No icon

மரியியல் தொடர் 19 - சென்ற இதழ் தொடர்ச்சி...

பழைய ஏற்பாட்டில் மரியா

. பழைய ஏற்பாட்டில் மரியா

திருவிவிலியம் முழுவதும் மரியாவைப் பற்றிப் பேசுகின்றதுஎன்பர் சிலர். ‘மரியா பற்றிப் பழைய ஏற்பாடு ஒன்றுமே கூறவில்லைஎன்பர் வேறு சிலர். இத்தகைய இரண்டு மாறுபட்ட பார்வைகளுக்கு மத்தியில், மரியா இஸ்ரயேல் மரபைச் சார்ந்த ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின்மூதாதையர் பட்டியல்’ (மத் 1:1-17), கடவுளின் மீட்புத் திட்டம் ஆபிரகாமில் தொடங்கி, மரியாவிடம் பிறந்த கிறிஸ்து எனும் இயேசுவில் நிறைவு பெறுவதாக உள்ளது. இவ்வாறு, இஸ்ரயேல் மரபைச் சார்ந்தவர் எனும் வகையிலும், இயேசுவின் தாய் எனும் வகையிலும், பழைய ஏற்பாட்டில் மரியாவின் முன்னடையாளங்கள் (Marian Types) காணப்படுகின்றனவா என இங்குக் காண்போம்.

i. மரியாவை முன்குறிக்கும் பழைய ஏற்பாட்டு மனிதர்கள்

மரியாவை முன்குறிப்பவர்களாகப் பல பெண்கள் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றார்கள். இவர்கள் அனைவரும்மரியாவுக்கு முன்னடையாளம்” (Type) என அழைக்கப்படுகின்றார்கள். காரணம், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாவைச் சில வடிவங்களில் பிரதிபலிக்கின்றார்கள். அதே வேளையில், மரியா ஓர்எதிர் முன்னடையாளமாகவும்’ (anti-type) வழங்கப்பட்டுள்ளார். இங்கு, மரியாவைஎதிர் முன்னடையாளம்எனும்போது, மெசியாவின் தாய் எனும் முறையில், மீட்பின் வரலாற்றில் மரியா ஆற்றிய தனிப்பட்ட பணியை மையப்படுத்திய ஒன்றாகக் காணவேண்டும்.

மரியாவும், ஏவாளும்

ஆதாம், “வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய்” (உரோ 5:14) புதிய ஏற்பாட்டில் காட்டப்படுகின்றார். அதாவது, ஆதாமினால் மனுக்குலத்திற்கு ஏற்பட்டது, கிறிஸ்துவால் மனுக்குலத்திற்கு ஏற்பட்டதுடன் ஒப்பிடப்படுகின்றது: “ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்” (1கொரி 15:22). ஆனால், புதிய ஏற்பாட்டில் மரியா என்பவர் ஏவாளுடன் எங்கும் தொடர்பு படுத்திப் பேசப்படவில்லை. இருப்பினும், ஏவாள் பற்றி புதிய ஏற்பாட்டில் இரண்டு குறிப்புகள் உள்ளன: “ஏவாள் பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப்போல, நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும், தூய்மையையும் இழந்துவிடுவீர்களோ என அஞ்சுகிறேன்” (2கொரி 11:3). “ஆதாம் ஏமாற்றப்படவில்லை; பெண்தான் ஏமாந்து கட்டளையை மீறினார்” (2திமொ 2:14). இவ்விரண்டு பகுதிகளுமே ஏவாளை எதிர்மறையாகப் படம் பிடித்துக் காட்டும் நிலையில், தொடக்கக் காலக் கிறிஸ்தவ ஆசிரியர்கள் (சிறப்பாக, திரு அவைத் தந்தையர்கள்) அனைவருமே ஏவாளை மரியாவுடன் ஒப்பிடுகின்றார்கள். அதாவது, ஏவாளின்எதிர் முன்னடையாளமாக’ (anti-type) மரியாவைச் சித்தரித்தார்கள்: “பாவமற்ற மரியாவை, பாவம் புரிந்த ஏவாளுடன் ஒப்புமைப்படுத்திப் பேசினர்”. இவ்வாறு அவர்கள், “மரியாவைப் புதிய ஏவாளாகப்பார்த்தார்கள்.

திரு அவைத் தந்தையர்களின் எழுத்துகளில் மரியாவைப் பற்றிக் காணும்போது, மரியாவைப்புதிய ஏவாள்என அழைத்ததுதான் மிகத் தொன்மையான ஒன்று. மறைசாட்சியாகிய புனித ஜஸ்டின் (2ஆம் நூற்றாண்டு), தீமை எவ்வாறு தொடக்கத்தில் சாத்தானின் செயலால் உலகில் நுழைந்தது என்றும், அதை இயேசு கிறிஸ்து எவ்வாறு அழித்தார் என்றும் விளக்கினார். அதாவது, ‘ஏவாள் கன்னியாக இருக்கும்போதே அவர் வழியாகத் தீமை நுழைந்தது; அவ்வாறே, கன்னி மரியா வழியாக மீட்பு வந்தது. இருவருமே தாங்கள் செய்த செயலை உளப்பூர்வமாகச் செய்தார்கள். ஏவாள் பாம்பிற்குச் செவி மடுத்துச் சாவைப் பெற்றெடுத்தார்; மரியா வான தூதருக்குச் செவிமடுத்து வாழ்வைப் பெற்றெடுத்தார்’. இவ்வாறு மறைசாட்சியாகிய புனித ஜஸ்டினைப் பொறுத்தமட்டில், கிறிஸ்து மனிதராகப் பிறந்த நிகழ்வை விளக்கும்போது, ஏவாள் மூலம் நுழைந்த பாவத்தைத் தனது உளப்பூர்வமான ஒத்துழைப்பை வானதூதருக்கு வழங்கியதன் மூலம் மரியா அழித்தார் எனக் கூறுகிறார்.

புனித இரேனியுஸ் (2 ஆம் நூற்றாண்டு) என்பவர், “அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும்” (எபே 1:10) எனும் புனித பவுலின் கோட்பாட்டை (Pauline Doctrine Recapitulation) விளக்கும்போது, ஆதாமினால் வந்த பாவத்தின் விளைவைக் கிறிஸ்து நீக்கினார் எனக் கூறுகிறார். இதை விளக்கும்போது அவர் ஏவாளின் பணியையும், மரியாவின் பணியையும் ஒப்பிடுகிறார்: “ஏவாள் தனது கீழ்ப்படியாமையால் தனது சாவுக்கும், மனுக்குலம் அனைத்தின் சாவுக்கும் காரணமானார். அவ்வாறே, மரியா தனது கீழ்ப்படிதலால் தனது மீட்புக்கும் மனுக்குலம் அனைத்தின் மீட்புக்கும் காரணமானார்”.

ஏவாள்-மரியா ஒப்பீடு என்பது, பல திரு அவைத் தந்தையர்களால் செய்யப்பட்டது. அனைவருமேஏவாள் வழியாகச் சாவும், மரியா வழியாக வாழ்வும் வந்தனஎனக் கூறினர். திரு அவைத் தந்தையர்களின் ஏவாள்-மரியா ஒப்பீடு பற்றிய படிப்பினையை 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அருள்பணியாளர் கோலியஸ் செடுலியஸ் (Coelius Sedulius) என்பவர் பின்வரும் வார்த்தைகளில் தொகுத்து வழங்குகின்றார்: “ஒரு மனிதன் வழியாக அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் அழிந்தனர்; ஒரு மனிதன் வழியாக அனைவரும் மீட்கப்பட்டனர். ஒரு பெண் வழியாக இறப்பின் கதவு திறக்கப்பட்டது; ஒரு பெண் வழியாக வாழ்வு கிடைக்கப்பெற்றது”.

இந்த ஏவாள்-மரியா ஒப்பீடு என்பது அண்மைக் காலத்தில் பல திருத்தந்தையர்களாலும் செய்யப்பட்டுள்ளது. திருத்தந்தை 9 ஆம் பயஸ் எழுதியவிவரிக்க முடியாத கடவுள்’ (Ineffabilis Deus = Ineffable God - 1854) எனும் திருத்தூது அமைப்பு விதித் தொகுப்பில், மரியாவின் அமல உற்பவத்தை விளக்கும்போது இவ்வாறு கூறுகின்றார்: “கடவுளின் தாயினது புனிதத்தை விளக்கும் விதமாக, திரு அவைத் தந்தையர்கள் மரியாவை அடிக்கடி ஏவாளுடன் ஒப்பீடு செய்தது மட்டுமல்ல; அவர்கள் அவரை ஏவாளுக்கு மேலாக உயர்த்தினார்கள்.” திருத்தந்தை 6 ஆம் பால் எழுதிய இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை (Credo of the People of God), ‘மரியா வணக்கம்’ (Marian Cult) எனும் திருத்தூது ஊக்கவுரை ஆகிய இரண்டிலும் மரியாவைப்புதிய ஏவாள்எனக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு, மரியா மீட்பின் வரலாற்றில் ஆற்றிய பணி என்பது, கடவுள் எவ்வாறு அனைத்தையும் புதியதாய் மாற்றுகின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. அதாவது, மரியாவின் கீழ்ப்படிதலால், இவ்வுலகில் மனிதராகப் பிறந்த இயேசு கிறிஸ்து ஆதாம், ஏவாள் ஆகியோரின் கீழ்ப்படியாமையால் விளைந்த பாவத்தை அழித்தார் எனக் காண வேண்டும்.    

(தொடரும்)

Comment