‘நான் ஆண்டவரின் அடிமை’
விண்ணையும் மண்ணையும் நேசித்த மரியாவின் பாடல்
ஆண்டவரை எனது உள்ளம்...” எனத் துவங்கும் மரியாவின் பாடல் புது உலகைப் படைக்கும் புரட்சிப் பாடல் ஆகும். பழைய ஏற்பாட்டின் பல இறைவாக்கியங்களை இப்பாடல் உள்ளடக்கியிருப்பினும், புதிய ஏற்பாட்டின் விடுதலை நாயகன் இயேசுவின் போதனைகளை முன்னிறுத்தும் பாடலாக அமைந்திருக்கின்றது.
இறைப்பற்றினால் எழும் ஆழ்ந்த உணர்வுகளையும், உருவாகப் போகும் அருளாட்சியின் பரிமாணங்களையும் இங்கே காண்கின்றோம். இறைபுகழ்ச்சியும், நன்றியும் தவழும் மரியாவின் உள்ளம் இறைவன் அருள்கின்ற சமத்துவ உலகினை நிதர்சனமாகக் காண்கின்றது.
‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று தன்னைத் தாழ்த்திக் கொண்ட மரியா, உலகில் இறைவன் தந்த உறவுகளில் தன்னை இணைத்துக் கொண்டு உதவிக்கரம் நீட்டுவதை இப்பாடலின் பின்னணியில் காண்கின்றோம். கருவுற்ற இளம் பெண்ணான மரியா, யூதா மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று, உறவினர் எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வில் ஏற்படும் மாட்சிமிகு எண்ணங்களையும், உயர் பரிமாற்றங்களையும் நோக்கும்போது மரியாவின் வாழ்வில் இருக்கும் மேன்மையை, அவரின் விசுவாச வியத்தகு நிலையை நாம் கண்டுணர முடியும்.
குறிப்பாக, “அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்” (லூக் 1:50-3) எனும் வரிகள் இறைவனின் கருணையை, இரக்கத்தை, வலிமையை மற்றும் வல்லமையை வெளிப்படுத்துகின்றன.
‘மரியாவின் பாடல் உலகிலே இருக்கக்கூடிய மிகச்சிறந்த புரட்சிப்பாடல்’ என்றார் ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற அறிஞர். காற்றின் வலிமை புயலின்போது புலப்படுகின்றது; நீர்த்துளியின் ஆற்றல் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் தெரிகிறது; நெருப்பின் சக்தி எரிமலைப் பிழம்பில் வெடிக்கிறது; மனித வாழ்வின் மென்மைக்குள்ளும் பெரும் மாற்றத்திற்கான ஆற்றல் இருக்கின்றது.
மரியாவின் பாடலில் இருக்கும் புரட்சிமிகு எண்ணங்கள் புதிய சமுதாயத்திற்கான முரசு. உலகின் பல கோட்பாடுகளையும், மரபுகளையும் மாற்றி வைக்கிறது இப்பாடல். உலகின் மனிதர்களின் வாழ்வு நிலைகளை மாற்றியமைக்க கட்டளை பிறப்பிக்கின்றது. இறையாட்சியில் நம்பிக்கைக் கொண்டோருக்கு எழுச்சியைத் தருவதாகவும், புதிய வாழ்வின் விடியலுக்காக ஏக்கத்தோடு காத்திருப்போருக்குப் பிடிப்பைத் தருவதாகவும், சாதி வன்கொடுமையால் பல ஆண்டுகள் வாழ்விழந்து கிடப்போருக்கு வாழ்வைத் தருவதாகவும் இப்பாடல் அமைந்திருக்கிறது. சமத்துவம் படைப்பதும், எளியோர் ஏற்றம் பெறுவதும் மரியாவின் எதிர்நோக்கு. மரியாவோடு இறையாட்சியில் தோழமை கொண்டுள்ள நாம், அன்னை மரியாவின் புரட்சிமிகு வார்த்தைகளை நமதாக்குதல் நம் கடன். இப்பாடலில் மூன்று தளங்களில் புரட்சியைக் காண்கிறோம்.
1. பண்பாட்டுப் புரட்சி
சமூகத்தில் தங்களை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு, பிறரை இழிவாக நடத்துபவர்களைக் கடவுள் சிதறடிக்கிறார். ஏற்றத்தாழ்வுகளை வழிவகுத்து கடைப்பிடிப்பவர்கள் சிதறடிக்கப்பட வேண்டியவர்கள். சாதிப் பிரிவினைகளைத் தக்க வைக்க விழைவோர், ஆதரிப்போர் யாவரும் கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பது தெளிவு.
“அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை” (நீதி 16:18).
பிறப்பால் ஒருவரைத் தாழ்ந்தோர் என்பதும், நிறத்தால் ஒருவரை இழிவானவர் எனக் கருதுவதும் பாவச்செயல்கள். நம் நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடாகிய சாதி அமைப்பு முறை இன்றளவும் கொடுந்தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றது. மரியா சமூக எழுச்சியை, பண்பாட்டுப் புரட்சியை முன்வைக்கிறார். திருச்சபைக்குள்ளும் இந்தச் சாதி மோதல்களைத் தீர்க்கும்வரை விடிவு இல்லை. இறையாட்சியை முன்னிறுத்துவதும், இறைவனது தலைமையை ஏற்று சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதும் பண்பாட்டுப் புரட்சியை உருவாக்கும்.
2. அரசியல் புரட்சி
‘வலியோரை அரியணையிலிருந்து தூக்கி எறிகின்றார்’ இறைவன். ‘வலியோருக்கே வாழ்வு’ என்ற உலக நியதியை மாற்றி, தாழ்ந்தோரை உயர்த்தும் இறையாட்சி மரியாவின் பாடலிலே சத்தமாய்க் கேட்கின்றது. ஆட்சி ஆண்டவருக்கு உரியது என்றும், மாட்சி அவருக்கே உகந்தது என்றும் உணர்ந்து, பதவியைப் பணிவிடை செய்வதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்.
அரசியலில் யாரும் நிரந்தரம் இல்லை என்பதை உலகறியச் செய்கிறார் மரியா. தாவீது உயர்த்தப்பட்டதும், சாமுவேல் அர்ச்சிக்கப் பெற்றதும் இறை செயல்பாட்டின் திருப்பு முனைகள். விவிலியம் சாற்றும் இப்புரட்சிக்கு நாமும், நம் கரங்களை இணைக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவு.
3. பொருளாதாரப் புரட்சி
‘பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்’ நம் இறைவன். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் இறைவனுக்கு விரோதமானவை என்பதும், இதை மாற்றி வைப்பதே அவருக்கு ஏற்புடையது என்றும் மரியாவின் பாடலிலே அறிகின்றோம்.
“நமது ஏற்றத்தாழ்வுகள் பணக்காரரைக் கொழுக்க வைக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினரைத் தடுமாற வைக்கின்றன. ஏழைகளைச் சித்திரவதை செய்கின்றன” என்றார் மாத்யூ அர்னால்டு.
ஏழ்மை என்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையல்ல; இது பெரும் சமூகச் சீரழிவு. இன்றைய சமுதாயத்தில் பேராசையும், பொறாமையும் ஆட்சி செய்வதால், பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. பகிர்ந்து வாழ்வதும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்வதும் இறையரசின் புரட்சி கீதமல்லவா!
நிலம், செல்வம், பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது கட்டாயக் கடமையாகின்றது.
மரியாவின் பாடலில் இருக்கும் இறைவாக்கு நனவாக வேண்டுமெனில் பண்பாட்டிலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் மாற்றங்கள் மிக மிகத் தேவை!
Comment