No icon

சந்திப்பு!

மரியா, எலிசபெத்தைச் சந்திக்கும் விழா (31, மே)

சந்திப்பிற்காக ஏங்கும் இயந்திர உலகம்!

மனிதன் மற்றவரைச் சந்தித்து, தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறான். மனிதனுக்குச் சந்திப்பு என்பது ஆன்மிக உளவியல் தேவையில் மிக முக்கியப் பங்கு வைக்கிறது. தான் பெற்ற வெற்றிகளையும், தோல்விகளையும் பகிர்ந்து கொள்ள சந்திப்பு அவசியமாகிறது. தனது மனக் குறைகளை எடுத்துக் கூறி, ஆற்றுப்படுத்த சந்திப்புத் தேவைப்படுகிறது. தனக்கு மனக் குழப்பங்கள் ஏற்பட்டுத் திகைத்து நிற்கின்ற போது, தன்னை வழிநடத்த, நண்பரின் சந்திப்பு அவசியமாகிறது. பிறறை மகிழ்விக்கவும், உள்ளம் திறந்து கலந்துரையாடவும், பாராட்டவும், பகிர்ந்தளிக்கவும் சந்திப்பு உளவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சந்திப்பே சவக்குழிகளாகிறது!

இன்றைய உலகில் சந்திப்புகள் சவக்குழிகளாய் மாறிவருவதைப் பார்க்கலாம். பெற்றோரைச் சந்திக்கச் சென்ற மகன், சொத்துத் தகராறில் தன் தந்தையையே கொலை செய்யும் நிலை; குழந்தைகளைச் சந்திக்க நேரம் இல்லாமல் பணம், பதவி, பட்டம், புகழ் என்று அலையும் பெற்றோர்களால் தற்கொலைக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது; தொலைக்காட்சி, அலைபேசி போன்ற ஊடகங்கள் பெருகிய நிலையில், அதிலே அதிக நேரம் செலவு செய்துவிட்டு, நமது மனக் குறைகளையும், வெற்றிகளையும் உறவுகளைச் சந்தித்துப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதால், மனநல மருத்துவர்களை நாடி நிற்கும் நிலை.

பெருந்தொற்றுக்குப் பின் இவ்வுலகமானது நிலையற்ற, புரிந்துகொள்ள முடியாத, நிம்மதி இல்லா இடமாக மாறிவிட்டது. யாருக்கும், எதுவும் எப்பொழுதும் நிகழலாம் என்ற அவல நிலை. இந்நிலையில் வாழும் நாம், இயந்திரங்களுக்கு அடிமையாகி  இறை-மனித உறவு பாதிக்கப்பட்டு, மனிதம் இழந்து, நம்முள் உள்ள தெய்வீகத்தை மடியச் செய்கின்றோம்.  

சந்திப்பு - ஓர் உளவியல் ஊக்குவிப்பு அனுபவம்

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இரு வீரப் பெண்களின் சந்திப்பை திருவிவிலியம் ஆன்மிக உளவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சித்தரிக்கிறது.  உளவியல் ரீதியாக முதலில் சந்திப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்திட வேண்டும். கடமைக்குச் சந்திக்காமல் மற்றவரை மகிழ்விப்பதாக, நிறைவிப்பதாக அமைய வேண்டும். இங்கு மரியா வாழ்த்தும்போது, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியது (லூக் 1:44) என்று பார்க்கின்றோம்.

சந்திப்பு உணர்வுகளின் பரிமாற்றமாக அமைந்து, மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துன்பம் பாதியாகக் குறைகிறது. இரண்டாவது, உளவியல் ரீதியாகச் சந்திப்பினால் தன்னம்பிக்கை வளர்வதுடன், தன்னைப் பற்றிய சுயமாண்பும், சுயமரியாதையும் வளர்வதைப் பார்க்கலாம். “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” என்பது மரியாவின் சுயமாண்பினை எடுத்துரைப்பதை அறியலாம். இருவரும் இச்சந்திப்பின் மூலமாக, தன்னம்பிக்கையில் வளர்ச்சியடைந்து, சுயசெயல் திறன் பெற்றவர்களாக, கடவுளின் திட்டத்திற்கு முழுமையாகத் தங்களைக் கையளிக்கத் துணிவதைப் பார்க்கலாம்.

சந்திப்பு ஓர் ஆன்மிக இறை அனுபவம்

வாய் பேச முடியாமல் இருந்த செக்கரியா (லூக் 1:64), முதிர்ந்த வயதில் இருந்த அவரது மனைவி எலிசபெத்து கருவுற்று, ஆறாம் மாதத்தில் இருந்ததாக அன்னை மரியா, கபிரியேல் தூதர் வழியாக அறிகிறார் (லூக் 1:36). மரியாவின் உடனிருப்பு எலிசபெத்துக்குத் தேவை என்று உணர்ந்த உடனே ‘விரைந்து சென்று...’ (லூக்1:39) என்று கூறும் பொழுது, சந்திப்பு தேவையில் நடைபெற வேண்டும். இரண்டாவது, உடல் உள்ளத் தேவைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.

மரியா மூன்று மாதங்கள் (லூக்1-56) எலிசபெத்தம்மாவுடன் இருந்து, தனது அன்பைப் பகிர்ந்து, உடலளவில் உதவிகள் பல புரிந்து, ஆன்மிக அளவில் ஒருவர் மற்றவருடன் உள்ளம் கலந்துரையாடி பகிர்ந்துகொண்ட அனுபவம், ஓர் இறை அனுபவமாக அமைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடே மரியாவின்  புகழ்ச்சிப் பாடல்.

இறையனுபவம் என்கையில் முதலில் சந்திப்பு இறை நம்பிக்கையில் ஆழமாகிட, அகலமாகிட நமக்கு உதவிட வேண்டும். “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேரு வகை கொள்கிறது” என்ற வாக்கியங்கள் இறை நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இரண்டாவதாக, கடவுளின் திட்டத்தைத் தெளிந்து, தேர்ந்திட உதவியிருந்திருக்கிறது. மூன்று மாத அனுபவத்தில் மரியா கடவுளின் வல்ல செயல்களைப் புகழ்ந்து பாடுவதிலிருந்து, இருவரும் இறைத் திட்டத்தைத் தெளிவாகக் கண்டுணர்ந்து, அதற்குத் தங்களையே முழுமையாக அர்ப்பணிக்க இந்தச் சந்திப்பு உதவியிருக்கிறது.

இறைவன் நம்மைச் சந்திக்கின்ற வேளையில், நமது தாழ்ந்த நிலையினை உணர்வது மிக முக்கிய அம்சமாகிறது. இங்கு மரியா “அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்” என்று பாடுகிறார்.

சந்திப்போம், மகிழ்விப்போம், வாழ்விப்போம்

• நமது குடும்பத்தில் தேவையில் வாடும் முதியவரையும், குழந்தைகளையும் உளமார சந்திப்போம்.

• மருத்துவமனையில் வாடும் நம் உறவினர்களைச் சந்தித்து, அவர்களிடம் இறை நம்பிக்கையை வளர்த்திடுவோம்.

• நாம் வேலை செய்திடும் இடங்களில், வாழும் இடங்களில் யாராவது சோகமாகக் கலங்கி நின்றால் கண்டும் காணாமல் சென்றிடாது, அவர்களை நேரில் சென்று சந்தித்து,  அவர்களுக்கு ஆறுதலாய் அமைந்திடுவோம்.

• நமது அண்டை வீட்டாரின் துன்பத்திலும், இன்பத்திலும் அவர்களைச் சந்தித்து , அவர்களுடன் நல்லுறவுடன் வாழ முயற்சி செய்திடுவோம்.

இறை அனுபவமாகட்டும்

நம் சந்திப்புகள்!

இறையாட்சியில் மலர்ந்திடட்டும்

நம் இல்லங்கள்! 

Comment


TOP