No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம்

முத்துக்குளித்துறை மறைத்தளங்கள்

தூத்துக்குடி

முத்துக்குளித்துறையின் கிறிஸ்தவ வரலாற்றில் தூத்துக்குடிக்கு எப்போதும் தனியிடம் உண்டு. கி.பி. 1534 இல், 20,000 மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகு, முதல் ஆலயம் தூத்துக்குடியில்தான் எழுப்பப்பட்டது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1542 ஆம் ஆண்டு, அக்டோபர் 28, 1544 ஆம் ஆண்டு, மே 14 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய நாள்களில் தூத்துக்குடியில் இருந்ததை அவரது கடிதங்கள் மூலம் அறிய முடிகின்றது. 1544 ஆம் ஆண்டு, மார்ச் 20 அன்று, சவேரியார் தூத்துக்குடி கிறிஸ்தவர்களுக்கு எழுதிய மடலில், “உங்களுக்குப் போர்த்துக்கீசியர்களால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்தவும்” எனக் கூறுகின்றார். இவ்வாறு, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைப் பரிவுடன் பாதுகாத்தார். இதே ஆண்டு செப்டம்பர் 5 அன்று சவேரியார், புன்னைக்காயல் மற்றும் கொம்புத்துறை பட்டங்கட்டிகளுக்குக் கடிதம் எழுதியதில், உணவு, நீரின்றி மடியும் தூத்துக்குடி கிறிஸ்தவர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடியின் புகழ் புனித பனிமய அன்னை ஆலயம், 1603 ஆம் ஆண்டில் நடந்த போரில் தீ வைத்து எரிக்கப்பட, கொதிப்படைந்த மக்கள் 1604 ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகேயுள்ள முயல் தீவில் குடியேறினர். 1606 இல் இயேசு சபையினர் மாதா கோவிலைக் கட்டினர். அது மீண்டும் 1611 இல் இடிக்கப்பட்டது. 1658 இல் டச்சுப் படையெடுப்பின் காரணமாக, புனித பனிமய அன்னையின் சுரூபம் முதலில் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்திலும், பிறகு ஏழு ஆண்டுகள் கொற்கையிலும் பாதுகாக்கப்பட்டு வந்தது. 1707 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 ஆம் நாள் நள்ளிரவில் பங்குத்தந்தை விஜீலியூஸ் மான்சி ஆலயத்தில் தங்கியிருந்த போது, பயங்கர இடி விழுந்தது. பங்குத்தந்தையும், பணியாளர்களும் அன்னை யின் அருளால் காப்பாற்றப்பட்டனர். அன்று முதல்  ‘இடிதாங்கிய மாதா’ என்றே அழைக்கப்பட்டார். 1713 இல் பழைய துறைமுகத்தின் முகத்துவாரத்தில் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம் எழுப்பினர். தூத்துக்குடி, கத்தோலிக்கர், பிரிவினைக் கிறிஸ்தவர்கள் நிறைந்த மாநகராக  திகழ்கின்றது.

புன்னைக்காயல்

கி.பி. 1623 இல், கொச்சி ஆயர் செபஸ்தியான் தெ சான் பேதுரு தரும் தரவுகளின்படி, புனித சவேரியார் வருகைக்கு முன்னரே புன்னைக்காயலில் ஒரு குடிசை ஆலயம் இருந்தது. அவ்வாலயத்தை அமைத்தவர் முதலில் புன்னைக் காயல் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கிய கொச்சி பங்குத்தந்தை பேதுரு கொன்சால்வ்ஸ் ஆவார். 1544 இல், புனித சவேரியாரின் முயற்சியில் மீண்டும் குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால், இது 1551இல் வடுகர் படை யெடுப்பின்போது தீக்கிரையாக்கப்பட்டது. மக்களிடம் நிதி பெற்று, தந்தை ஹென்றிகஸ் மீண்டும் இவ்வாலயத்தை 1552 இல் எழுப்பி, புனித மரியன்னையின் பிறப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது (இராஜகன்னி மாதா). மறு ஆண்டே இவ்வாலயம் முகமதியப் படையெடுப்புகளால் தகர்க்கப்பட, 1599 இல் மதுரை நாயக்கர் அனுமதியுடன் கற்கோவிலாக எழுப்பப்பட்டது. சவேரியாருக்கு 1662 ஆம் ஆண் டில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதன் நினைவாக, புன்னைக்காயலுக்கு வெளியே 1663 இல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு, புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1685 இல் டச்சுக்காரர்கள் இராஜகன்னி மாதா ஆலயத்தை வணிகக் கிடங்காக மாற்றினர். எனவே, புனித சவேரியார் ஆலயம் பங்குத்தலமாக மாறியது.

புனித சவேரியார் 1542 இல், அக்டோபர் முதல் 1544 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, பலமுறை புன்னைக்காயலில் நற்செய்திப்பணியின் பொருட்டு தங்கியிருந்தார். கள்ளு போன்ற குடிப்பழக்கத்தில் மூழ்கிக்கிடந்த ஆண்கள், பெண்களை மீட்டெடுக்க கடுமையான தண்டனைகளை வழங்கி, நல்வழிப் படுத்தினார். தன்னைத் தொடர்ந்து இங்கு பணி யாற்றிய தந்தை மன்சில்வாஸ் அவர்களிடமும், ‘குடிப் பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட கடுமையாக நடந்துகொள்ளுங்கள்’ எனக் கடிதம் எழுதினார்.

மலாக்கா நோக்கி 1544இல் பயணம் மேற்கொண்ட புனித  சவேரியார், 1548ஆம் ஆண்டு, பிப்ரவரி மற்றும் அக்டோபரில் இரண்டு முறை முத்துக்குளித்துறைக்கு வந்து, எல்லாக் கிராமங் களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தார். சவேரியாருக்குப் பிறகு, தந்தை ஹென்றிகஸ் புன்னைக் காயலை தனது மறைத்தளமாகக் கொண்டு நற்செய்தி, சமூக மற்றும் தமிழ் அச்சுப்பணிகளை ஏறக்குறைய 50 ஆண்டுகள் சிறப்புடன் ஆற்றினார்.

மக்கள் மீன் பிடித்தலை மட்டும் தங்கள் வாழ்வா தாரமாகக் கொண்டு, கொழும்பு வரை சென்று வணிகத்தில் ஈடுபட்டனர். புனித இராஜகன்னி மாதா ஆலயம், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித சந்தனமாதா (அன்னாள்) மற்றும் புனித மரிய மதலேனாள் சிற்றாலயம் ஆகியவை இவ்வூரின் பிற ஆலயங்கள் ஆகும். மேலும், புன்னைக்காயல் மற்றும் பழையகாயலுக்கு இடையே புனித தோமாவிற்கு ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டது. இது அடிக்கடி மக்களால் சந்திக்கப்படும் திருத்தலமாகத் திகழ்கின்றது. 1708இல் தந்தை இம்மானுவேல் தெ சில்வா பங்குத் தந்தையாக இருந்தபோது, பழைய காயலில் ஓர் அழகான ஆலயம் புனித பரிபூரண அன்னைக்கு எழுப்பப்பட்டது. தந்தை போச்சேஸ் காலத்தில் (1711-13) 121 குழந்தைகள் புதுநன்மையும், தந்தை பிரான்சிஸ் டெனராரா காலத்தில் (1733) 190 குழந்தைகள் திருமுழுக்கும் பழையகாயலில் பெற்றுள்ளனர்.

மணப்பாடு

சவேரியார் இங்கு நான்கு மாதங்கள் (1542-43) தங்கி, தமிழ் மொழியில் கிறிஸ்தவ செபங்களை மொழிபெயர்த்ததாகத் தனது மடலில் கூறுகின்றார். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம்பெற வேண்டி, தனது செபமாலை மற்றும் திருச்சிலுவை சுரூபத்தைக் கொடுத்தனுப்பி, நோயுற்ற குழந்தைகளின்மீது வைத்துச் செபிக்கச் செய்தார். குழந்தைகளும் நலம் பெற்றனர்.

சவேரியார் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயத்தின் அருகே கடலை ஒட்டிய குகையில் தங்கி, 1540இல் கப்பல் மாலுமியால் நிறுவப்பட்ட திருச்சிலுவையின் முன்பு வழிபாடு நடத்தி வந்தார். புனித சவேரியார் தனது கரங்களால் புனித யாகப்பருக்கு 1544 இல், மணப்பாட்டில் கூரையால் வேயப்பட்ட முதல் ஆலயத்தை அமைத்தார். பின்னர் விண்ணேற்பு அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு, ஏறக்குறைய 137 ஆண்டுகள் மணப்பாட்டின் பங்கு ஆலயமாகச் செயல்பட்டது. ஆனால், டச்சுக்காரர்களின் படையெடுப்பில் அவ்வாலயம் அழிக்கப்பட்டது. மணப்பாடு பரலோக அன்னை ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டதால், புனித யாகப்பர் பெயரில் 1600ஆம் ஆண்டில் சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டதாக ‘பெஸ்’ அறிக்கை குறிப் பிடுகின்றது. 1548 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் புனித சவேரியார் மணப்பாடு வந்து, இரண்டு வாரங்கள் தங்கி, மக்களைச் சந்தித்து, அவர்களிடம் மாபெரும் விசுவாசப் புரட்சியை ஏற்படுத்தினார். 1581 இல் எழுப்பப்பட்ட திருச்சிலுவை ஆலயத்தில் 1583 இல், திருச்சிலுவையின் சிறுபகுதி திருப்பயணமாகக் கொண்டு வரப்பட்டு, மூன்று நாள்கள் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மக்கள் பெரும் ஆடம்பரமாக அந்நாள்களைக் கொண்டாடினர். 1708 இல் மணப்பாட்டின் அமரபுரத்தில் தூய ஆவியானவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

1709இல் பங்குத்தந்தைக்கும், சில முறையற்ற கிறிஸ்தவர்களுக்கும் இடையே பெரும் பிணக்கம் ஏற்பட்டது. பங்குத்தந்தையின் அறிவுரையை ஏற்க மறுத்த கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிந்து சாம்பலா யின. அதில் இருவர் கருகி இறந்தனர். முறையற்று வாழ்ந்த அவர்களுக்கு அடக்கச் சடங்குகளை, பங்குத்தந்தை மறுக்கவே, சண்டை பெரிதானது. மனமுடைந்த பங்குத்தந்தை மணப்பாட்டிலிருந்து வெளியேறி, ஆலந்தலையில் தங்கினார். பின்னர் மக்கள் அனைவரும் இணைந்து வந்து ‘கிறிஸ்தவ முறைப்படி வாழ்வோம்’ என அழைத்துச் சென்றனர்.

1713 ஆம் ஆண்டு 3500 கிறிஸ்தவர்கள் மணப்பாட்டில் வாழ்ந்தனர். தந்தை பிரான்சிஸ் கார்தோசோ, புனித கித்தேரியம்மாள் பக்தியை அறிமுகப்படுத்தினார். அது விரைவாகப் புகழ் பெற்றது. இயேசு சபையின் மலபார் மறைமாநில தலைமையகம் டச்சுப் படைகளின் பொருட்டு அடிக்கடி கொச்சியிலிருந்து மாற்றப்பட்டது.  1688-92, 1697-1705, 1743 ஆகிய ஆண்டுகளில் கடியப்பட்டினம் தோப்புப் பகுதி, 1711-19 இராஜாக்கமங்கலம், 1743-52- மணக்குடி மற்றும் மணப்பாடு 1692-94, 1731-40,1746 மற்றும்  1752-1775 என அதன் நிர்வாகம் அமைந்தது. பழைய இயேசு சபைத் துறவிகளில் மணப்பாட்டில் கடைசியாக 1775 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் அருள்தந்தை அந்துவான் துராத் ஆவார்.

வேம்பார்-வைப்பார்

புனித சவேரியார் 1545 இல் சாந்தோம் நோக்கிய பயணத்தில் இவ்வூரில் தங்கி மறைப்பணியாற்றினார். 1608 இல் சில காரணங்களுக்காக இயேசு சபையினரை முத்துக்குளித்துறையிலிருந்து வெளியேற்றியபோது, வேம்பார்-வைப்பார் மக்கள் ‘அவர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக எங்களைச் சிலுவையில் அறையுங்கள்’ எனப் போராட்டம் நடத்தினர். 1708ஆம் ஆண்டில் குருக்களின்றி இந்த இரண்டு ஊர்களும் தவித்தன.

1715ஆம் ஆண்டு வரலாற்றுக் குறிப்புப்படி, வேம்பாரில் அமையப்பெற்ற தூய ஆவியார் ஆலயம் முத்துக்குளித்துறையில் மிகப் பெரியதும், உரோமை ஆலயங்களுக்கு நிகரானதுமாகும் எனக் கூறப் பட்டுள்ளது. வைப்பார் ஆலயம் புனித விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. 1709இல் தாக்கிய கொள்ளை நோயின்போது தந்தை மனுவேல் கார்னேரோ மிகுந்த அர்ப்பணிப்போடு சேவையாற்றி மக்களைக் காத்தார்.

மூக்கூரில் தங்கியிருந்த தந்தை கலினி அவர்களை 1713ஆம் ஆண்டு,  ஏப்ரல் 12 அன்று அவரது படுக்கை அறையில் மிகக் கொடிய நச்சுப் பாம்பு ஒன்று தீண்டியது. அச்சத்திலும், வேதனையிலும் அன்றைய இரவைக் கழித்த தந்தை, புனித பரலோக அன்னையிடம் தனது உயிரைக் காக்கும்படி மன்றாடினார். மறுநாள் நச்சு முறிக்கும் பச்சிலைகளை உண்டு உயிர் பிழைத்தார். அன்றே 18 கி.மீ. நடந்து சென்று, தனது உயிரைக் காத்த வைப்பார் புனித பரலோக அன்னைக்கு நன்றி செலுத்தினார். 1713இல் மறவநாட்டு மன்னனால் மூக்கூரில் இடிக்கப்பட்ட ஆலயம் மீண்டும் 1715இல் எழுப்பப்பட்டு, புனித பெரிய யாகப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வீரபாண்டியன் பட்டணம்

புனித சவேரியார் பலமுறை வீரபாண்டியன் பட்டணம் வந்து, இங்கிருந்து தந்தை மான்சி லாஸ்க்கு சில கடிதங்களை எழுதியுள்ளார். மேலும், அவரிடம் வீரபாண்டியன் பட்டணம் அருகே உள்ள கொம்புத்துறை மற்றும் தோமையார்புரத்திற்கு அடிக்கடிச் சென்று மக்களைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். 1644இல் வீரபாண்டிய பட்டணத்தில் 2220 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். புனித தோமாவுக்கு எழுப்பப்பட்ட ஆலயம் இவ்வூருக்குப் பெரும் சிறப்பைச் சேர்க்கிறது. புனித பேதுருவின் பெயரால் மற்றொரு சிற்றாலயமும் உள்ளது. 1708-09 ஆகிய ஆண்டுகளில் வீரபாண்டி யன் பட்டணம் ஆலந்தலை கீழ் செயல்பட்டது. 1713-33 ஆகிய ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பட்டணம் தனிப்பங்காகச் செயல்பட்டது. கொம்புத்துறைக்கு வணிகத்தின் பொருட்டு வந்துச் சென்ற சில போர்த்துக்கீசியர்கள் இங்கு கிறிஸ்தவ ஆலயம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். புனித சவேரியாரும், தந்தை மான்சிலாஸ்க்கு எழுதிய கடிதத்தில், மனுவேல் தெ குரூஸ் என்பவரை பொருளாதார உதவிக்கு தொடர்புக் கொண்டு, ஆலயம் அமைக்கக் கட்டளையிட்டார். அவ்வாறு எழுப்பப்பட்ட ஆலயத்தில் முதல் திருப்பலியை, புனித சவேரியார் நிறைவேற்றினார்.

ஆலந்தலை

1644 ஆண்டு கணக்கின்படி ஆலந்தலையில் 1178 கிறிஸ்தவப் பெரியோர் மற்றும் 140 சிறார் வாழ்ந்தனர். 1698இல் புனித பதுவை அந்தோணியாருக்கு ஆலயம் எழுப்ப அடித்தளமிடப்பட்டு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 1712 இல் கட்டி முடிக்கப் பட்டது. கோட்டாறு ஆலயத்தைக் கட்டிய தந்தை ஆந்த்ரே கோமஸ், ஆலந்தலை பங்குத்தந்தை  ஜான் தெ கோஸ்தா, தந்தை சான்சே ஆகியோர் இவ்வாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பெரியதாழை

‘தாழை’ என அழைக்கப்பட்டு, பின்னாள்களில் ‘பெரியதாழை’ என அறியப்படுகிறது. 1544இல் சவேரியார் இங்குதான் திருவிதாங்கூர் புதிய அரசரைச் சந்தித்து நட்பு பாராட்டினார். திருவிதாங்கூர் கடலோர மக்களுக்குத் திருமுழுக்கு அளித்தார். தாழையில்தான் போர்த்துக்கல்லிலிருந்து திரும்பிய புனித அருளானந்தர் தனது மறைமாநில அதிபர் ஆந்த்ரே பிரேயாரைச் சந்தித்தார். தாழையின் பங்குத்தந்தை ஜான் தெ கோஸ்தா வும் அவரை அன்புடன் உபசரித்தார். இச்சந்திப்பு 1691ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. ஆனால், ஒரு மாதத்திற்குள் பிப்ரவரி 4 ஆம் நாள் அருளானந்தர் மறைசாட்சியாக ஓரியூரில் மரித்தார். 1708இல் 2000 பேர் திருமுழுக்குப் பெற ஆயத்தமானதாக, பங்குத்தந்தை சைமன் மஸ்கரனாஸ் கூறுகின்றார்.  மறைப்பணியாளர்கள் எழுதிய 16 மற்றும் 18-வது கடிதத் தொகுப்புகளில் உவரி பற்றிய செய்தி வருகிறது. இவ்வூரின் நடுவேயுள்ள புனித ஆந்த்ரே ஆலயம் 1600இல் எழுப்பப்பட்ட பழமையான ஆலயம் ஆகும். இவ்வூரில் புனித பதுவை அந்தோணியாருக்கு எழுப்பப்பட்ட ஆலயமே மிகவும் பழமை வாய்ந்ததும், புகழ்பெற்றதுமாகும். பெரியதாழை, கூடுதாழை ஆகிய கடலோரக் கிராமங்களோடு சேர்ந்தே உவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடிந்தகரை

1644ஆம் ஆண்டு கணக்கின்படி இடிந்த கரையில் 200 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். 30 குழந்தைகள் மறைக்கல்வி பயின்றனர். 1730இல் பங்குத்தந்தையாக இம்மானுவேல் பெரைரா பணியாற்றினார். இப்பங்குத்தலம் உவரி, கூடங்குளம், இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் மற்றும் கூட்டப்புளி கிராமங்களை உள்ளடக்கியது. கூட்டப் புளியைப் பற்றி ஒருமுறைக் கூட பழைய இயேசு சபையினரால் குறிப்பிடப்படவில்லை. மாறாக, இவ்வூர் மதுரை புதிய மறைத்தளத்தின் கீழ் வளர்ச்சி பெற்றதைப் பற்றிக் காண முடிகிறது. பெருமணலில் 1644ஆம் ஆண்டே 600 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தது பற்றிய குறிப்பு உள்ளது. 1715இல் நற்சந்திப்பின் அன்னைக்கு இங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இதே ஆண்டில் பஞ்சலில் புனித லொயோலா இஞ்ஞாசியாருக்கும் ஆலயம் எழுப்பப்பட்டது. கூட்டப்புளியிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள அழகப்பபுரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினர். மேலும், பலர் பிரிவினை சபையிலும் இணைந்தனர்.   

(தொடரும்)

Comment