No icon

தாய்க்குத் திருநாள், புத்தாண்டு முதல் நாள்!

‘இயேசுவின் தாய்’

புத்தாண்டே வருக வருகவே - இந்தப் பூமி எங்கும் வளங்கள் தருகவேகடந்த ஆண்டு முடிவடைந்து, புதிதாய் ஓர் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் தந்திட அன்னையின் பெயரால் வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஒவ்வொரு நாள் காலையிலும் தின நாள்காட்டியில் முந்தைய நாள் தாளைக் கிழிக்கின்றபோது புது நாள் விடிந்த மகிழ்ச்சி நமக்கு. அதேவேளையில், முந்தைய நாளை ஆய்வு செய்ய நம்மை அழைக்கிறது என்பதுதான் நமக்கு அது கற்றுத்தரும் பாடம். ஒவ்வொரு நிதியாண்டு முடியும்பொழுதும் தொழில் நிறுவனங்கள் தங்களின் வரவு-செலவு கணக்கைப் பார்த்து, முடிவடைந்த ஆண்டு இலாபமா? நட்டமா? எனப் பார்க்கின்றன.

ஒவ்வொரு கல்வியாண்டும் முற்றுப்பெறும்பொழுதும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பளித்து, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனரா? இல்லையா? என அறிவிக்கின்றன. ஆண்டுகளைப் பழையதாக்கிப் பின்தள்ளிப் புத்தாண்டை வரவேற்கும்பொழுது, நாம் நம்மை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்யவும், நம் பாதையைத் திரும்பிப் பார்க்கவும், பயணத்தைத் தெளிவாக்கிக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது புத்தாண்டு தினம். இறந்த காலத்தில் நுழைந்து, மிக விரைவாக நிகழ்காலத்திற்குள் சென்று, எதிர்காலத்திற்கான சிந்தனைகளைத் தீட்டிக்கொள்ளும் நாள் இது. நம்மை நாமே புடம்போட்டுப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பே இந்தப் புத்தாண்டு!

ஆண்டு மட்டும் புதிதாய்ப் பிறந்தால் போதுமா? நாமும் புதிதாய்ப் பிறக்க வேண்டாமா? பெற்ற அனுபவத்தைக் கொண்டு நம் எண்ணங்களாலும், செயல்பாடுகளாலும் புதிய மனிதனாய் நம்மை மாற்றிக் கொண்டிருந்தால்தான் அது உண்மையான புத்தாண்டாகும். தனிமனித மாற்றத்தில்தான் சமூக மாற்றமிருக்கிறது. தனிமனிதன் தன்னை மாற்றத்திற்கு உட்படுத்தினால் எளிமை எண்ணங்கள் உயரும்; ஒற்றுமை உணர்வு தழைத்தோங்கும். அன்பும், ஆற்றலும் பிறப்பெடுக்கும். அத்தகைய அன்பு நம் மனங்களில் ஆட்சி செய்ய இப்புத்தாண்டில் வேற்றுமை ஒழியவும், ஒற்றுமை ஓங்கவும், தன்னலம் தகரவும், பொதுநலம் பொங்கவும் இறை அருள் வேண்டுவோம்! அன்னையின் துணை நாடுவோம்.

தாயெனும் போதினிலே...

ஆண்டின் முதல் நாளில் நாம் அன்னைக்குப் பெருவிழா எடுக்கின்றோம். அன்னை இறைவனின் தாய் என்ற பேருண்மையைப் பறைசாற்றுகின்றோம். நம் அன்னை மரியாஇயேசுவின் தாய்என்னும் உண்மை திருவிவிலியத்திலும் சரி, வரலாற்றிலும் சரி, ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்பட முடியாத ஓர் உண்மை. இயேசு உலகத்தை மீட்க வந்த மெசியாவென்றால், அவரை இந்த உலகத்தில் ஈன்றெடுத்தவர் மெசியாவின் தாய் அல்லவா! இயேசு மீட்பர் என்றால், அவரை ஈன்றெடுத்தவர், மீட்பரின் தாயல்லவா! இயேசு இறைமகனென்றால், அவரை ஈன்றெடுத்த மரியா இறைவனின் தாயல்லவா! மரியா குறித்த மறைக் கோட்பாடுகளிலேயே இது தான் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். மரியாவின் கன்னிமை என்பது ஓர் அழகான அடையாளமென்றால், அவரது மேன்மையை உணர்த்துவது மரியாவின் தாய்மையே. இந்தத் தாய்மையைச் சுற்றிதான் அவரைப் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும், நிகழ்வுகளும் சுழல்கின்றன.

ஒரு மறையுண்மையைக் குறித்துச் சிந்திப்பதற்கும், சிந்தித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாகக் கணிப்பதற்கும், கணித்து ஏற்றுக்கொண்டு, தீர்க்கமாக விசுவாசிக்கக்கூடிய மறையுண்மையாகப் பிரகடனம் செய்வதற்கும் 1) திருவிவிலியப் பின்னணி (Scriptural Background), 2) திருச்சபைத் தந்தையர்களின் கூற்று (Patristic Tradition), 3) திருவழிபாட்டுப் பின்னணி (Liturgical Tradition), 4) மக்களின் விசுவாசப் பின்னணி (People’s Faith or Popular Piety) ஆகியவை சான்றுகளாக வேண்டும். இத்தகைய விசுவாசச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டுமரியா இறைவனின் தாய்என்னும் விசுவாசக் கோட்பாட்டை கி.பி. 431-ஆம் ஆண்டு எபேசு நகர் பொதுச்சங்கம் அறிக்கையிட்டது. இம்மாபெரும் மகிழ்வைக் கொண்டாடுவதற்காக உரோமையிலே திருத்தந்தை செலஸ்டின் ஓர் அழகிய பேராலயத்தை எழுப்பி, அதனை அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்துமேரி மேஜர் பேராலயம்என்று பெயரும் சூட்டினார். இன்றும் இப்பேராலயம் அன்னையின் புகழ் பாடிக்கொண்டு அதிசயச் சின்னமாக உயர்ந்தோங்கி நிற்கின்றது.

இன்று பல நூற்றாண்டுகளைக் கடந்து பயணித்திருக்கும் திரு அவை பற்பல தடைகள், விவாதங்கள், வெளிப்பாடுகள் மற்றும் விசுவாச அனுபவங்களின் மூலம் நிறைய திடமும், தெளிவும் பெற்றிருக்கின்றது. மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் மரியாவுக்கான இடம் ஒருபோதும் மங்கியதில்லை. இயேசுவின் மாண்புமிக்கத் தாயாக, தன்னிகரில்லாச் சீடராக, துவளும் மனிதருக்குத் தூண்டுகோலாக, வளரும் மாந்தருக்கு வாஞ்சையாக, தவிக்கும் மனிதருக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் நம் அன்னை. இறைவார்த்தையை ஏற்று, கருவில் உருக்கொடுத்து, வளர்த்து, பணிக்கு அனுப்பி வைத்து, தானும் பணியில் அவருக்கு அருகிலிருந்து ஆக்கம் தந்த மரியா இயேசுவுக்கு மட்டும் தாயல்ல, அவரை ஏற்றுக்கொண்டு வாழத் துடிக்கும் நம் அனைவருக்குமே தாயாக விளங்குகின்றார். ஆகவே தான், தாயெனும் போதினிலே நம் மனம் அவரையே தேடுகிறது; என்றும் நாடுகிறது. அத்தகைய அன்னையை நமது வாழ்வின் வழிகாட்டியாய்ப் பற்றுவோம். அவரேஉண்மைஎனும் இயேசுவை அடைய இனிய, எளிய, உறுதியான வழி. அனைவரும் இப்புதிய ஆண்டில் எல்லா நலமுடன் வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன்! இறையருள் வேண்டுகிறேன்!

Comment