No icon

‘ஆண்டவரில் நண்பர்கள்’

யார், யாரைத் தேர்ந்தது?

இறைவன் இனிகோவைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இனிகோ இறைவனைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இருவரும் மாற்றி மாற்றித் தேர்ந்து கொண்டார்களா? இறைவனின் திட்டமும், செயலும் எப்போதும் வியப்புக்குரியவை!

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டில் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர்தான். இவருடைய பிரபுத்துவக் குடும்பம் இறை பக்தியில் திளைத்தாலும், ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவர் பிறந்தது, குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு கோட்டையில் என்றாலும், இளைஞராக வளர்ந்தது ஓர் அரண்மனையில்! பிரபுக் குலத்தில் பிறந்தத் திமிரில் அராஜகம் செய்தவர். முன் கோபத்தில் சண்டை போட்டு கலவரம் பண்ணினாலும், குடும்பச் செல்வாக்கை வைத்து, காவலாளிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தவர். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இளம் பருவத்தை ஓட்டியவர். படித்து அறிவில் உயர வேண்டும் என்ற தேவையை உணராமல் இருந்தாலும், அரசவையில் இருப்பதற்குத் தேவையான திறமைகளைக் கற்றுக் கொண்டவர். அரசக் குடும்பத்திற்கு நெருக்கமான நபராக இருந்ததால், தற்பெருமையும், ஆணவமும் இவரை வழிநடத்தின.

மேலே சொல்லப்பட்டிருக்கிற இவருடைய இளமைப் பருவத்தைப் பார்த்தால், ‘இவர் எதிர் காலத்தில் சாக்கடை அரசியலில் குதித்து, ஆட்சி செய்திருக்கலாம்’, ‘இவருடைய பின்னணியைப் பார்த்தால், நிறைய பணம் சேர்த்து, செல்வாக்கில் உயர்ந்திருக்கலாம்அல்லதுமற்ற பிரபுக்களைப் போல உடலின்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்து சீரழிந்திருக்கலாம்என்ற எண்ணங்கள் தோன்றலாம். ஆனால், பிற்காலத்தில் இவர் நற்செய்தியைப் பரப்பினார்; திரு அவைக்கும், திருத்தந்தைக்கும் உறுதுணையாக இருந்தார் என்று கேள்விப் பட்டால், யாராலும் எளிதில் நம்ப முடியாது. ‘இவரையா இறைவன் தேர்ந்தெடுத்தார்? வேறு நல்லவர்கள் இறைவன் கண்ணில் படவில்லையா?’ என்ற கேள்விகள் எழும். அழிந்து போகும் புகழையும், இன்பத்தையும் தேடி, எங்கோ தலைதெறிக்க ஓடிக்கொண் டிருந்த இவரைத் தடுத்தாட்கொண்டு, தம் பணியை ஆற்ற வைத்த இறைவனின் திட்டத்தையும், செயல்பாட்டையும் பார்க்கிற போது, ‘இதுதான் இறைவனின் பாணியோ!’ என்று நமக்கு வியப்பை உண்டாக்குகிறது. கிறிஸ்தவருக்கு எதிராக உழைத்த சவுலைத் தம்வசப்படுத்தி, பவுலாக மாற்றி, தம் நற்செய்திப் பணியை ஆற்ற வைத்தது ஒரு முன்னுதாரணம்.

சரி, நான் யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்று அநேகர் யூகித்திருப்பீர்கள். இவர்தான் 1491 இல் ஸ்பெயின் நாட்டில் பாஸ்க் என்ற பகுதியில் பிறந்த இனிகோ! லொயோலா என்னும் கோட்டையில் பிறந்ததினால், லொயோலா என்றும், இக்னேஷியஸ் என்று பெயரை மாற்றிக் கொண்டதால் அந்தப் பெயரும் இவருக்கு நிலைத்து விட்டது.

இறைவன் இனிகோவைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இனிகோ இறைவனைத் தேர்ந்தெடுத்தாரா? அல்லது இருவரும் மாற்றி மாற்றித் தேர்ந்து கொண்டார்களா? இறைவனின் திட்டமும், செயலும் எப்போதும் வியப்புக்குரியவை. இனிகோவின் மனமாற்றத்தையும், வகுத்துக் கொண்ட வாழ்க்கைக் குறிக்கோளையும், தடைகளையெல்லாம் தாண்டி அவர் ஆற்றிய பணிகளையும், அவர் இறப்பதற்குள் அவர் அடைந்த சாதனைகளையும், அவர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பயிற்சிகளையும் ஆய்வு செய்கிற போது, இனிகோவை நினைத்து வியப்பில் ஆழ்கிறோம். இறைவனே, இவருடைய முழு மாற்றத்திற்கும் காரணம் என்று உணரும்போது, நம்முடைய தர்க்கரீதியான சிந்தனைகளையும், நுண்ணறிவுப்பூர்வமான கணிப்பையும், மனித எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்குபவர் இறைவன் என்பது புரிகிறது.

இனிகோ, அழகான ஆண் மகனாக, பெண்களைக் கவரும் வசீகரம் நிறைந்தவராக, வாள்வீச்சில் வீரராக வலம் வந்தவர். போரில் ஈடுபட்டு, மாவீரராகத் திரும்பி வந்தால், மனதிற்கினிய மங்கையை மணக்கலாம் என்ற கனவில் வாழ்ந்தவர். பாம்பலுனா என்ற இடத்தில் பிரெஞ்சு நாட்டுப் படையோடு போரிட்டபோது, தன்னோடு போரிட்ட சக வீரர்களெல்லாம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சரணடைய முடிவு செய்த பிறகும், இனிகோ தொடர்ந்து வீரத்துக்கு எடுத்துக்காட்டாகப் போரிட்டார். ஒரு பெரிய குண்டு இவருடைய காலைச் சிதைத்த பிறகு, இவருடைய எதிரிகளே இவருடைய வீரத்தைப் பாராட்டி, இவருடைய குடும்பம் வாழ்ந்த லொயோலாக் கோட்டையில் இவரைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனார்கள்.

ஒரு போர்வீரர் நோயாளிப் படுக்கையில் பல மாதங்கள் கிடப்பது முரண்பாடானது. ஊனமுற்றவராக முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சையைத் தாங்கிக் கொண்டார். காலில் ஓர் எலும்பு வெளியே துருத்திக் கொண்டு அசிங்கமாக இருந்ததால், கவர்ச்சியான வீரராக நடமாட வேண்டும் என்பதற்காக, இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை நடந்தது. ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்த போது ஒரு புதுமையும் நடந்தது. போரடித்தபோது வாசித்த புத்தகங்கள் இவரைப் புரட்டிப் போட்டன. கால் முழுமையாகக் குணமாவதற்கு முன்பே, இயேசுவைத் தேர்ந்து கொண்டார். அதற்குப் பிறகு அவருக்கு அனைத்துமே இயேசுதாம். இயேசுவுக்காகப் புது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க முடிவெடுத்தார். கோட்டையில் கிடைத்த பாதுகாப்பையும், அரசவை தந்த செல்வாக்கையும், பணத்தினால் உருவான வசதியையும், திமிரையும் ஒதுக்கிவிட்டு, தாராள மனத்துடனே திருப்பயணியாக இயேசுவுக்காகப் பயணம் செய்யத் துடித்தார். தபசுகளால் தன்னைத் தூய்மைப்படுத்தினார். செபத்தில் ஆழ்ந்து இறைவனின் சித்தத்தைக் கண்டுணர, அனுபவப் பூர்வமாக வழிமுறைகளைத் தெரிந்து கொண்டார். இந்த அனுபவ முத்துகளைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்க முன்வந்தார்.

சிறுபிள்ளைகளோடு வகுப்பில் அமர்ந்து, மொழிகளையும், இலக்கணத்தையும் படித்தவர் இனிகோ. இயேசுவுக்காக இனிகோ மனிதர்களைப் பிடிப்பவராக மாறியவர். மனங்களை மாற்றியவர். மனிதப் பார்வையில் அடிப்படை ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தில் வேரூன்றியவர்களின் வாழ்வை, இறைவன் என்னும் கொடியில் படர வைத்தவர். உலகம் மதிக்கின்ற பெரிய மனிதராக, பேரும் புகழும்  பெற்றவராக, உயர வேண்டும் என்ற முனைப்போடு வாழ்ந்தவர்களை, ‘உலகத்தையே தமதாக்கிக் கொண்டாலும், வாழ்வை இழப்பாரெனில் பயன் என்ன?’ என்ற சிந்தனைத் தூண்டிலைப் போட்டு இழுத்தவர். ஆன்மிகக் கடலில் வாழ வைத்தவர்.

பாரிஸ் நகரத்தில் பயின்ற போது, இவருடைய ஆன்மிக வேட்கையும், அறிவுப்பூர்வமான வாதமும் அறிவும், ஆற்றலும் நிறைந்த சிலரை மயக்கியது. ‘இறைவனின் அதிமிக மகிமைக்காகவாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர்களைச் சிந்திக்க வைத்தது. முதலில் ஆறு பேரும், பிறகு இன்னும் இரண்டு பேரும் இனிகோவோடு சேர்ந்துஆண்டவரில் நண்பர்கள்என்ற ஒரு குழுவாகச் செயல்பட முடிவெடுத்தனர். அந்தக் கூட்டத்தையும், அவர்களுடைய நோக்கத்தையும் 1540 இல் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார். அதுவே இயேசு சபையாக மலர்ந்தது. மிக விரைவில் ஒரு பெரிய துறவற சபையாக வளர்ந்தது. 1556 இல் ஜூலை 31 இல் இனிகோ இறப்பதற்கு முன், இயேசு சபையினரின் எண்ணிக்கை ஓராயிரமாக உயர்ந்திருந்தது. சவேரியார் மட்டுமல்ல, இன்னும் பல இயேசு சபையினர் அநேக நாடுகளில் பணி செய்ய ஆரம்பித்திருந்தனர்.

இனிகோ, தன் தொடக்க வாழ்வில் தவற விட்டதை எல்லாம் திரும்பப் பெறவேண்டும் என்று முனைந்தார். கற்க வேண்டிய காலத்தில் படிக்காமல் திரிந்த அவர், பிறகு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விளையாட்டுப் பிள்ளையாக முதலில் இருந்தவர், கடின உழைப்பின் அவசியத்தைப் பிறகு உணர்ந்தார். ஏனோதானோவென்று வாழ்க்கையைத் தொடங்கிய அவர் குறிக்கோளுக்காக எதையும் செய்யத் துணிந்தார். ஆன்மிகத்தை அறவே ஒதுக்கிய இவருடைய தொடக்க வாழ்வு, மனந்திரும்பிய பிறகு ஆன்மிகப் பயிற்சியில் ஆழ்ந்தது. ஆட்சி செய்கின்ற அரசருக்கு உதவியாகத் தன் இளமைப் பருவத்தைக் கழித்த அவர், இணையற்ற அரசராகிய இயேசுவின் பணியாளராக அயராது உழைத்தார். தன் சுய விருப்பத்தின்படி வாழ்ந்த இவர், இறைவனின் சித்தத்தின் படி வாழக் கற்றுத் தந்தார். இறைவனின் அன்பை உணர்ந்த இனிகோ இயேசுவை தேர்ந்து கொண்டார்.

இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததினாலே இனிகோ, தான் தொடங்கிய குழுமத்தைஇயேசு சபைஎன்று அழைத்தார். இன்று இயேசு சபையைத் தேர்ந்தெடுத்தவர்கள் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களும் உலகிலுள்ள அனைவரும் இயேசுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இனிகோவின் ஆசை.

Comment