கண்டனையோ, கேட்டனையோ…
13-வது திருத்தூதர்
- Author ஜார்ஜி --
- Thursday, 29 Jun, 2023
“என்ன? இன்னும் நீ ‘ஹோலி லேண்ட்’ போனதில்லையா?” என்று பலர், பல இடங்களில், பல தினுசுகளில், பல அளவுகளில் புருவங்களை உயர்த்திக் கேட்டதால் உசுப்பேற்றப்பட்ட நான், இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் குரு ஒருவரின் ஆன்மிக வழிகாட்டுதலில் ஏற்பாடாகியிருந்த ‘பேக்கேஜ் டூரில்’ பெயர் கொடுத்து, முன்தொகை செலுத்தி இஸ்ரயேல் நாட்டு ‘குழு விசா’ (GroupVisa) பெறுவதற்குத் தேவை யான ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு உள்ளூர், அசலூருக்கெல்லாம் போய் ‘நான் ஹோலி லேண்ட் போறேன், ஹோலி லேண்ட் போறேன்’ என்று அறிவிக்க, பாசக்கார ஊர்ப் பையன்கள், ‘எங்கள் தானைத் தலைவன், செம்மனச் செம்மலு டைய புனித பூமி திருப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என்று ஆங்காங்கே பேனர்கள் வைத்து விட்ட நிலையில்... ஒரு நாள் பிற்பகல், பயண ஏற்பாடுகள் செய்யும் முகவர் அலுவலகத்திலிருந்து என்னை செல்போனில் அழைத்து, “மன்னிக்க வேண்டும். நாங்கள் குழு விசாவிற்காக விண்ணப்பித்த 50 பேரில், நான்கு பேருடைய விண்ணப்பங்களை இஸ்ரயேல் தூதரகம் நிராகரித்து விட்டது. அதில் ஒன்று உங்களுடையது” என்றார்கள்.
50 பேரில் ஒரே ஒருவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் கூட, அது என்னுடையதாகவே இருக்கும். எனது சாதகம் அப்படி!
“காரணம் எதுவும் சொன்னார்களா?” என்றேன்.
“இல்லை. ஆனால், நாற்பது வயதுகளில் இருப்பவர்கள், அதுவும் திருமணம் ஆகாத, தனிப் பயணிகளின் விண்ணப்பங்களைக் கம்ப்யூட்டரே நிராகரிக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன” என்றார்கள்.
“ஏன்?”
“அவர்களில் சிலர் திரும்பி வராமல் இஸ்ரயேல் நாட்டிலேயே தங்கி விடுகிறார்கள்.”
‘Bad record’ என்று தூதரக அலுவலக மொழியில் சொல்வார்கள். சுற்றுலா விசாவில் சென்று, அங்கேயே தங்கிவிடும் குற்றச் செயல் அடிக்கடி நடக்கும்போது, அதிகாரிகள் உஷாராகி, இதை யார் செய்கிறார்கள் எனக் கண்காணித்து, தரவுகளை அலசி, அதில் தொடர்ந்து ஈடுபடும் இன, மொழி, பகுதி, வயது, வாழ்நிலைக்காரர்களைத் தனிமைப்படுத்தி ‘red flag’ செய்தபின், பிறகு அது போன்ற பின்னணி கொண்ட ஆசாமிகள் விண்ணப்பிக்கும்போது, கணினியே அவற்றை நிராகரிக்கும்படி மென்பொருள் அமைப்பது சுலபம்.
“இப்போது என்ன செய்வது? ஏதேனும் மாற்று வழிகள் உண்டா?” என்று கேட்டேன்.
“உங்களைப் போன்றவர்கள் குழுவோடு இல்லாமல், தனி விசாவாக விண்ணப்பிப்பதுதான் நல்லது” என்ற அரிய ஆலோசனையை அகாலமாக வழங்கினார்கள்.
எதற்கும் மனம் தளராத விக்ரமாதித்யனான நான், தனி விசாவிற்கு விண்ணப்பிப்பது என்று முடிவெடுத்து திரும்பவும் முதலிலிருந்து துவங்கினேன். மறைமாவட்டத்திலிருந்து அனுமதிக் கடிதம் பெற்று, தூதரக இயக்குநருக்கு ஒரு விரிவான மடல் எழுதி, அதில், ‘இதுபோல... நான் ஒரு கத்தோலிக்கக் குரு. திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை. நான் மட்டுமல்ல. என்னைப் போன்று, உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான எனது கட்சிக்காரர்கள் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள். 2000 வருடங்களாக நாங்கள் இப்படித்தான் இருக்கிறோம். எனக்கு உங்கள் நாட்டில் தங்கும் எந்த உத்தேசமும் இல்லை. நான் இங்கே ஒரு பெரிய பங்கில் (மொத்தம் 150 சொச்சம் குடும்பங்கள்) பணி செய்கிறேன். நான் கட்டாயம் திரும்பி வர வேண்டும். நான் வந்து நற்செய்தி அறிவிக்காவிட்டால், இங்கு நடந்து கொண்டிருக்கும் இறையரசு கட்டுமானப் பணி பாதியிலேயே நின்று, தமிழ்நாடு திருஅவை ஸ்தம்பித்து நிற்கக்கூடிய ஆபத்துள்ளது...” என்றெல்லாம் அழுத்தமாக எழுதி, எனது காலாவதியான மற்றும் நடப்பில் உள்ள கடவுச் சீட்டுகள், பயண வரலாறு, பான் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பால் அட்டை என இருக்கின்ற எல்லாவற்றையும் இணைத்து அனுப்பி வைத்தேன்.
என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பெங்களூரு, மர்ஃபி ரோட்டில் இயங்கும் இஸ்ரயேல் தூரகத்திற்கு ஏப்ரல் மாதம் வேலை நாட்களை விட விடுமுறை நாட்கள் அதிகம். கிடைத்த சொற்ப அவகாசத்தில், அதிகாரிகள் என் மீள் விண்ணப்பத்தை ஆராய்ந்தார்கள். போனில் அழைத்து, நான் கொடுத்திருந்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பிறகு இன்னும் சில நாள்கள் யோசித்தார்கள். கடைசியாக, மிகக் கடைசியாக, ‘போய்த் தொலை’ என்று ‘Single Entry’ எனப்படும் ஒரு நுழைவு மற்றும் 10 நாள்கள் அனுமதி கொண்ட, B/2 வகை சுற்றுலா விசாவை ஆங்கிலத்திலும், எபிரேயத்திலும் அச்சடித்து, துணை அதிகாரி, லிமோர் ப்லெட்டெரின் கையெழுத்தோடு தூதரகம் எனது கடவுச் சீட்டை, பெங்களூர்வாசிகள் சொல்வதுபோல, ‘அராம்சே’ விடுவிக்க, அது எனது முகவரின் கைக்கு வந்து சேர்ந்த போது, நான் சேர்ந்து போக வேண்டிய சுற்றுலாக் குழுவினர் இஸ்ரயேல் போய், இரண்டு முழு நாள்கள் ஆகியிருந்தன. Many a slip between the cup and the lip!
1924 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்திற்குப் பயணப்படவிருந்த ஆங்கிலேய மலையேற்றக்காரர் ஜார்ஜ் மல்லோரியிடம் பத்திரிகையாளர்கள், “ஏன் நீங்கள் எவரெஸ்ட்டிற்குப் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அவர், “Because it is there” என்று சொன்னாராம்.
“ஏனென்றால் அது அங்கே இருக்கிறது!!”
புனித பூமி குறித்து அப்படிச் சொல்லிவிட முடியாது எனத் தோன்றுகிறது. அங்கு போவதற்குக் காலமும், சூழலும் கனிய வேண்டும் போல! நான் காத்திருக்கிறேன்!
புனித பூமிக்குப் போகும்போது, அங்கே கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் என்று நான் தயாரித்திருந்த விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது கலிலேயக் கடல். அதை நீங்கள் ‘கடல்’ என்றும் சொல்லலாம், ‘காதல்’ என்றும் சொல்லலாம் (‘அப்பா, k... a... d... a.. l... கடலா? காதலா?’ என்று ஒரு சிறுமி ரேடியோவில் கேட்கும் பழைய ஷாம்பூ விளம்பரம் யாருக்காவது ஞாபகம் வந்தால், நீங்கள் நாற்பதைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஒரு நடை ஆஸ்பத்திரிக்குப் போய் சுகர் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்)
‘கினரேத்து’ கடல் (எண் 34:11), ‘திபேரியக் கடல்’ (யோவான் 6: 11), ‘கெனசரேத்து ஏரி’ (1 மக் 11: 67; லூக்கா 5: 1) என்று பல பெயர்களில் இது விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. சில இடங்களில் எந்தப் பெயரும் இல்லாமல் வெறும் ‘ஏரி’ அல்லது ‘கடல்’.
கலிலேயக் கடல் உண்மையில் கடல் அல்ல; அது நல்ல தண்ணீரால் ஆன ஒரு பெரிய சைஸ் ஏரி! 13 மைல் நீளம், 8 மைல் அகலம், 32 மைல்கள் சுற்றளவு கொண்ட அதன் பரப்பில், இன்றைக்கு ஷாப்பிங் மால், தியேட்டர் சகிதம் ஒரு பெரிய நகரை நிர்மாணிக்கலாம். மேலிருந்து பார்க்க, கலிலேயக் கடல் பக்கவாட்டில் கிடக்கும் ‘யாழ்’ இசைக்கருவி போன்ற தோற்றம் கொண்டது. அதிலிருந்தே ‘கினரேத்து’ என்ற பெயர் வந்தது. எபிரேயத்தில் ‘கினரேத்து’ என்றால் ‘யாழ்’ என்று பொருள். கலிலேயக் கடலில் 40 வகையான மீன்களும், 16 மீன்பிடித் துறைகளும் இருந்தனவாம். இங்கு பிடித்த மீன்களை உப்பால் பதப்படுத்தி, மேற்கே அலெக்சாந்திரியாவிற்கும், வடக்கே அந்தியோக்கியாவிற்கும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். கி.பி. 68 இல் நடந்த போரில், 230 மீன்பிடிப் படகுகளில் ஏரியில் மிதந்தபடி யூத வீரர்கள் உரோமையர்களுக்கு எதிராகச் சண்டையிட்டிருக்கின்றார்கள்; ஜெயிக்கவில்லை. முதலாம் நூற்றாண்டு யூத வரலாற்றாசிரியர் ஜோசெஃபுஸ், கலிலேயக் கடல் இயற்கையின் ‘ஆகப்பெரிய சாதனை’ (Nature's Ambition) என்று சொல்வதைச் சற்று தயக்கத்தோடு ஏற்றுக் கொள்ளலாம்.
கலிலேயக் கடல் இயேசுவின் பணி வாழ்க்கையின் ஒரு முக்கியக் களனாக இருந்திருக்கிறது. இதன் ஓரத்தில் இருந்த கப்பர்நாகூம் நகர் இயேசுவின் தலைமையகமாகச் செயல்பட்டது. முதல் நான்கு திருத்தூதர்கள் கலிலேயக் கடலோரத்தில்தான் அழைக்கப்பட்டார்கள். ஏறக்குறைய 33 புதுமைகளை இயேசு இங்கு நிகழ்த்தியிருக்கிறார். கடல் மட்டத்திற்கு 700 அடிகள் கீழே உள்ள தாழ்வான இருப்பிடம், எந்தவித பாதுகாப்புமற்று திறந்து கிடக்கும் வடபுறம்; மேற்கே அணைக்கும் மலைச்சரிவு; கிழக்கே செங்குத்தாக 1500 அடிகள் வரை மேலெழும் மலை... என்ற இதன் கலவையான பூகோள அமைப்பினா லும், வடக்கிலிருந்து வரும் ஹெர்மான் மலையின் குளிர்காற்று, வெப்பமாக இருக்கும் யோர்தான் சமவெளிக் காற்றை அடிக்கடி சிநேகமற்றுச் சீண்டுவதாலும், கலிலேயக் கடலின் தட்பவெப்ப நிலை மனைவியின் மனநிலை மாதிரி நேரத்திற்கு நேரம் ‘சட்...சட்’ என மாறி, திடீர் காற்று, திடீர் மழை, திடீர் கொந்தளிப்பு போன்ற முன்னறிவிப்பற்ற உபத்திரவங்களுக்குக் கடல் பயணிகள் தயாராக இருக்க வேண்டும்.
மாற்கு 4: 35-41 இல் விவரிக்கப்பட்டுள்ள இயேசு புயலை அடக்கும் நிகழ்வு இதை உறுதி செய்கிறது. அச்சம், நம்பிக்கை, சமநிலை, இயற்கையின்மீது இயேசுவுக்கு உள்ள அதிகாரம்... என்று பல முனைகளைத் தொட்டுச் செல்லும் இந்தப் புதுமை, இன்றைக்கும் பலரால் விரும்பி வாசிக்கப்படும், விவாதிக்கப்படும் பகுதி. ரெம்பிராண்ட் (Rembrandt) என்கிற பிரபல டச்சு ஓவியர் வரைந்த ‘Christ in the storm on the Sea of Galilee’ என்கிற ஓர் எண்ணெய் ஓவியம் இருக்கிறது. ‘வரலாற்றுப் படைப்பு’ வகைமையில் வரும் இதை ரெம்பிராண்ட் 1633 ஆம் ஆண்டு, தன் 29 வயதில் வரைந்தார். புயலை மட்டும் காட்டாமல், திருத்தூதர்களின் பதற்றமான எதிர்வினைகளையும், இயேசுவின் கவலையற்ற மனநிலையையும், மெல்லிய ஒளிக்கற்றைகளின் வழியாக ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்ட அமைதியையும் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது ரெம்பிராண்டின் மேதைமைக்கு உதாரணம். பேதுருவும், வேறு சிலரும் படகின் பாய் மரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர போராடுகின்றனர். முற்பகுதியில் ஒருவர் படகிற்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுக்கிறார் (பயம்).
ஓவியத்தில் 12-க்குப் பதிலாக 13 திருத்தூதர்கள் இருக்கிறார்கள். ஒரு கையால் கயிறையும், இன்னொரு கையால் தொப்பியையும் பிடித்துக்கொண்டு, ஒவியத்திற்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த 13-வது திருத்தூதர் யார்? ரெம்பிராண்டேதான்! புனித லொயோலா இஞ்ஞாசியார் உருவாக்கி அக்காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த ‘Spiritual Exercises’ பயிற்சிகளின் தாக்கத்தில் ரெம்பிராண்டு இயேசு புயலை அடக்கிய நிகழ்வில் தன்னையும் ஒரு கதாப்பாத்திரமாகச் செருகி, அந்நிகழ்வில் தன் எதிர்வினை என்னவாக இருக்கும் எனப் பரிசோதிக்கிறார்.
இது நம் எல்லாராலும் செய்ய முடிகிற ஓர் எளிய ஆன்மிகப் பயிற்சி!
புனித பூமிக்குப் போய், கலிலேயக் கடலை நேரடியாகத் தரிசிக்க முடிகிறதோ இல்லையோ, இயேசு புயலை அடக்கியது, கடலில் நடந்தது, அப்பங்களைப் பலுக்கியது, திருத்தூதர்களை அழைத்தது, ‘நீ என்னை அன்பு செய்கிறாயா?’ என மூன்று முறை பேதுருவிடம் கேட்டது போன்ற கலிலேயக் கடல் நிகழ்வுகளைக் கற்பனையின் துணை கொண்டு நம் மனதில் மீள் உருவாக்கம் செய்து, அதில் நம்மையும் ஒரு பாத்திரமாக இணைத்து, நிறைய யோசித்து, நிறைய செபித்து, நிறைய தியானித்து... இறுதியில் ‘இயேசுவுக்கு என் எதிர்வினை இதுவே’ என்று தீர்க்கமாகச் சொல்லலாம். அதற்கு அந்தக் கலிலேயக் கடலையே சாட்சியாக வைக்கலாம்.
(இந்த வார கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment