No icon

‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’

பொது உரிமையியல் சட்டம் வேண்டுமா?

இன்று சிறுபான்மை மதங்கள், இனங்கள் ஆகியவற்றிற்குக் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் தந்து கொண்டிருப்பதுபொது உரிமையியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போகிறோம்என்ற ஒன்றிய அரசின் முழக்கம்தான்.

இப்போது நடைமுறையில் இருக்கும் தனியாள் சட்டம் திருமணம், மணமுறிவுசொத்துரிமை ஆகியவை மத, இன அடிப்படையில் உள்ளன. ஒவ்வொரு மதமும் அதற்குரிய தனியாள் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. இதனை மாற்றி, எல்லா மதத்தினருக்கும் ஒரே சீரான பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டு வருவது ஒன்றிய அரசின் நோக்கம். இந்தச் சட்டத்திற்கு ‘Uniform Civil Code’ (UCC)) என்று பெயர்.

இந்துத்துவக் கட்சிகள் பல ஆண்டுகளாகவே பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. அதற்கு ஆதாரமாக அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இரு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவை அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளும் (Directive Principles of State Policy), அடிப்படை உரிமைகளும் ஆகும். வழிகாட்டு நெறிமுறைகளில் 44 பிரிவு, அரசு தன்னுடைய குடிமக்களுக்குப் பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பிரச்சினையின் உணர்வுப்பூர்வமான தன்மையையும், சிக்கலையும் கருத்தில் கொண்ட அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அதனை நடைமுறைப்படுத்துவதை அரசுகளிடமே விட்டு விட்டார்கள். பல ஆண்டுகள் விவாதத்திற்கு வந்தாலும், முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.

விவாதம் அரசமைப்புப் பேரவையிலேயே (Constituent Assembly) தொடங்கிவிட்டது. அப்போது இஸ்லாமியத் தலைவர்கள் தனிச் சட்டங்களில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும் என்றனர். கே.எம். முன்ஷி, “தனியாள் சட்டங்களைத் தொட்டால் பெரும்பான்மை இந்துக்கள் பாதிக்கப்படுவார்கள்என்றார். இதனால், அம்பேத்கர் அதிருப்தி அடைந்தார். ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில்தான் பொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே, அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

இந்தியா பல மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்டதொரு கலப்பு நாடு. ஒவ்வொரு சாதியும்மதமும், இனமும், பண்பாடும் வெவ்வேறு சடங்குகள், விதிமுறைகள், பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றன. குறிப்பாக, இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் முதலானோருக்கு என்று தனிமனிதருக்கான விதிகள் இருக்கின்றன. திருமணம், மணமுறிவு, பரம்பரைச் சொத்துரிமை, ஜீவனாம்சம் எனும் வாழ்க்கைப் படி ஆகியவை மத நூல்களின் அடிப்படையிலும், பழக்கவழக்கங்களின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டவை. சில எடுத்துக்காட்டுகள்:

இந்து தனியாள் சட்டங்கள் இந்துக்களுக்கான திருமணச் சட்டம் 1955 மணமுறிவையும், 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 வாரிசுரிமையையும் பற்றியவை. இந்துப் பெண்களுக்கு அவர்களுடைய பெற்றோரின் சொத்தில், ஆண் மக்களைப் போலவே சம உரிமை தரப்பட்டது. ஏற்கெனவே உடன்கட்டை ஏறுதலுக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் தடை வந்திருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு முஸ்லிம் தனியாள் சட்டம் இருக்கிறது. அது ஷரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 1937 இல் கொண்டு வரப்பட்ட இச்சட்டம், இஸ்லாமியர் மத்தியில் திருமணம், மண முறிவு, சொத்துரிமை, வாழ்க்கைப்படி ஆகியவை தொடர்பானது.

கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், யூதர்கள் ஆகியோர் 1925 வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் வருவார்கள்.

மதப் பழக்கங்களும், சட்டங்களும் மதத்திற்கு மதம் மாறுபடுவதால்தான் பிரச்சினைகள் எழுகின்றனவாரிசுரிமைச் சட்டங்கள் எல்லா மதங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால், அவை பெரும்பாலும் ஆண் வாரிசுகளுக்குச் சாதகமாக இருக்கின்றன.

பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதைக் கிறிஸ்தவ சொத்துரிமைச் சட்டம் வழங்குகிறது. ஆனால், பரம்பரைச் சொத்தை தந்தை அல்லது தாய் யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்க உரிமை இருக்கிறது.

பெண் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது முஸ்லிம் பெண்களுக்கு வேறாக இருக்கும். சில மதங்களிலும், சாதிகளிலும் பல மனைவியரைத் திருமணம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இஸ்லாமிய மதம்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது என்று சொன்னாலும், இந்து சமயத்திலும் சில சாதிகளில் பல மனைவியரைத் திருமணம் செய்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. கணக்கெடுப்புகளின்படி, இந்துக்கள் மத்தியிலும், இஸ்லாமியர்களிடமும் ஒன்றுக்கு மேல் மனைவியரை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவுதான்.

இன்னொரு முக்கியமான பிரச்சினை வாழ்க்கைப் படி பற்றியது. 1985 இல் நடந்த ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு, பொது குடியுரிமைச் சட்டம் வேண்டும் என்பதைப் பெரிதாக்கியது. இந்த வழக்கில் ஷாபானுவை அவரது கணவர் இஸ்லாமியச் சட்டத்தின்படி மண முறிவு செய்துவிட்டார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள். தனக்கும், குழந்தைகளுக்கும் வாழ்க்கைப் படி கொடுக்க வேண்டுமென்று ஷாபானு வழக்குத் தொடர்ந்தார். முஸ்லிம் தனியாள் சட்டத்தின்படி, தான் தர வேண்டியதில்லை என்று அவரது கணவர் வாதிட்டார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரையில் சென்றது. ஷாபானுவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதன் அடிப்படையில் பெண்ணுரிமைவாதிகள் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகள் வேண்டுமென்று குரல் எழுப்பத் தொடங்கினார்கள்.

இன்னொரு முக்கியப் பிரச்சினை, மணமுறிவு பற்றியது. இந்துத் திருமணச்  சட்டம் 1976 இன் அடிப்படையில் கணவனும்-மனைவியும் ஒத்துக் கொண்டு பதினெட்டு மாதத்திற்குப் பிறகு மண முறிவு அனுமதிக்கப்படும். அவற்றில் ஓராண்டு தனித்தனியாக இருக்க வேண்டும். இந்து சாத்திரங்களில் அர்த்தசாஸ்திரம் மணமுறிவை அனுமதித்தது, மனு அனுமதிக்கவில்லை என்று ஒரு கட்டுரை கூறுகிறது. மேலும், சாதிக் கட்டுப்பாடுகள் வேறு இந்த விஷயத்தில் நடைமுறையிலிருந்தன. 1955 சட்டம், 1976 சட்டம் ஆகியவையே இப்போது பின்பற்றப்படுகின்றன. இஸ்லாத்தில் மணமுறிவு விரும்பப்படுவதில்லை. திருக்குரான் கணவன்- மனைவிக்கு இடையே சமாதானம் ஏற்படுவதையே வற்புறுத்துகிறது. நினைத்த உடன் கணவன் மூன்று முறைதலாக்சொல்லித் திருமணத்தை முறித்துக் கொள்வது அபூர்வமாக நடப்பது. கிறிஸ்தவ மதத்தில் மணமுறிவு பெறுவது எளிதில்லை. அதன் சட்டங்கள் தனி.

இந்த நிலையில், எல்லாவற்றிலும் மேல் நாட்டைப் பின்பற்றுவதுபோல மணமுறிவிலும் பின் பற்றி, மணமுறிவை எளிதாக்கி விட்டால், உடைந்து போன, சிதைந்து போன குடும்பங்களே மிஞ்சும்.

இன்னொரு சிக்கல் கூட்டுக் குடும்பம் பற்றியது. இந்து / இந்தியச் சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்து வந்திருக்கிறது. ஒரே வீட்டில் தாத்தா - பாட்டி, பெரியப்பா-சித்தப்பா என்று ஒரு பெருங்கூட்டமே இருக்கும். ஆனால், இப்போது இது பெரிதும் மாறிவிட்டது. எல்லாச் சமூகங்களிலுமே கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து தனிக் குடும்பங்கள் ஏற்பட்டு விட்டன. வரி விதிப்பில் இந்து கூட்டுக் குடும்பத்திற்கு என்று தனியான முறை தொடர்கிறது. கூட்டுக் குடும்பத்திற்கென்று வருமான வரியில் தனி விதிகள் உள்ளன. பொது உரிமையியல் சட்டம் வந்தால் இது என்னவாகும்? முஸ்லிம்களில் கூட்டுக் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

பெண்களுக்குத் திருமணம், சொத்துரிமை, மணமுறிவு, வாழ்க்கைப் படி ஆகியவற்றில் இந்தப் பொதுச் சட்டத்தால் நன்மை ஏற்படலாம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதிலுள்ள இக்கட்டுகளைப் பலரும் எடுத்துக்காட்டுகிறார்கள். குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டம் இருக்கிறது. ஆனால், எத்தனை இடங்களில் இந்து சமுதாயத்தில் மீறப்படுகிறது என்பதைச் செய்தித் தாள்கள் காட்டும்.

சட்ட அறிஞர்களின் கருத்துப்படி, புதிய சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், இந்துக்களின் திருமணம் குறித்த பல்வேறு பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டியதிருக்கும்.

பழங்குடியினருக்கென்று தனிப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் உள்ளன. இச்சட்டம் அவற்றைக் கடுமையாகப் பாதிக்கும்ஒரு கலாச்சாரத்தையே அழிக்கும் முயற்சியாக இதைப் பார்க்கிறார்கள். அதாவது பா... எப்போதும், எந்தப் பிரச்சினையையும் இந்து-முஸ்லீம் கண்ணோட்டத்தோடேயே பார்க்கிறது. ஆனால், வேறு மத, இன, மொழி சிறுபான்மையினர் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை, குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள சிறுபான்மையினரின் அடையாளமே இல்லாமல் போய்விடும். மேலும், பழங்குடியினரின் குத்தகைச் சட்டங்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய நிலத்திற்கான பாதுகாப்பு போய்விடும் என்பது அவர்களது அச்சம். எனவேதான் பொது உரிமைச்  சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கின்றன. ஒன்றிய அரசும், இந்தச் சட்டத்திலிருந்து பழங்குடியினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க, யோசித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன.

கிறிஸ்தவர்களை இது எவ்வாறு பாதிக்கும்?

உடனடியான பாதிப்பு திருமணம், மணமுறிவு பற்றியதாக இருக்கும். திருமணச் சடங்குகளில் அரசு தலையிடலாம். இப்போது கிறிஸ்தவக் குடும்பத்தின் ஆணிவேரேகடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்என்பதுதான். எனினும், சில காரணங்களால் மண உறவில் சிக்கல்கள் ஏற்படும் போது, மணமுறிவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அது எளிதாகக் கிடைப்பதில்லை. பொது நீதிமன்றங்களில் கூட சமாதானம் செய்து வைக்கும் முயற்சியே முதலில் நடக்கிறது. இந்த நடைமுறைகள் குடும்பங்கள் உடைந்து போவதை, குழந்தைகள், பெற்றோர் இருந்தும் அனாதைகள் ஆவதை, அபலைப் பெண்கள் ஆதரவின்றி அல்லலுறுவதைத் தடுக்கும். புதுச் சட்டம் இந்த நடை முறையில் கை வைத்தால் அது சமுதாயத்திற்கு ஆபத்து.

எந்த மதத்தைப் பின்பற்றுவது? எந்தச் சடங்குகளை அனுசரிப்பது? என்பவை என்னுடைய அடிப்படை உரிமை. நான் தமிழன். தமிழ்ப் பண்பாடு என்னுடையது. அதில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை” (அடிப்படை உரிமைகளுக்கும், வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு இப்போது புரிந்திருக்கும்!).

தனி மனித உரிமையைப் பறிக்கும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதும் கூட பல சட்டங்களும், விதிகளும் எல்லா மதத்தினருக்கும், சாதியினருக்கும், மாநிலத்தினருக்கும் பொதுவானவைதான். அவற்றில் சில பிரிவுகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியவை என்று நான்கு விஷயத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்,

பல அரசியல் கட்சிகளும் (பா... கூட்டணிக் கட்சியான .தி.மு.. உள்பட) பொது உரிமையியல் சட்டத்தை எதிர்க்கின்றன. ஒன்றிய அரசு நியமித்த 21  ஆம் சட்ட ஆணையம் இது தொடர்பாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், இப்போது 22 ஆம் சட்ட ஆணையம் பொது மக்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறது. இம்மாதம் 14 ஆம் தேதிக்குள் கருத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

இந்நிலையில் நாம் நமது கருத்தைத் தெளிவு படுத்த வேண்டும். அமர்த்தியாசென் கூறுவது போல,  ‘இந்தச் சட்டம் தேவையில்லை; பெண்களுக்கு உரிமை தருவோம்என்ற கவர்ச்சிப் பேச்சுக்கு இந்தச் சட்டத்தை ஒரு கருவியாகச் சங்கப் பரிவாரம் கையில் எடுத்திருக்கிறது. தனியாள் சட்டங்களில் ஒருசில திருத்தங்கள் கொண்டு வருவதே பெண் சமத்துவத்துக்கும்சமூக நீதிக்கும் போதுமானதாக இருக்கும். அவற்றை மதத்தலைவர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், சட்ட வல்லுநர்கள் சேர்ந்து முடிவு செய்யலாம்,

2024 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிறுத்தி ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சி நாட்டில் கலவரத்தையும், பிளவையும் ஏற்படுத்தும். வேண் டாம் இந்தப் பெரும்பான்மைச் சர்வாதிகாரம்!

Comment