No icon

குடந்தை கொண்ட கோமகன்

குடந்தை மறைத்தளத்தின் என் அன்புக்குரிய புதிய ஆயர் மேதகு ஜீவானந்தம் அமலநாதன் அவர்களே!

தங்களோடும், எம் ‘நம் வாழ்வு’ வாசகர்களோடும் உறவாடும் ஒரு கடிதமாக இச்சிறப்பிதழின் ஆசிரியர் பக்கத்தை வரைவதில் பேருவகை அடைகிறேன்.

ஆயர் அவர்களே, ‘பூந்தமல்லி - திரு இருதய குருமடம்’ எனும் ஒற்றைப் புள்ளி உங்களையும், என்னையும் இணைக்கின்றது. அங்கு உங்களைப் பேராசிரியராக அறிந்தவன் என்ற முறையில் இன்னும் நெருக்கமான உறவோடும், ஆழமான புரிதலோடும் இம்மடலை வரைகிறேன்.

எளிமை-பணிவு-அர்ப்பணம் எனும் மூன்று மதிப்பீடுகளுக்குள் ஆயிரம் பொருள் சொல்லும் ஆளுமை நீங்கள்! ‘குருவும்-ஆசிரியரும், அரசருமான’ கிறிஸ்து இயேசுவைத் திருமுழுக்கில் ஏற்றுக்கொண்ட நீங்கள், ஒப்பற்ற செல்வமாக அவரைத் தனதாக்கிக் கொண்டு தொடர்ந்த உங்கள் நம்பிக்கைப் பயணத்தால் ‘தேவ அழைத்தல்’ எனும் பெருங்கொடையைப் பெற்றீர்கள்; அதன் விளைச்சலாகக் குருத்துவம் எனும் உன்னதக் கொடையையும் அவரே உங்களுக்கு அருளியுள்ளார். உம்மைப் பெயர் சொல்லி அழைத்தபோது ‘உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்’ (எபி 10:9) எனும் வாக்குறுதியோடு அவரின் பாதச்சுவடுகளை அன்றே பின்பற்றத் தொடங்கியதால், அவர் விருப்பப்படி குருவாக, பேராசிரியராகப் பயணித்த உங்களுக்கு இன்று, புதிய உடன்படிக்கையின் தலைமைக் குருவாம் இயேசு, குடந்தை மறைமாவட்ட இறைச்சமூகத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்புக்கு (அரசராக) முதன்மைப் பணியாளனாக உங்களை உயர்த்தியுள்ளார். என்னே இறைத் திருவுளம்! ‘இறைவா உமக்கே நன்றி’ என்றே எம் உதடுகள் புகழிசை எழுப்புகின்றன.

வரலாற்றுப் பக்கங்களைச் சற்றே பின்னோக்கிப் புரட்டிப் பார்க்கிறேன். நான் எதை எடுப்பது, எதை விடுப்பது, எதைச் சொல்வது... என்ற மனநிலையில், எதார்த்தமாக உருவான எளிய பட்டியல் இது. பூந்தமல்லி திரு இருதய குருமடமே கொண்டாடும் ஒரு பேராசிரியராக, வழிகாட்டியாக, இறையியல் துறைத் தலைவராக, தமிழ்ச் சங்க இயக்குநராக, குருமாணவர் பயிற்சியில் தடம் பதித்த நீங்கள், தற்போது பொறுப்பேற்றுள்ள பணியிலும் வரலாற்றுச் சாதனைகள் படைப்பீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நட்புக்கு இலக்கணம் நீங்கள்; உடன் பணியாற்றிய பேராசிரியர்களோடும், மாணவர்களோடும் இன்றளவும் நீங்கள் கொண்டிருக்கும் நட்பை, உறவாடலை நானறிவேன். தொடரும் உங்கள் உறவுப் பந்தம் தங்களையும், தங்களோடு நெருங்கிய உறவு கொண்டோரையும் தலைசிறந்த ஆளுமைகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். என்னே! உங்கள் உறவுத் தோழமை.

வார்த்தையும், வாழ்க்கையும் இரு வேறு தளங்களாக இருப்பவை; அவை இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே உலக நியதி.  வார்த்தையை மட்டுமே கொண்டோர் பலர்; அதை வாழ்வில் கொண்டோர் சிலரே. அத்தகைய நிலையில், பலருடைய வார்த்தைகள் அடுத்தவரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், வெகு சிலருடைய வாழ்க்கையே நீடித்த, அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீவிர் இரண்டாம் வகையினர். ‘ஆம்’ என்பதே உமது சொல்லாகவும், ‘இதோ வருகிறேன்’ என்பதே உமது செயலாகவும் இருந்ததை ஒவ்வொரு நிலையிலும் காண முடிகிறது. 

எளிய தோற்றம், இனிய சொல், சாந்தமான குரல், ‘Timing Jokes’என நான் உடனிருந்து கண்ட பல நற்பண்புகளை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன். உங்கள் எளிமையே உங்களுக்கு மிகப்பெரிய பலம். எளிதில் எல்லாராலும் அணுகக் கூடியவர் நீங்கள். உங்கள் உடல் மொழியும், உளமொழியும் எல்லாரையும் அருகில் ஈர்க்கக் கூடியது.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண்ட னைத்திவ் வுலகு (குறள் 387)

என்னும் ஐயன் திருவள்ளுவரின் மெய்மறை வாக்கே நினைவுக்கு வருகிறது. இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும் என்கிறார். உமது வாழ்விலும் அது உண்மையாகும் என்பது வெள்ளிடை மலை.

‘நிறைகுடம் தழும்பாது’, ‘விளைந்த நெல்மணி புவி நோக்கியே பணிந்திருக்கும்’ எனும் சொல்லாடல்கள் தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் காணக்கிடப்பவை. ‘கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் பண்பாடு’ என்பதை நன்கு புரிந்து கொண்டவர் நீங்கள். நீவிர் பெற்ற கல்வியும், அறிவும், ஞானமும், பணியும் உம்மைப் பணிவு நோக்கியே அழைத்துச் சென்றிருக்கின்றன.

“குழந்தாய், பணிவிலே நீ பெருமை கொள்” (சீராக் 10:28) எனும் இறைவார்த்தையை வாழ்வாக்கி, நீவிர் கொண்டிருக்கும் தகைசால் பணிவும், தலைமைக்கான பணிவும், கீழ்ப்படிதலும் உம்மை இன்று தலைமைப் பீடம் நோக்கி இட்டுச் சென்றிருக்கின்றன. இறைச்சமூக மேய்ப்புப் பணியிலும், குருமட ஆசிரியப் பணியிலும், வழிநடத்தும் குருகுல முதல்வர் பணியிலும் நீவிர் கொண்டிருந்த வேகமும், விவேகமும், ஈடுபாடும், முழு அர்ப்பணமும் இப்பெரும் பொறுப்பு உம்மை வந்தடைய வழிகோலியிருக்கின்றன. இறைவன் அன்றே முன் குறித்து உம்மைப் பண்படுத்தியிருக்கிறார்;  மதிப்பீடுகளால் புடமிட்டிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. “நீதியே உமது விருப்பம்; ஆகவே, உமக்கே உரிய கடவுள் மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து உம்மை எந்நாளும் உயர்த்துவார்”(எபி 1:9) என்றே நானும் நம்பிக்கைக் கொள்கிறேன்.

‘அவரது பாதச்சுவடுகளில்’ (In his footsteps) எனும் விருதுவாக்குடன், கும்பகோணம் மறைப்பணித்தளத்தில், இறையரசு கட்டுமான பணியில், இறைச்சமூகத்தை அர்ச்சிக்கவும்-போதிக்கவும்-வழிநடத்தவும் இறைவன் என்றும் உமக்குத் துணை இருப்பாராக! ‘நம் வாழ்வு’வார இதழின் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழு, அலுவலகப் பணியாளர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், மறைமாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருடைய வாழ்த்துகளும், செபங்களும் கொண்டு

என்றும் பிரியமுடன்...

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment