No icon

சிறுகதை

வேலை கிடைச்சிடும்தானே?

 “என்னங்க, எப்படியாவது வேலை கிடைச்சிடும் தானே?” ஏங்கியபடியே தன்மீது சாய்ந்த மாலதியின் கண்களை உற்றுநோக்கினான் கணவன் மருதன்.

கிடைச்சிடும்... இரு! பொறுத்திருந்து பார்க்கலாம்என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் மருதன்.

நெல்லும், கொள்ளும் நன்கு விளையும் நன்செய், புன்செய் நிலங்களோடு அவர்கள் கொண்டாடி மகிழ்ந்த காலங்கள் மாறி, இப்போது பழைய சோறும், ஊறிய ஊறுகாயும் அவர்களின் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தன. ஏழைகளின் உயர்வை அங்கீகரிக்காத மனிதர்கள் வாழும் உலகில் இனத்தால், மதத்தால், மொழியால், ஏற்படும் பிளவுகளில் மட்டும் என்ன பெரிய மாற்றங்கள் வந்துவிடப் போகிறது?

என்னங்க! கிடைத்திடும்தானேஎன்று மாலதி கேட்ட கேள்வியில் உள்ள ஓராயிரம் ஏக்கங்களை அவன் புரியாதவன் இல்லை. “இந்த முறை கலெக்டருடைய நேரடி நியமனம்தான். துணிந்து விண்ணப்பிக்க, தகுதிக்குக் கிடைக்கும்என்று பக்கத்து வீட்டுப் பொன்னம்மாள் அக்கா தந்த துணிச்சலிலேதான் அவளும் விண்ணப்பித்திருந்தாள். தனக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரும் என்று மாலதி நம்பியிருந்தாள். அவள் விண்ணப்பித்த இடங்களில் உள்ள வேலைகளில் ஏதாவதோர் இடத்திற்காவது பணியில் சேரத் தனக்கு அழைப்பு வருமா என்று பத்து நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த அவளின் மனப்போராட்டத்திற்கு அந்த வியாழக்கிழமை விடிவாக அமைந்தது.

காலையிலேயே தொலைபேசி அழைப்பின் மூலம் பக்கத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் அமைப்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டாள். விதவைகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இன சுழற்சி முறை, ஊனமுற்றோர், இராணுவ உறுப்பினரின் குடும்பத்தார் போன்ற பல முன்னுரிமைகளைத் தாண்டி, இவற்றில் எதிலும் வராததினப்பசிமுன்னுரிமையில் மட்டுமே உள்ள மாலதிக்கு, அந்த அழைப்பை அவளாலே நம்ப முடியவில்லை.

எல்லா நிலையிலும் வசதி படைத்தோர் இருப்பின், அவர்களே முன்னுரிமை பெற்றவர்களாகி விடும் சூழலில், மாலதிக்கு யார் முன்னுரிமை தருவது? ஒரு காலனியின் குடியிருப்பில்  எந்த முன்னுரிமையும் பெறத் தகுதி இல்லாத நிலையில், ஆனால், எல்லா முன்னுரிமைக்கும் தகுதியான ஏழ்மைச் சூழலில் அவள் வாழ்வது, பணி நியமனம் செய்யப் போகும் ஆட்சியருக்குத் தெரியவாப் போகிறது?

முப்போகம் வெதப்பாடு விளையும் பூமியும், மாடி வீடும் கொண்டோர் தங்களின் இனத்தின் அடிப்படையில் முன்னுரிமை பெற்று, மேலே செல்கின்றனர். இது என்ன நேர்காணல்? ஆனாலும், மாலதியின்  மனதில் நம்பிக்கை குறையவே இல்லை. மாங்குடி கிராமமே அவள் மனக்கண் முன் வந்தது. மாலதியின் வாழிடம் மாங்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சங்குடி கிராமம் என்றாலும், மாங்குடி மக்களின் வாழ்வியல், சாதி, சமயக் கட்டமைப்புகள், ஊர்க்கட்டு எல்லாவற்றையும் அவள் அறிந்து வைத்திருந்தாள். எப்படி இருந்தாலும், தனக்கு அந்தச் சூழலில் வேலை உறுதி இல்லை என்பது தெரிந்திருந்தாலும், ஒருவித நம்பிக்கையோடு இருந்தாள் மாலதி. எனவே, யாருடைய தயவையும் நாடிட மனது வரவில்லை.

தனக்குக் குறிக்கப்பட்ட இடம் பொதுப்போட்டி என்பதால், அவர்கள் உண்மையாகவே எத்தனை பேர் அந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் என்பதை அறிய விருப்பம் கொண்டாள் மாலதி. தான் முன்பு பஞ்சங்குடி ஊராட்சியில், கிராம சுகாதாரத் தூதுவராகப் பணியாற்றியபோது இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர், தற்போது தங்களது ஒன்றியத்திற்குப் பொறுப்பு அலுவலர் என்பதால், மெல்ல அஞ்சுகன் சாருக்குப் போன் போட்டாள் மாலதி. எதிர் முனையில்ஆம் மாலதி, உன்னோடு விண்ணப்பித்தவர்களில் 34 பேர் இருக்காங்க! பொதுப்போட்டி என்கிறதால வயசுதான் பார்ப்பாங்க! நீயும், இன்னொரு பொண்ணும்தான் உள்ளதிலேயே அதிக வயசு. 37 வயசுல நீங்க இருக்கீங்க. 100 சதம் உனக்குத்தான் இது கிடைக்க வாய்ப்பு உள்ளது. நானும் அங்கே வருவேன். புதன்கிழமை நேர்காண லில் சந்திப்போம்என்றார் அஞ்சுகன் சார்.

மாங்குடி கிராமத்தின் மூலம் தனக்கு நல்லது நடக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சி அவளுக்கு இரண்டு தினங்கள் மட்டுமே நீடித்தது. அவள் விண்ணப்பித்திருந்த வேலை காலையில் அதாவது, பகுதி நேரம் மட்டுமே என்பதால், மதியத்திற்கு மேல் பீடி சுற்றலாம் அல்லது வேறு ஏதாவது சிறு தொழில் செய்யலாம். நடக்க இயலாத, நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனைக் கடையில் அமர்த்தி, வேலையைப் பார்க்கச் சொல்லலாம் என்பன போன்ற கற்பனை வானில் அவள் சிறகடித்துக் கொண்டிருந்தாள்.

முந்தைய தொலைபேசி உரையாடலில், ஏறக் குறைய 47 லட்ச ரூபாய் திட்டத்தின் ஒதுக்கீட்டால் தன் வீட்டு வேலை நடந்து கொண்டிருப்பதாக அஞ்சுகன் சார் மாலதியிடம் பெருமை பேசிக் கொண்டார். சொந்த ஊர் முதல், வீட்டு முகவரி வரை அவர் கொடுத்த போதும் கூட மாலதி என்னமோ மேலதிகாரி கதை சொல்கிறார் என்றே நினைத்துக் கொண்டாள். அவளுக்குத் தேவை எல்லாம் நேர்காணலின்போது ஓர் ஆதரவுதான். ‘அஞ்சுகன் சார் நாளை பார்க்கலாம் என்று ஒரு நம்பிக்கை வார்த்தை சொன்னாரே! ஒருவேளை அவருக்கு சம்திங் ஏதும் கொடுக்க வேண்டுமோ? அப்படி இருந்திருந்தால்தான் சொல்லி இருப்பாரேஎன்று மாலதி தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். வேலை கிடைத்து விட்டால், காதில் கிடக்கும் கடைசி ஒரு ஜோடி தங்கக் கம்மலை விற்றாவது ரூபாய் 6 ஆயிரத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவும் செய்திருந்தாள்.

நேர்காணலுக்கான நாளும் வந்தது. குட்டி போட்ட பூனை போல அங்கும், இங்குமாகச் சுற்றி வந்தார் அஞ்சுகன் சார். மாலதியை நேர்காணலுக்கு அழைத்த நான்கு நபர்கள் கொண்ட மூன்று பெஞ்சு களின் அருகிலும் அவரும் போனார். அன்று மாவட்ட ஆட்சியரின் நேரடி நியமனம் என்பதால், நியமன ஆணைகள் தயார் செய்யப்பட்டு, நேரடியாகவே உரிய நபரிடம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. மதியம், மாலை என்று காத்திருந்தவளுக்கு எந்த நியமன ஆணையும் வழங்கப்படவில்லை. இரவு 9:30 மணிக்கு அஞ்சுகன் சாரைத் தொடர்பு கொண்டபோது, முன்பின் தெரியாதவரைப் போல திட்டத் தொடங்கினார். “எனக்கு ஏன் கால் பண் றீங்க? உனக்கும், எனக்கும் ஏதாச்சும் கமிட்மெண்ட் இருக்குதாம்மா? நான் என்ன உங்கிட்ட ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணம் வாங்கினேனா? ஏம்மா என்னைத் தொல்லை பண்ற”  என்று கேட்ட அஞ்சு கனின் வார்த்தையைக் கேட்டு மனம் நொந்து போனாள். அவளுக்கு இனிமேல் அந்த வேலையே வேண்டாம்போல இருந்தது. அன்றோடு தனது வேலைக்கான விண்ணப்பப் படிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கண்ணீரோடு தீர்மானித்தாள். ஆயினும், அடுத்த நாள் காலை குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்கச் சென்ற மாலதிக்கு அருகில் இருந்த பெட்டிக் கடையில் அன்றையதினகரன்நாளிதழின் தலைப்புச் செய்தி  கவனத்தை ஈர்த்தது.

நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 4,375 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான செய்தி அதுதண்ணீர் குடத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டுப் பெட்டி கடையில் பேனாவைக் கேட்டு வாங்கி, விண்ணப்பப் பதிவிறக்கத்திற்கான வெப்சைட்டைக் குறித்துக் கொண்டுவீட்டை நோக்கி விரைந்தாள் மாலதி.

பெட்டிக் கடையின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த மாலதியின் கணவன் மருதன், அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். மாலதியின்வேலை வேண்டும்என்ற ஏக்கத்தில் விளையும் தேடல் மீண்டும் தொடர்கிறது என்று எண்ணியவன், அவள் பின்னே  தனது தளர்ந்த நரம்பு கொண்ட  காலின் வீங்கிய  வேதனையோடு அவளைத் தொடர்ந்து நடந்தான். தனக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பம் போட வேண்டும் என்று எண்ணியபடியே!

Comment