No icon

தமிழ்நாடு-புதுவை

ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம்

தமிழ்நாடு-புதுவை ஆயர்  பேரவையின் ஆண்டுக் கூட்டம் ஜூலை 9 முதல் 13 வரை, கோயம்புத்தூர் மறைமாவட்ட ஜீவஜோதி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையில் 18 இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்ட ஆயர்களும், 4 சீரோ-மலபார் மற்றும் மலங்கரா வழிபாட்டு முறை மறைமாவட்ட ஆயர்களும் உள்ளடங்குவர். இந்த ஆயர் பேரவைக் கூட்டமைப்பானது ஆண்டுதோறும் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் கூடி தமிழ்நாடு திரு அவையின் ஆன்மிக, சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் வழிமுறைகளையும், சந்திக்கும் சவால்களையும், எதிர்கொள்ள வழிமுறைகளையும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட தீர்மானங்களையும் எடுக்கிறது. அவ்வாறே தமிழ்நாடு ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் 28 பணிக்குழுக்களின் செயல்திட்டங்களை உள்ளடக்கிய ஆண்டறிக்கையும், அதன் வழி நின்று செயல்திட்டங்களின் தெளிவுகளும் சமர்ப்பிக்கப்படும். இந்நிகழ்வானது தமிழ்நாடு திரு அவையின் பல்வேறு செயல்பாடுகளையும், அதன் நிலைப்பாட்டையும் ஆராய்ந்து பார்க்கவும், எதிர்வரும் ஆண்டுக்கான செயல்பாடுகளை இன்னும் கூர்மைப்படுத்தவும் பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றது.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் உயர் மறைமாவட்டப் பேராயர்கள், மறைமாவட்ட ஆயர்கள், மறைமாவட்ட நிர்வாகித் தந்தையர்கள், துறவற சபைத் தலைமைப் பணியாளர்கள் மற்றும் தலைமைச் சகோதரிகளை உள்ளடக்கிய துறவற சபைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஆயர் பேரவைப் பணிக்குழுக்களின் செயலர்கள் என 70 நபர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டு இந்நிகழ்வை கோவை மறைமாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களுக்கும், மறைமாவட்ட நிர்வாகத்திற்கும் ஆயர் பேரவைத் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் சிறப்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comment