட்டாளே! நான் சற்று அசைந்தால் உன் நிலை என்ன ஆகும்!’ எனப் பூமி அவனிடம் கேட்பதில்லை. இதுதான் நமக்கும், இயற்கைக்குமுள்ள வேறுபாடு.
திருவிவிலியம் கற்றுத்தரும் பாடமும் இதுதான்: ‘கொடு; திருப்பிக்கொடு; கொடுப்பவற்றை நல்லவையாகக் கொடு; முழு விருப்பத்தோடு கொடு; கிடைத்ததில் கொடு; அப்போது கொடுத்த அளவுக்கு அல்ல; இன்னும் அதிகமாகவே திரும்பும்!’
தன்னைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியவனுக்குச் சுவையான பழத்தைக் கொடுக்கிறது மரம்!
தன்னை வெட்டித் துன்பப்படுத்தியவனுக்கு இனிப்பான இளநீரைத் தருகிறது தென்னை!
தன்னை ஆயுதத்தால் ஆழத் தோண்டியவனுக்குத் தாகம் தீர்க்க தண்ணீரைப் பரிசளிக்கிறது பூமி!
தனக்குக் கரியமில வாயுவைத் தருபவனுக்கு, பிராண வாயுவைத் தாரைவார்க்கிறது காற்று!
பெறுவதும்-கொடுப்பதும், கொடுப்பதும்-பெறுவதும் இயற்கையின் இயல்பு. நமது இயல்பும் இப்படிப்பட்டவையாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வப்போது நாம் மிகவும் தேவையானவற்றை மறந்து விடுகின்றோம். இல்லை, இல்லை, மறந்ததாக நடிக்கின்றோம். தூங்குபவனை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்பவே முடியாது என்பர். இதைப்போல, பெற்றுக்கொண்டதைத் திரும்பக் கொடுக்குமாறு நினைவூட்டலாம். மறந்துவிடுவதைப் போல நடிப்பவரை நாம் மாற்றிவிடுவது அதிக சிரமம்.
இப்படி மறப்பவர்போல் நடிப்பவர்களால்தான் முதியோர் இல்லங்கள் கூடுகின்றன; அனாதை ஆசிரமங்கள் பெருகுகின்றன; உண்பதற்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையும், தெருக்களில் அலைபவர்களின் கூட்டமும் அதிகரிக்கின்றன. இவை திருப்பிக் கொடுக்க மனம் இல்லாதவர்களால் சமுதாயத்தில் உருவாகும் மறைமுகப் பிரச்சினைகள். எந்த ஒரு செயலும் அதற்கான பின்விளைவைக் கொண்டிருக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
‘திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்ற தாரக மந்திரத்தை எண்ணிப் பார்க்கும் அளவுக்கு ஏதாவதொரு செய்தி அல்லது நிகழ்வு எப்போதாவது வெளிச்சத்துக்கு வருவதுண்டு. அப்படி வெளிப்படும் நிகழ்வுகள் பலருக்கும் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கப் பயன்படும், அக்னி குஞ்சாகவும் இருக்கும்.
நற்செய்திகள், நற்காரியங்கள், நல்வார்த்தைகள், அறநெறிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை முறைகள் பிறருக்குப் பயன்படுவதோடு பலமடங் காகப் பெருகி, அதனதன் இடங்களுக்கும், செய்தவர்களுக்கும் திருப்பி வரவும் செய்யும். இவற்றின் இயல்புகள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்டவற்றை நாம் வெளியே சொல்லாமல் இருந்தாலும், மூடி மறைத்தாலும், விளம்பரப் படுத்தாமல் இருந்தாலும், என்றேனும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ‘வெளிப்படா மல் மறைந்திருப்பது எதுவுமில்லை’ என்ற இறை வார்த்தை எப்படிப் பொய்யாகும்?
பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு ஒன்றைச் செய்தித்தாளில் வாசிக்க நேர்ந்தது. பத்திரிகைகளிலும் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும் வைரலான செய்தி இது. நீங்களும் இதை வாசித்திருக்கலாம்.
கேரள மாநில கோழஞ்சேரியைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயதான ஆட்டோ ஓட்டுநரிடம், ஐம்பத்து இரண்டு வயதான ஒருவர் ஓர் உறையைக் கொடுத்து “இது உங்களுக்கானது” என்றார். உறையைப் பிரித்துப் பார்த்தவர் அதிர்ந்தார். ஏனெனில், அந்த உறையில் அதிகப் பணம் இருந்தது. அப்போது அந்தப் புதிய நபர் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைக் கூறினார்.
“நான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். 1993 ஆம் ஆண்டு, நான் பி.எட். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நண்பன் வீட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது, பேருந்தில் செல்ல மட்டும் என்னிடம் பணம் இருந்தது. அன்று பேருந்து வராததால் ஆட்டோவில் செல்லத் தீர் மானித்து, உங்களை அணுகினேன். அன்றைய ஆட்டோ கட்டணம் நூறு ரூபாய். என்னிடம் பணம் இல்லை. பின்னால் வந்து தருவதாகக் கூறினேன். என்னை நம்பி உங்கள் ஆட்டோவில் என்னை ஏற்றிச்சென்றீர்கள். இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களைச் சந்திக்க முயன்றேன், முடியவில்லை. முப்பது வருடங்கள் கடந்து விட்டன. இது உங்களுக்கானது, பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். ஆட்டோ ஓட்டுநர் அந்த உறையைப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஆசிரியர் அஜித்தின் விடாப்பிடியான கட்டாயத்தால் ஆட்டோ ஓட்டுநர் பாபு அதை ஏற்றுக்கொண்டார். திருப்பிக் கொடுத்தது ரூபாய் பத்தாயிரம்!
பெற்றுக்கொள்வதும், கொடுப்பதும் இயற்கையின் இயல்பு. அதுவே இறைவனின் இயல்பும்கூட. பெற் றுக்கொண்டதைத் திருப்பிக் கொடுக்க இயற்கை என்றுமே மறுப்பதில்லை; மறப்பதுமில்லை. நினைவூட்டப்பட வேண்டிய தேவையும் அதற்கு இல்லை. கெட்டவற்றை, பயன்படாதவற்றைக் கொடுத்தால் கூட, தன்னிடமுள்ள நல்லவற்றையும், பயன்பாடு உள்ளவற்றையும் மட்டுமே திருப்பிக் கொடுக்கும். பெற்றுக்கொண்ட அளவைவிட, அதிகமாகவே கொடுக்கும். தனக்கு எனச் சேர்த்து வைக்காமல், தான் பயன்படுத்தாமலே பிறருக்குக் கொடுப்பது இயற்கை மட்டுமே!
தனது கனிகளை மரங்கள் உண்பதில்லை;
தனது நீரை நதிகள் குடிப்பதில்லை;
தனது பூக்களைச் செடிகள் முகர்வதில்லை;
தனது அழகை இயற்கை விளம்பரப்படுத்துவதில்லை!
இயற்கையில் நாம் காணும் மரம், செடி, கொடி அனைத்துமே தம்மிடம் இருப்பவற்றை எந்த வடிவத்தில், எந்த வண்ணத்தில், எந்த அளவுகளில், யார் யாருக்குக் கொடுக்க வேண்டுமோ சத்தமில்லாமல், அடுத்த இலைக்குக் கூட சொல்லாமல் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. நாமும் இயற்கையின் அங்கங்களே! பெற்றுக்கொள்வதில் உரிமைகளை நிலைநாட்டும் நாம், திருப்பிக் கொடுப்பதற்கும் கடமைப்பட்டவர்கள் என்பதை மறத்தலாகாது.
திருப்பிக் கொடு, அந்த இயற்கையைப் போல!
திருப்பிக் கொடு, அந்த ஆசிரியரைப் போல!
(தொடரும்)
Comment