No icon

தனித்த மரபினர்

பன்னாட்டு உலக பழங்குடியினர் தினம் - ஆகஸ்டு-9

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 9,  ‘பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்என்று  கடைப்பிடிக்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்மொழியப்பட்டு,  2007, செப்டம்பர் 13 அன்று இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆண்டு தோறும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணை நிலங்களில் வாழ்ந்தவேடுவர்என்ற குறவர்களே மூத்தப் பழங்குடியினர் என்பது நமது இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் தரும் சான்று. உலகில் முதலில் தோன்றிய மக்கள் இத்தகைய பழங்குடி குறவர்களே! உலகமெங்கும் இப்பழங்குடி மக்கள் வெவ்வேறு பெயர்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொல் பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்ற குறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் பழங்குடி மக்களின் வாழ்வியல், வாழ்வாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

இப்பழங்குடி மக்கள்பூர்வ குடிகள்’, ‘ஆதி வாசிகள்என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனித்துவமான மரபுகளைக் கொண்டவர்கள். தங்கள் மூதாதையரின் கலாச்சாரங்களை, பண்பாடுகளை முன்னிறுத்தி, தங்கள் வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொண்டவர்கள். இது ஒரு மரபு சார்ந்த சமூகம். இவர்கள் இந்நாட்டின் தொன்மையான, பூர்வ குடிகள். இம்மண்ணுக்கும், மலைக்கும் முற்றிலும் உரிமை கொண்ட மண்ணின் மைந்தர்கள். இவர்கள் இந்திய மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கக்கூடியவர்கள். 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10.43 கோடி மக்கள் பூர்வ குடிகள். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 8.6 விழுக்காட்டினர்.

மேலும், பழங்குடியினரின் எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே இரண்டாவது இடம் பெற்றிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 645 பூர்வ குடிகள் இந்தியாவில் இருப்பதாக அங்கீகரிக்கிறது. இப்பழங்குடியினர் இந்திய நாடு முழுவதும் பரவி விரிந்து தொன்மையான மரபுகளை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் இச்சமூகம், கல்வி கற்றலிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இச்சமூகத்தின் குழந்தைகளும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் உழைக்க வேண்டியிருப்பதால், கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டாத சூழலே இன்றும் தொடர்கிறது. போதிய போக்குவரத்து வசதிகளும், மற்ற அடிப்படை வசதிகளும் இல்லாது மலைவாழ்விடங்களிலும், தொலைதூர சிறு கிராமங்களிலும், காடுகளிலும் இவர்கள் வாழ்வதால், கல்வி நிலையங்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில், நமது சமூகப்பணி இவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கட்டும். மலைவாழ் மக்கள் மகிழ்வான வாழ்வு கொண்ட மக்களாக மாறட்டும்.

இந்நாளில், இவர்களின் தனித்துவமான மரபுகள் பேணப்பட உறுதி ஏற்போம்! இவர்களின் வாழ்வாதாரம் உயர உதவிடுவோம்! இளைய சமுதாயம் கல்வி ஒளி பெற வழிவகை செய்திடுவோம்! ‘பழங்குடியினத்தவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளோம்என மார்தட்டிக்கொள்ளும் இந்த பா... அரசு ஆளும் மணிப்பூரில்தான் இன்று பழங்குடியினத்தவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இம்மக்கள் சொல்லொண்ணா வேதனை அடைந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டை மீட்போம்! பழங்குடியினர் நலன் காப்போம்!

Comment