உறவுகளைச் சீர்செய்வதன் வழியாய் உடல்நலனைச் சீர்செய்வோம்!
உலக நோயாளர்கள் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி
ஒரு ஞானமிக்க மருத்துவர் சொன்னார், “மனிதனுக்கு அவசியமான ஆகச்சிறந்த மருந்து அன்பு.”
சிலர் கேட்டார்கள், “ஒரு வேளை அது வேலை செய்யவில்லையென்றால்?” சிரித்துக்கொண்டே அந்த மருத்துவர் சொன்னார், “அளவைக் கூட்டுங் கள்” என்று.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1991-ஆம் ஆண்டு நடுக்கவாத நோயால் (Parkinson) பாதிக்கப்பட்டார். அந்த நோய் அவரிடம் கண்டறியப்பட்ட ஓராண்டு கழித்தே அவர் உலக நோயாளர்கள் தினத்தை ஏற்படுத்தினார். 1993, பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் முறையாக உலக நோயாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
லூர்து அன்னையைத் தேடி வருகிற எண்ணற்ற பக்தர்கள் அன்னையின் பரிந்துரையால் அவளது திருத்தலத்தில் நலமடைந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே, லூர்து அன்னையின் திருவிழா நினைவாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11-ஆம் தேதி இந்தத் தினத்தைக் கொண்டாட திருத்தந்தை ஆணை பிறப்பித்தார். மேலும், இதே நாளில் தான் 2013-ஆம் ஆண்டு திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி, தனது திருத்தந்தை பொறுப்பைத் துறந்தார்.
ஆண்டுக்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகிற இந்த உலக நோயாளர்கள் தினம், நோயாளிகள், அதிலும் குறிப்பாக, நாள்பட்ட மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளுக்கு முறையான பராமரிப்புக் கொடுக்கப்பட வேண்டியதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இந்த நாள் நோயாளர்களுக்காகச் செபிக்கவும், அவர்களைப் பராமரிக்கிறவர்களைக் கௌரவப்படுத்தவும், மேலும், துன்புறுதல் குறித்த ஆன்மிகத்தைக் குறித்துத் தியானிக்கவும் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
சவால்களைச் சந்திக்கிறபோது தளராது இருப்பதற்கும், அமைதியாக அதை எதிர்கொள்வதற்கும் அடிப்படையாக இருக்கும் விசுவாசத்தின் பங்கை எடுத்துக்காட்டுவதே இந்நாளின் நோக்கமாகும். நோயுறும் தறுவாயில் நம்மில் புரிதலையும், ஒற்றுமையையும் வளர்க்கும் விதமாக இந்த நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ நிறுவனங்கள் நோயாளர்களுக்கு மருந்துகள், உணவுகள், ஆன்மிக வழிகாட்டுதல்களைக் கொடுப்பதன் வழியாக இந்நாளைச் சிறப்பிக்கின்றனர்.
இவ்வாண்டில் உலக நோயாளர்கள் தினத்தின் 32-வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கின் றோம். ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று-உறவுகளைச் சீர் செய்வதன் வழியாய் உடல்நலத்தைச் சீர்செய்வோம்’ என்பது இவ்வாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிற உலக நோயாளர்கள் தினத்திற்கான திருத்தந்தையினுடைய செய்தியின் தலைப்பாகும். தொற்றுநோய்களும், தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும் தனிமைப்படுத்துதல், தனிமை ஆகிய உணர்வுகளை அதிகப்படுத்தியிருப்பது திண்ணம். ஆனால் அமைதியும், வளமையும் நிறைந்த சமூகங்களில் கூட மனிதர்கள் நோய், முதுமை மற்றும் இதர பாதிப்புகளின் விளைவாகக் கைவிடப்படுதல், தனிமை ஆகிய உணர்வுகளை அனுபவிப்பதைத் திருத்தந்தை எடுத்துக்காட்டுகின்றார். இது அவர்களுக்கான உறுதியான சமூகப் பாதுகாப்புத்தளங்களையும், ஆதரவு அமைப்புகளையும் உருவாக்குவதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நம் சமூகங்களில் தனிமனித மேலாதிக்கத்தையும், உற்பத்தித் திறனையும் முன்னிறுத்துகிற மனப்பாங்கு; முதியோர், நோயாளிகள், ஊனமுற்றோர் ஆகியோரைப் பயனற்றவர்களாகவும், சமூகத்தின் சுமைகளாகவும் கருதும் மனநிலைக்கு வழியாக அமைகின்றது. இந்தத் ‘தூக்கிப்போடுகிற’ மனநிலை அடிப்படை உரிமைகளான சுகாதாரம், மனித மாண்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறைக்கின்றது.
கலாச்சாரம் தனிமனிதனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறபோது, எதைப் பற்றியும் கவலைப் படாது, உற்பத்தியை மட்டும் உயர்த்திப் பிடிக்கும் ஒரு போக்கு மற்றும் செயல்திறன் மட்டுமே என்ற ஒரு மாயக்கட்டமைப்பு ஆகியவை உருவாக வழியாக அமையும். இத்தகைய போக்கு, தனிமனிதர்களின் செயல்பாடுகள் குறைகிறபோது இரக்கமின்மையையும், புறக்கணிப்பையும் அவர்கள்மீது திணிப்பது உறுதி என்று திருத்தந்தை கூறுகின்றார்.
நாட்டுத் தலைவர்கள் சுகாதார உரிமைகளைக் குறைத்து மதிப்பிடுவது குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியிருப்பது இக்காலத்திற்கு ஏற்ற தேவையான ஒன்றாகும். இப்படிச் சுகாதாரத்தை, வழங்கப்படுகின்ற சேவைகளில் ஒன்றாகக் குறைத்துப் பார்ப்பது மனிதாபிமானத்திற்கு பாதிப்பையும், பராமரிப்பின் தரத்தைக் குறைக்கவும் வகைசெய்யும். கடவுள் ஆதாமைப் படைத்ததையும், தோழமையின் அவசியத்தையும் மையப்படுத்துவதன் வழியாக உறவுகளோடு ஒன்றித்து வாழ்வது என்பது நமக்கு இயற்கையாக அமையப்பெற்ற இயல்புகளில் ஒன்றாகும் என்பதைத் திருத்தந்தை எடுத்துக்காட்டுகின்றார். தனிமனித தன்னிறைவு என்பது உறவுகளின் ஒன்றிப்பால்தான் நிகழ்கின் றது. அர்த்தமுள்ள உறவுகள், நட்பு, காதல் ஆகியவை தனிமனித தன்னிறைவிற்கு அவசியப்படுகின்றது என்ற தனது வாதத்தை, மூவொரு கடவுளின் பிணைப்பைக் குறித்த தனது சிந்தனையின் வழியாய் திருத்தந்தை நிறுவுகின்றார்.
சவால்மிக்க தருணங்களில் கூட நிலைத்திருப்பதன் வழியாய் உறவுகள் துன்ப நேரங்களில் வலிமையையும், ஆதரவையும் தருகிற ஆதாரமாகத் திகழ்கின்றன. எனவே, ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற மதிப்பு மற்றும் நோயாளிகள், குடும்பத்தினர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் உருவான ஒரு நலமளிக்கும் உடன்படிக்கை முறையான மற்றும் முழுமையான பராமரிப்பிற்கு முக்கியம் எனத் திருத்தந்தை அறிவுறுத்துகின்றார். நல்ல சமாரியனுடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி நோயுற்றோர் மீது அன்பையும், கனிவையும் பொழிய வலியுறுத்துகின்றார்.
இங்கு பராமரிப்பு என்பது அவர்களின் உடல்சார் நலனுக்காக மட்டுமல்ல; மாறாக, கடவுள், குடும்பம், நண்பர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரோடு அவர்கள் கொண்டிருக்கிற உறவுகளின் நலனுக்குமானது. நெருக்கம், அன்பு, நட்பு ஆகியவைதான் நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதல் சிகிச்சை ஆகும்.
அன்புறவால் பிறந்திருக்கிற நாம் அன்பு செய்ய படைக்கப்பட்டிருக்கின்றோம். ஒன்றிப்பையும், இணைந்திருப்பதையும் இலக்காய் கொண்டிருக்கின்றோம். நோயாளிகளுக்கான பூரண நலம் என்பது மருந்துகளால் மட்டும் கிடைக்கிற ஒன்றல்ல; மாறாக, அது அன்பான ஒரு பகிர்கிற சமூகத்தாலே சாத்தியப்படுகின்றது என்பதைத் திருத்தந்தை அறிவிக்கின்றார். ‘நீங்கள் எப்போதும் ஒரு சுமை இல்லை’ என்பதை எடுத்துரைத்து உங்களின் பராமரிப்பிற்கான, பாசத்திற்கான தேவையை ஒருபோதும் மறைக்காதீர்கள் என்று திருத்தந்தை நோயுற்றோரை வலியுறுத்துகின்றார். தனிமைப்படுத்துதல் என்ற தொற்றுநோயை எதிர்க்க, நம் ஆண்டவர் இயேசுவினுடைய கனிவுள்ள பார்வையைக் கைக்கொள்ள அவர் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஓர் அழைப்பைக் கொடுக்கின்றார்.
திருத்தந்தையைப் பொறுத்தவரையில் துன்புறுவோரும், புறக்கணிக்கப்பட்டோரும் விளிம்பு நிலையில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை; மாறாக, அவர் கள் திரு அவை மற்றும் மனிதத்தின் மையத்தில் கனிவுடன் கூடிய நம் கவனத்திற்காகக் காத்திருக்கின்றார்கள். தனிமனிதப் போக்கு, அலட்சியப் போக்கு, பயனின்மை ஆகியவற்றை மையப்படுத்துகிற கலாச்சாரத்திற்கு எதிராகக் கரிசனையும், அன்பும் மிக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஒட்டுமொத்த செய்தியின் சுருக்கத்தைப் பின்வரும் வார்த்தைகளில் அழகுற எடுத்துரைக்கின்றார்: நோயாளிகள், பாதிக்கப்பட்டோர், ஏழைகள் ஆகியோர் திரு அவையின் மையமாக, இதயமாக இருக்கின்றார்கள். அவர்கள் நமது மனிதநேயம் மற்றும் மேய்ப்புப் பணியின் மையமாக, இதயமாகத் திகழ வேண்டும். நமது செபங்கள் குறிப்பாக, நற்கருணை வழியாகக் கிறிஸ்து நம்மீது பொழிகிற பிறரன்பால் தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளின் காயங்களைக் குணமாக்க அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும் திருத்தந்தை தெளிவான அழைப்பைக் கொடுக்கின்றார்.
Comment