No icon

இயேசு சபையினரின் பழைய மதுரை மறைப்பணித் தளம்

உரோமை சன்னியாசி இராபர்ட் தெ நொபிலி

மதுரையில் தந்தை கொன்சாலோ

தந்தை கொன்சாலோ பெர்னாண்டஸ், போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்தவர். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றினார். அந்நேரத்தில், போர்த்துக்கல் வந்திருந்த முத்துக்குளித்துறை மறைப்பணியாளர் ஹென்றி ஹென்றிக்சை சந்தித்தார். அச்சந்திப்பு அவரை மறைப்போதகப் பணிக்கு அழைப்பதாக உணர்ந்து, தந்தை ஹென்றிக்சுடன் கோவா வந்து இறையியல் பயிற்சிப் பெற்றார். 1562 இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, முத்துக் குளித்துறையில் தனது நற்செய்திப் பணியைத் திறம்பட ஆற்றினார். கடலோரக் கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய 100 பேர் மதுரையைச் சுற்றி தங்களின் வணிகத்தின் பொருட்டு குடியேறினர். மேலும், குதிரை வியாபாரத்தின் பொருட்டு அங்கு சில போர்த்துக்கீசியரும் வாழ்ந்தனர். அவர்களின் ஆன்மிக நலனுக்காகத் தந்தை ஹென்றிக்கஸ், 65 வயது நிரம்பிய தந்தை கொன்சாலோவை 1575 இல் மதுரைக்கு அனுப்பி வைத்தார். தமிழ்மொழிப் புலமை, மதுரை நாயக்கரோடு நட்புறவு, மதுரை நாயக்கர்-போர்த்துக்கீசியரிடையே இணைப்புப் பாலமாகத் திகழ்தல் போன்ற தகுதிகள் தந்தை கொன்சாலோவுக்குக் கூடுதல் பலத்தைத் தந்தன.

மதுரை - பழந்தமிழ் நாட்டின் மிகப் பழமையான ஊர். பாண்டிய மன்னர்களின் நிகரில்லாத தலைநகர்! தமிழர்களின் பெருமைமிகு ஊர், பண்பாட்டு  அடையாளம், நற்றமிழின் விளைநிலம் எனத் தமிழோடும், தமிழரோடும் பின்னிப் பிணைந்தது மதுரை மாநகர்! தமிழ் இலக்கியங்களில் மதுரைக்கென்று எப்போதும் ஒரு  பெரிய இடமுண்டு, பூம்புகார் புகழ் பாடும் சிலப்பதிகாரம் என்ற காவியம் தரை தட்டிய கரைதான் மதுரை. கண்ணகி என்ற கற்புக்கரசி நீதி கேட்டு, செந்தீயில் மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய கறுப்பு வரலாறும் உண்டு. அக்கறையைத் தன் இன்னுயிர்  ஈந்து போக்கிய நீதிவழுவா நெடுஞ்செழிய பாண்டியன் ஆட்சிப் புரிந்த சிறப்பும் இந்நகருக்கு உண்டு. மதுரையின் பழம் பெருமை மதுரை மீனாட்சி திருக்கோவிலும், குன்றாத சிவ நெறியும் ஆகும்இவ்வாறு தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, சைவ பக்தி நிறைந்த மதுரையில் தந்தை கொன்சாலோ முதல் கிறிஸ்தவ மறைத்தளத்தை நிறுவினார். கடற்புரத்தில் மட்டுமே ஒலித்த மாதா கோவில் மணியோசை, இந்துக்கள் அதிகம் வாழ்ந்த மதுரையிலும் ஒலிக்க ஆரம்பித்தது. ஓர் ஆலயம் எழுப்பி அறப்பணிகளை ஆற்றி வந்தார் தந்தை கொன்சாலோ.

மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கரோடு தனக்கிருந்த நட்பைப் பயன்படுத்தி கொன்சாலோ அனைவருக்குமான ஒரு பொதுப் பள்ளிக்கூடத்தையும், ஏழைகளுக்கான ஒரு சிறிய மருத்துவமனையையும் கட்டி இந்துக்களின் கவனத்தைப் பெற்றார். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை வலியுறுத்தினார். சமூகப் பணிகள் வழியாக நற்செய்தியை ஆக்கப்பூர்வமாக அறிவித்தாலும், திருமுழுக்குப் பெறுவதற்கு யாரும் முன்வரவில்லை. அரண்மனையில் நாயக்கர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து, தனது மறைப்பணிக்கு உதவிட அடிக்கடி வேண்டினார்; அவர்களோ குதிரைகள் இறக்குமதி, வெண் படிக உப்பு ஏற்றுமதி ஆகியவற்றில் மட்டும் ஆர்வம் செலுத்தியது தந்தைக்கு வருத்தத்தைத் தந்தது. மேலும், அமைச்சர்கள் மற்றும் அரச அலுவலர்கள் கிறிஸ்தவ மறைக்கு நாயக்கர் ஆதரவு தராமல் இருக்க கவனமுடன் செயல்பட்டனர்.

மதுரையில் தொடர்ந்து தங்கி பல்வேறு முயற்சிகள் எடுத்தபோதும், ஒருவர்கூட கிறிஸ்தவ மெய் மறையைத் தழுவாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். ‘கிறிஸ்தவத்தை ஏற்காத ஊரில் நான் வாழ்ந்து என்ன பயன்?’ என தனது வேதனையை வெளிப்படுத்த, அதற்கு மதுரை நாயக்கர்கிறிஸ்தவத்தைப் பரப்புவதுதான் உங்களது உண்மையான பணி என்றால், இந்நகரை விட்டு வெளியேறலாம்என அவரைக் கடிந்து கொண்டார்.

தந்தை கொன்சாலோ பள்ளியில் பயின்ற மாணாக்கர் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தனர். ஆனால், நற்செய்திக்குச் செவிமடுக்க மறுக்கின்றனர் என 1596 இல் மதுரைக்கு வந்திருந்த போர்த்துக்கல் கோயம்ப்ரா பல்கலைக்கழகத் தலைவர் குறிப்பிடுகின்றார். தமிழ் வழக்கங்களைப் பின்பற்றாமல் இருந்தது, தாழ்த்தப்பட்ட மக்களோடு நெருங்கிப் பழகியது, ஐரோப்பிய உணவான மாட்டிறைச்சியை உட்கொண்டது, இறந்தவர்களை ஆலயத்திற்குள்ளே அடக்கம் செய்தது போன்ற செயல்பாடுகள் கொன்சாலோவின் மறைப்பணி தோல்வியடையக் காரணமாகப் பார்க்கப்பட்டது. எளிய மக்களோடு அவர் கொண்ட தொடர்பை உயர் சாதியினர் கொச்சைப்படுத்தி தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தினர். இவ்வாறு 11 ஆண்டுகள் மதுரையில் அர்ப்பணிப்போடு மறைப்பணி ஆற்றியும்ஒருவரைக் கூட மனந்திருப்ப இயலாமல் அவரது பணி தோல்வியில் முடிந்தது. அந்நாள்களில் ஐரோப்பியர்களைபரங்கியர்கள்’ (The Franks) என அழைத்தனர். எனவே, உயர் சாதியினர் போர்த்துக்கீசிய மற்றும் ஆங்கிலேயரின் உணவு, உடை, உறவு பழக்க வழக்கங்களோடு அவர்கள் நாட்டின் பெயரையும் இணைத்துபரங்கியர்கள்என அதை இழிச்சொல்லாக அழைத்து, இங்குள்ள மக்களைக் குழப்பினர்.

உரோமை அந்தணன்நொபிலியின் மறைப்பணி

17ஆம் நூற்றாண்டில் தமிழ் கிறிஸ்தவ மறைப்பணி மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் பங்காற்றியவர்தத்துவப் போதகர்எனப் போற்றப் பெறும் இராபர்ட் தெ நொபிலி. இவர் பிரான்சிஸ்கோ நொபிலி மற்றும் சியோலி என்னும் தம்பதியரின் மூத்த மகனாக, உரோமை மாநகரில் புகழ்பெற்ற உயர் குடியில், 1577, செப்டம்பரில் பிறந்தார். அறிவும், ஆற்றலும் நிறைந்த இராபர்ட் இறைபணியில் தாகம் கொண்டு, 1606 இல் இயேசு சபையில் சேர்ந்து குருவாக அருட்பொழிவுப் பெற்றார். மறைப் போதகப் பணியில் ஆர்வம் கொண்டு முத்துக்குளித் துறையில் பணியாற்றுவதற்காக, மலபார் மறை மாநில அதிபர் ஆல்பர்ட் லேர்சியோ நல்லாசியுடன் 1605, மே 20 அன்று கோவா வந்தடைந்தார். ஆறு மாத காலம் கோவா, ஆறு மாத காலம் தூத்துக்குடி என ஓராண்டு தமிழ்மொழியில் பயிற்சி பெற்றார். இலக்கண, இலக்கியத் தமிழ் வளமையான செந்தமிழில் புலமை கொண்டார். இவரின் அறிவையும், ஆர்வத்தையும் கண்ட மறை மாநில அதிபர் ஆல்பர்ட் லேர்சியோ, மதுரை மண்ணில் கிறிஸ்தவத்தை விதைக்கச் சரியான நபர் நொபிலி என முடிவெடுத்து, அனுப்பி வைத்தார். மதுரைக்கு வருவதற்கு முன்பே, தந்தை கொன்சாலோவின் பணிகள் தோல்வியடைய காரணமான நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டு, அவற்றைக் களைந்து, புதிய உத்திகளைப் பின்பற்ற முடிவெடுத்து, தன்னைச் சிறப்பாகத் தயாரித்துக் கொண்டார். இயேசு சபை மலபார் மறைமாநிலத் தலைவர் லேர்சியோவுடன் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு நவம்பர் 15, 1606 அன்று நொபிலி மதுரை வந்தடைந்தார்.

தமிழ் குடிகளின் சாதிய வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வுகளை நன்கு தெரிந்துகொண்ட தந்தை நொபிலி, உயர் குடிகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ் இதர குடிகளை இலகுவாகக் கிறிஸ்தவத்திற்குக் கொண்டுவர முடியும் என நம்பினார். எனவே, உயர் குடிகளைப் போல காவியுடை அணிந்து, தலையில் குடுமி, காதில் கடுக்கன், காலில் பாதக்குறடு, மார்பில் பூணூல், மரக்கட்டை செருப்பு அணிந்து புலித்தோலில் அமர்ந்து கிறிஸ்துவை அறிவித்தார். உயர் குடியினர் வாழும் பகுதியில் குடிசை அமைத்து, புலால் மற்றும் மது அருந்துதல் போன்ற மேலை நாட்டின் இயல்புகளைத் துறந்து, ஓர் இந்துத் துறவியைப் போல தன்னை வருத்திக் கொண்டார். ‘போர்த்துக்கீசியர், ஆங்கிலேயரைப் போன்று நான் ஒன்றும் பரங்கியல்ல; மாறாக, ஆரிய இனத்தோடு தொடர்புடைய உரோமை அந்தணன் நான்எனக் கூறிக்கொண்டார். உயர் சாதியினர் மற்றும் உயர் குடிகளோடு மட்டும் பழகி, கிறிஸ்தவத்தை சத்திய வேதம் என அழைத்தார். தமிழ் மொழியில் புலமை பெற்றதுபோல், மதுரை ஆட்சியாளர்களாகிய நாயக்கர்களோடு நட்பு பாராட்ட தெலுங்கு மொழியையும், அந்தணர்களோடு உறவாட சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார். தன்னை உயர்குல சத்திரியன் என்றும், இராஜகுரு என்றும், ஆரிய இனத்துடன் தொடர்புடைய உரோமை அந்தணன் என்றும் அழைத்துக்கொண்டார்.

உயர் சாதியினரும், உயர் குடிகளும் அவரைத் தேடிவந்து கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள், அற நெறிகளைப் பற்றிய விவாதத்தில் பங்கேற்று தெளிவும் பெற்றனர். 40 நாள்கள் தன்னோடு நீண்ட நெடிய விவாதம் செய்த உயர் குடியைச் சேர்ந்த ஒருவருக்கு நொபிலி 1607 மார்ச் மாதத்தில் திருமுழுக்களித்து அவருக்கு ஆல்பர்ட் என்ற கிறிஸ்தவப் பெயரைச் சூட்டினார். இவரைத் தொடர்ந்து பல நாயக்கர்களும் திருமுழுக்குப் பெற்றனர். 1607 முதல் 1611 வரை உட்பட்ட 5 ஆண்டுகளில் 120 பேருக்குத் திருமுழுக்களித்தார்.

இம்மானுவேல் லெய்தலோ என்ற இயேசு சபைத் துறவி 1609 ஆம் ஆண்டு நொபிலிக்குத் துணையாக மதுரையில் தங்கினார். கடும் சந்நியாச வாழ்வை மேற்கொண்ட நொபிலியோடு பயணிக்க இயலாமல் தடுமாறினார். எனவே, அவரைத் தொடர்ந்து அந்தோனி விக்கோ வந்து தங்கினார். மேலும், கன்னியாகுமரி பகுதியில் நீண்ட நாள்கள் மறைப்பணி புரிந்த தந்தை ஆன்ரு புக்கேரியோ அவர்களும் சில காலம் மதுரையில் தங்கினார். இவரின் கூற்றின்படி, தந்தை நொபிலி தனது புத்திக்கூர்மையால் கிறிஸ்தவத்தை அறிவார்ந்த சமயமாக உயர்த்திப் பிடித்து, அறிஞர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளும் வழி வகை செய்தார். கிறிஸ்துவின்மீது அவர் கொண்ட பற்று போற்றத்தக்கது. அவரது செறிந்த அறிவு, ஆழமான கிறிஸ்துவின் அன்பிற்கும், ஆழத்திற்கும் அழைத்துச் சென்றது என்கின்றார்.   

(தொடரும்)

Comment