No icon

ஆகஸ்டு 4  நண்பர்கள் தினச் சிறப்புக் கட்டுரை

நண்பர்கள்... வாழ்வின் நம்பிக்கைத் தீபங்கள்!

‘நண்பர்கள்’ என்ற வார்த்தையை நினைக்கும்போதே இனிக்கிறது. உச்சரிக்கும்போதே உணர்வுகள் உயிர் பெறுகிறது. இதயத்தின் ஆழத்தில் எண்ணும்போதே இன்பம் பிறக்கிறது!

‘நண்பர்கள்’ என்பவர்கள் கடவுள் தரும் வரங்கள். ‘நட்பு’ என்பது மிகவும் அழகான, அற்புதமான வார்த்தை. நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது. வழித்துணையாக, வளர்ச்சித் துணையாக வருபவர்கள் நண்பர்கள்.

‘நட்பு’ என்னும் உறவைக் கொண்டாட உருவாக்கப்பட்ட நாள்தான் ‘நண்பர்கள் தினம்’. உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போன்றவர்கள். “உண்மையான நட்பைவிட இந்தப் பூமியில் மதிப்புக்குரியது எதுவுமில்லை” என்கிறார் புனித தாமஸ் அக்குவினாஸ்.

இவ்வுலகில் எந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் பெற்றிருந்தாலும் நண்பர்கள் என்ற சொத்துக்கு முன்னால் எதுவும் நிலைத்து, நீடித்து நிற்க முடியாது. எதுவும் நம்மைத் தொடர்ந்து வர முடியாது. ஆனால், நல்ல நண்பர்கள் நம்மைப் பின் தொடர்வார்கள். எச்சூழலிலும் உடனிருப்பார்கள், உதவி செய்வார்கள். நேசிப்பார்கள், நெருக்கமாக இருப்பார்கள். ஆதரிப்பார்கள், அரவணைப்பார்கள், இன்ப துன்பங்களில் பங்கெடுப்பார்கள், பகிர்ந்து கொள்வார்கள், பங்களிப்பைத் தருவார்கள், பாசாங்கு செய்யாமல் பாசம் காட்டுவார்கள். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என அனைத்துச் சூழல்களிலும் நம்மோடு பயணிப்பார்கள், பங்கெடுப்பார்கள். நண்பர்களைப் பற்றியும், நட்புகளைப் பற்றியும் எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால், நண்பர்கள் இல்லாத மனிதர்கள் இரத்தமில்லா உடலைப் போன்றவர்கள்.

“நட்பு என்பது உலகில் விளக்குவதற்குக் கடினமான விசயம். இதை நீங்கள் பள்ளியில் கற்றுக்கொள்வதில்லை. ஆனால், நட்பின் அர்த்தத்தை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் உண்மையில் எதையும் கற்றுக்கொள்ளவில்லை” என்று முகமது அலி என்பவர் கூறுகிறார்.

திருவள்ளுவரும் நட்பைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாக,

‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு’  (குறள் 781)

நட்பைப்போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை. நட்பைப்போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் இல்லை என்பதே இதன் பொருளாகும்.

‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு’ (குறள் 786)

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; உளமார, இதயமார நேசிப்பதே உண்மையான நட்பு எனவும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இவ்வுலகில் நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொள்வது கடவுள் கொடுத்த கொடை! ஏனென்றால், அவர்கள் நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வேர்கள். நாம் விழும்போது விழுதாய் நின்று தாங்கிச் சுமப்பவர்கள். தடுக்கி விழும்போது நிலமாய் நின்று தாங்குபவர்கள் நண்பர்கள்.

நமது கண்கள், கண்ணீர் துளிகளைச் சுமக்கும்போது தங்களது காக்கும் கரங்களால் கனிவோடு துடைப்பவர்கள். பிறரால் உணர முடியாத நமது உணர்வு என்கிற உலகிற்குள் புகுந்து புத்துணர்ச்சி தருபவர்கள்.

நண்பர்கள் என்னும் பெயரில் நம்மிடம் நன்றாகப் பேசுபவர்கள், நம்மோடு அரட்டை அடிப்பவர்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் அல்லர்; நம்மை நல்பாதைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளே நண்பர்கள். நம்மை மறக்காமல் இருப்பவர்கள் மட்டுமல்ல நண்பர்கள்; நம்மைச் எச்சூழலிலும் வெறுக்காமல் இருப்பவர்களும் அவர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

தோழர்கள் உயிர் கொடுப்பார்கள்; நண்பர்கள் உயிரையே கொடுப்பவர்கள். இதனையே இறைமகன் இயேசு “தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவா 13:13) எனக் குறிப்பிடுகிறார்.

இன்று நல்ல நண்பர்களை இனம் காண்பது என்பது மிகக் கடினம். இணைந்து தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவது, போதைப் பழக்கங்களில் ஈடுபடுவது, இரு சக்கர வாகனங்களில் பறப்பது, அலைபேசியில் வாழ்வை இழப்பது என்பது உண்மையான நண்பர்களாகவும், நட்பாகவும் இருக்க முடியாது. இதனையே நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (Fratelli tuti) என்ற தனது திருத்தூது மடலில் ‘மூடிய உலகில் கருமேகங்கள்’ என்கிற முதல் அத்தி யாயத்தில், சமகால சகாப்தத்தின் பல சிதைவுகளைப் பற்றிச் சொல்கிறார்.

‘உலகமயமாக்கப்பட்ட சமூகம் நம்மை அண்டை நாடுகளாக ஆக்குகிறது. ஆனால், அது  நம்மைச் சகோதர, சகோதரிகளாக ஆக்குவதில்லை. ஒரு மூடிய உலகின்மீது இருண்ட மேகங்கள் சமூகத்தில் பரவலாக இருக்கும் என்பது உண்மை’ எனக் குறிப்பிடுகிறார் திருத்தந்தை.

திருத்தந்தை நமது உலகில் சகோதரத்துவத்தின் சேவையில் மதங்கள் என்பதில் கவனம் செலுத்துகிறார். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்தால் மட்டுமே, நாம் ஒருவரோடு ஒருவர் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

கலாச்சாரத் தடைகளை நாம் கடந்து, மற்றவர்களுக்கு அண்டை வீட்டாராக மாற வேண்டும். நட்பு - சங்கிலிகளை உடைக்கிறது மற்றும் சுவர்களை உடைக்கிறது எனவும் குறிப்பிடுகிறார் திருத்தந்தை.

எனவே, நாம் உண்மையான நண்பர்களாக வாழ்வோம். உண்மையான நண்பர்களைப் பெற்றுக் கொள்வோம். கோப்பெருஞ்சோழனை நேரடியாகச் சந்திக்காமல், அவனைப் பற்றிக் கேள்விப்பட்டே பிசிராந்தையார் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார்.

‘நட்பில்லா மனிதன் என்றால் அவன் மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப் போன்று புனிதன் இல்லை’ என்பதை உணர்ந்து நண்பர்களைச் சொந்தமாக்கிக் கொள்வோம். சொர்க்கத்தை நண்பர்களின் நட்புகளில் அனுபவிப்போம். கடவுள் அனுபவத்தை நண்பர்களின் நட்புகளில் அனுபவிப்போம்.

Comment