
பெண்மையில் தாய்மை!
பெண்மை பற்றித் தமிழில் கவிதை புனைய நினைத்தேன்; எழுதுவதற்கோ என் பென்னில் (பேனாவில்) மை இல்லை! அதில் தாய்மை என்னும் மையை நிறைத்த மறுவினாடி, அந்தப் பென் நிரம்பி வெற்றுத்தாள்கள் முழுவதும் தாய் ‘மை’ என்னும் மையினால் நிரம்பிவிட்டது! தாய்மையை உணர்ந்தவன் அறிவான், தாய்மையின் தாக்கத்தை! அந்தத் தாய்மையின் உணர்வுகளுக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பாலினம் தெரியாது!
இங்கு நான் எழுத முயல்வது, பெண்ணிற்குள் உறைந்துள்ள தாய்மை. தாய்மை என்றவுடன் தமிழில் தனித்தனியாய் நின்றிருந்த 12 உயிர் எழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் ஒன்றுகூடி, ஓர் ஆணின், பெண்ணின் உயிர்மெய் கலப்பது போல 246 உயிர்மெய் எழுத்துகளாய் +1 என்று அஃது வேறு எனைத் திண்டாட வைத்து தெருவில் நிறுத்தி விட்டது! எந்த உயிரை எடுப்பது? எந்த மெய்யோடு தொடுப்பது? எந்த எழுத்தை உயிராய், மெய்யாய் கலப்பது? எப்படி வார்த்தைகளாய்க் கோர்ப்பது? எதை வாக்கியமாய் அமைப்பது?
மென்மையான தாய்மையின், வல்லின வலிகளுக்குப் பின் தன் தாயின் மடி கிடந்து சிரிக்கிறாள் அந்த இடையின மகள்! மெல்லினத்தின் மென் உணர்வுகளைத் தன்னகத்தே சூடிய மகள், மலர்களைப் போல் மலர்ந்து குமரியாகி, அந்த அழகெனும் ஓவியம் ஒரு காளையின் மடியில் இடையினத்தில் வழுக்கிச் சென்று தன் கருவை உதிரத்தில் சுமக்கும் தாயாகிறாள். அன்று தொடங்கும் அந்த எதுகை மோனையெனும் காதல் வாழ்க்கை! அன்றுவரை எழுத்துகளைக் கோர்த்து, அசைந்தசைந்து, சீரெடுத்து, தளையத் தளைய உடை உடுத்தி, அடி அடியாய் வெண்பாக்களைப் பாடித் திரிந்தவள் ஒரே நாளில் தன் சிறுகதையைப் பெருநாவலாய் விரிக்கத் தொடங்குகிறாள். அன்பு, தோழமை, சகோதரத்துவம், காதல், காமம் எனும் சிறு நதியில் துள்ளிக் குதித்துத் திரிந்தவள், பாசமெனும் ஓவியத்தால் திருத்தி எழுதப்படுகிறாள்.
வல்லினம், மெல்லினம், இடையினம் அனைத்தும் மறந்து, தன் மடி கிடக்கும் குழந்தை பற்றிய பாசமெனும் ஓர் உணர்வே அவள் வாழ்க்கையின் ஆதார சுருதியாகி, அவள் உதிரத்தைப் பாலாக்கி அருந்திய அந்த உறவே, அவளின் அச்சாணி வேராகும். எத்தனை வலிகளைக் கொடுத்தாலும், அந்த வலிகளும், சுமைகளும் அவளுக்குச் சுகமான சுமைகள்தான்! அவளைச் சிலுவையில் அறைந்து விட்டுக் கேளுங்கள் ‘உன் உள்ளங் கவர்ந்த கள்வன் யார்?’ என்று. ‘என் மகளே! என் மகனே!’ என்பாள் அந்தத் தாய். கல்லறைக்குச் செல்லும் நுழைவாயிலில் நிற்கும் அந்தத் தாயிடம் கேளுங்கள், ‘யார் உனக்கு இறுதிப் பால் ஊற்ற வேண்டும்?’ என்று. உணர்வு இழக்கும் நேரத்திலும், ‘என் மகளே! என் மகனே!’ என்பாள் அந்தத் தாய். இறுதி மூச்சு இழுக்கும் அந்தத் தாய் தன் சேயிடம் கூறுவாள் ‘மகளே! மகனே! பார்த்துப் போடா! இதோ இருளப் போகிறது’ என்று. அவளின் இறுதி மூச்சு உள்ளவரை அந்தத் தாயான சேய்க்கு, தன் மகனும், மகளும் அவர்கள் குழந்தைகளுக்குத் தந்தையான, தாயான பின்னும் அவளுக்கு அவர்கள் குழந்தைதான்! அதுதான் பெண்மையில் உறங்கும் தாய்மை.
குழந்தையின் சக்தியைப் பற்றி எழுத வந்தவள், மென்மையாகத் தாய்மையைப் பற்றி எழுதியிருக்கிறாளே என்று நினைக்காதீர்கள். இந்த உலகத்தின் பெரிய சக்தியே பெண்மையிலிருக்கும் அந்தத் தாய்மை என்னும் சக்திதான். அது இல்லை என்றால், இந்த உலகம் தன் காலச் சக்கரத்தில் என்றோ நின்று போயிருக்கும்.
அதனால்தான் நீரில் நடனமாடிக் கொண்டிருந்த இறைவன், அதிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் பிரித்து, அதில் ஒரு துரும்பாய் இப்புவியினைப் படைத்து, அதில் பல உயிர்களை நிரப்பி, அதனை ஆள ஓர் ஆணினைப் படைத்து, அவனை ஆள அவனிடமிருந்தே ஒரு பெண்ணைப் படைத்து, அவர்களை ஆள அவர்களிடம் இருந்தே குழந்தைகளைப் படைத்தார் போலும். இது இயற்கையின் ஒரு மீளாத வட்டச் சுழற்சி. காதலுக்கு அழிவுண்டு, காமத்திற்கு அழிவுண்டு. ஆனால், பாசத்திற்கு என்றுமே அழிவில்லை.
Comment