“இவரே உம் தாய்!”
மரியன்னை மாநாடு – 2023 சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்
நம் பயணத்தின் வழித்துணையாம் மரியாவின் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடப்போம்!
சென்னை- மயிலை உயர் மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்த மரியன்னை மாநாட்டைக் கொண்டாட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. 1921 ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 6 வரை சென்னையில் நிகழ்ந்த முதல் மரியன்னை மாநாட்டின் நூற்றாண்டு நினைவு; ஒருங்கிணைந்த சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பாதுகாவலியாக மயிலை அன்னை அறிவிக்கப்பட்டதன் 70 ஆம் ஆண்டு நினைவு; இரண்டாம் உலகப் போரிலிருந்து சென்னை மாநகரைக் காப்பாற்றியதற்காக நன்றியாக, கீழ்ப்பாக்கம் நேர்ச்சை திருத்தலத்தை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணமாக்கியதை நினைவுகூறும் நிகழ்வு; மற்றும் பெசன்ட்நகர் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் எனப் பல வரலாற்றுப் பதிவுகளைக் குறித்துக் காட்டுகிறது.
2023, ஆகஸ்டு மாதம் 12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாடு அருள்பணியாளர்களுக்கும், இருபால் துறவறத்தாருக்கும் மற்றும் பொதுநிலையினருக்கும் சிறப்பான தருணமாக அமைவதோடு மட்டுமல்லாமல், நமது நம்பிக்கை மற்றும் மறைப்பணியில் மரியன்னையின் உடனிருப்பைக் கண்டுணரும் தருணமாகவும் அமையும் என உறுதியாக நம்புகிறேன். மேலும், புதிய வழிமுறைகளையும், விடியலையும், நம் பயணத்தின் உடன் பயணிகளையும் கண்டுணர்ந்து, மரியன்னையோடு பயணித்து, புதிய திரு அவையாக நாம் மலர வாய்ப்புகளைத் தரும் எனவும் நம்புகிறேன்.
நமது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் இலக்கை மரியன்னை முன்னறிவிப்பதையும், திரு அவையின் ஒருங்கிணைந்த இக்கூட்டுப் பயணத்தின் மிகச் சிறந்த மாதிரியாக மரியன்னை உடன் வருவதையும் இம்மாநாடு உறுதிப்படுத்துகிறது. எலிசபெத், சக்கரியா, திருமுழுக்கு யோவான் (லூக் 1:44) ஆகியோரைச் சந்திக்கச் சென்றபோதும், சிமியோன், அன்னா (லூக் 2: 22-38) ஆகியோரைச் சந்தித்து திருச்சட்டத்தை நிறைவேற்ற சென்றபோதும், ‘மகிழ்ச்சி’ எனும் கொடையை மரியா கொண்டு சென்றது போல, அவரது உடன் பயணிகளான நமக்கும் அத்தகைய மகிழ்ச்சியை வழங்குவாராக!
இப்பயணத்தில் யூதாவின் மலைப்பகுதிகளையும், எருசலேம் மதில்களுக்கு வெளியே உள்ள கல்வாரி மலைகளையும், இன்றைய காலத்தின் மேல் அறைகளையும் (Upper Rooms) நாம் அடைய (லூக் 1:39, யோவா 19:25, திப 1:14) மரியா நம்முடன் பயணிப்பாராக! இறைவேண்டலிலும், இறைவனின் அன்னையாம் மரியாவுடனும் தொடர்ந்து ஒன்றித்திருந்த தொடக்கத் திரு அவையின் உறுப்பினர்களுடைய ஆன்மிகப் பயணத்தில் அன்னை உடனிருந்ததுபோல, நமது பயணத்திலும் உடனிருப்பாராக! (திப 1:14).
“இது எப்படி நிகழும்?” (லூக் 1:34) என்ற ஐயம் களைந்து, கடவுளின் திட்டம் நிறைவேற தன்னை உடனே அர்ப்பணித்து, “உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று மொழிந்ததிலும், “தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக் 2:19) என்று இறை அனுபவத்தை உள்ளத்தில் பொதிந்து வைத்து தன்வயப்படுத்தியதிலும் மரியன்னை நமக்குக் காவியமாக முன்நிற்கிறார். “வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்; தூயவர் என்பதே அவரது பெயர்” (லூக் 1:49) என்று துணிவோடு தனது பாடலில் மரியா முழங்கியது போல, நாமும் கடவுளின் வல்லமையை, அவரது வல்ல செயலை கூட்டொருங்கியச் செயல்பாடுகளில் கண்டுணர வேண்டும்.
“இவரே உம் தாய்!” (யோவா 19:27) என மரியாவைக் கொடையாக அளிப்பதன் வாயிலாக நமது அருளடையாளமான உறவிலும், மரபுவழி தாய்மை உறவிலும் அவரை நமது அருள்பணிகளில் கண்டுணர இயேசு, மரியாவை நமக்குத் தாயாக முன்னிறுத்துகிறார். “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” (யோவா 2:3) எனக் கானாவூரின் திருமணத்தில் மரியா பரிந்துரைத்தது, நமது சமூகத்தில் வாய்ப்புகள் அற்றோருக்கும், அவர்களின் அன்றாடத் தேவைக்கும் நாமும் உணர்வுப்பூர்வமான உடனிருப்பைக் கொண்டிருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
ஆகவே, நம் பயணத்தின் வழித்துணையாக மரியாவின் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடப்பது என்பது, நமது வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து, செபம் மற்றும் சமூக உரையாடல் வாயிலாகக் கடவுளின் திட்டத்தை அறிந்து, ‘மகிழ்ச்சி’ எனும் கொடையைத் திரு அவையிலும், சமூகத்திலும் நிராகரிக்கப்பட்ட, முகவரி இழந்த மக்களுடன் பகிர்வதாக அமைய வேண்டும்.
நம்மை அச்சுறுத்தும் இன்றைய சமூகச் சூழலில், மரியாவின் இம்மாதிரியை நமது உறுதிப்பாடாகக் கொண்டிருக்க இம்மாநாடு வழிகாட்டுகிறது. குறிப்பாக, அதிகார வர்க்கத்தின் பிரித்தாளும் அரசியல் சூழ்நிலைகள், சிறுபான்மையினர்மீது திட்டமிட்டுத் தொடுக்கப்படும் வன்முறைகள், மதச்சார்பின்மைக்கு எதிரான அச்சுறுத்தல்கள், நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராக வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாடுகள், பெருகி வரும் இன, வர்க்கம் சார்ந்த பிரச்சினைகள், காவிச்சாயம் பூசப்படும் கல்வி முறை, அரசு நிர்வாகம் மற்றும் பொதுவெளி கருத்தாக்கம் மற்றும் பெருகி வரும் ஏழை- பணக்காரர் பொருளாதாரச் சமூக இடைவெளி என்பன நிறைந்த இச்சூழலில் இம்மாநாடு அரங்கேறுகிறது. முரண்பாடுகளுடன், சமதளமற்ற பயணமாக இச்சூழல் அமைந்தாலும், கூட்டொருங்கியக்க அமைப்பாக மரியின் வழியில் நம்பிக்கையோடும், பொறுமையோடும் நாம் பயணத்தைத் தொடர்வோம்.
மனிதாபிமானமற்ற முறையில், கோர வன்முறைகளின் உச்சத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மணிப்பூரின் இரு சகோதரிகள் சந்தித்தக் கொடூரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சூழலில், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில், பல்வேறு சமய, நம்பிக்கை, மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்கள் மத்தியில் ஒன்றிப்பை உறுதிப்படுத்தி, மரியின் வழியில் இணைந்து பயணித்து, அமைதி நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது நமது கடமை.
அமைதி நிறைந்த எல்லாரையும் ஏற்றுக் கொண்ட உண்மையான, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் படைக்க ஒருங்கிணைந்த அர்ப்பணத்துடன் நாமனைவரும் நமது நம்பிக்கைக்குச் சான்றுபகர, இம்மாநாடு நம் ஒவ்வொருவரையும் தூண்டும் என முழுமையாக நம்புகிறேன். 2023 - மரியன்னை மாநாடு, முதல் மரியன்னை மாநாட்டின் அடிப்படைத் திட்டங்களை நிறைவு செய்ய வழிகாட்டும் எனவும் நம்புகிறேன். ஆகவே, மறைவட்டங்கள், மறைமாவட்ட பணிக்குழுக்கள், பங்குகள், அன்பியங்கள், குடும்பங்கள், மறைத் தூதுக் கழகங்கள், நிர்வாக மற்றும் பங்கேற்பு அமைப்புகள் என நாமனைவரும் ஒரே மறை மாவட்டமாக ஒன்றிணைந்து நமது உறவையும், அன்பையும் அன்னையோடும், திரு அவையோடும் புதுப்பித்துக் கொள்வோம்.
அன்னையோடு இணைந்து பயணித்து, கவனமுடன் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து, காலத்தின் தேவையறிந்து இறைவன் வெளிப்படுத்தும் அடையாளங்களை உணர்ந்து, நமக்கான இறை திட்டத்தை அறிந்துகொள்வோம்! அமைதியும், எதிர்நோக்கும் நிறைந்த ஒருமைப்பாட்டை நாம் கண்டுணரவும், அதை ஊக்கப்படுத்தவும் முற்படுவோம்!
செபம் நிறைந்த வாழ்த்துகளுடன்,
+ மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி D.D., S.T.D.,
பேராயர், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம்
Comment