தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவர்
தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக அருள்முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்களை ஜூலை 23 செவ்வாய் அன்று தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அருள்முனைவர் ஜோ அருண் அவர்கள் தற்போது சென்னை, இலயோலா வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநராக இருக்கிறார். மேலும், நுகர்வோர் நடத்தை, சந்தைப்படுத்துதலின் யுக்தி, மேலாண்மைத் தத்துவம், கலாச்சாரப் பரிமாற்ற மேலாண்மை, மனிதவள மேலாண்மை போன்ற பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர் இவர்.
அருள்பணி. ஜோ அருண் அவர்கள் சிவகங்கை மாவட்டம், தவசக்குடி கிராமத்தில் 22-04-1965 அன்று ஓர் எளிய இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். இந்து சமயப் பின்னணியில் வளர்ந்த இவர், பள்ளியில் படிக்கும்போதே இயேசு சபையினரின் வாழ்வியல் முறையால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டு, தனது 14-வது வயதில் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக வீட்டை விட்டு வெளியேறி, இயேசு சபையில் குருமாணவராகச் சேர்ந்தார். குருத்துவப் பயிற்சியையும் திறன்படக் கற்றுக்கொண்ட இவர், 1997 -ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 15-08-2006 அன்று தனது இறுதி வார்த்தைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்.
அருள்முனைவர் ஜோ அருண் ஐக்கியப் பேரரசின் (United Kingdom) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் (Anthropology) முனைவர் பட்டமும், ஜெனிவாவில் ஸ்விஸ் நிர்வாக மேலாண்மைப் பள்ளியில் (SSBM – Swiss School of Business Management) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் EASA- European Association of Social Anthropologists மற்றும் Anthropological Society of Oxford அமைப்புகளின் உறுப்பினர் ஆவார். இவரது சீரியப் பணியைப் பாராட்டும் விதமாகப் பல விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவர் சென்னை, இலயோலா வணிக மேலாண்மைக் கல்லூரி (LIBA), கோவா நிர்வாக மேலாண்மைக் கல்லூரி (GIM), திருச்சி புனித ஜோசப் நிர்வாக மேலாண்மைக் கல்லூரி (JIM), பாளையங்கோட்டை சேவியர் வணிக மேலாண்மைக் கல்லூரி (XIBA) போன்ற பல முன்னணிக் கல்வி நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்துள்ளார். இவர் தெற்கு ஆசியாவின் இயேசு சபை உயர்கல்வி அமைப்பின் தலைவராக (JHEASA - Jesuit Higher Education Association South Asia) இருக்கிறார். தொழில் மேலாண்மையில் பரந்த அனுபவம் கொண்டவராகவும், சிறந்த பயிற்சியாளராகவும், பெரு நிறுவன ஆலோசகராகவும், புகழ் பெற்ற கல்வியாளராகவும் இருக்கும் இவர் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறந்த சிந்தனை, சிந்தித்தலில் புதுமை, கற்பனை வளம், தொலைநோக்குப் பார்வை, பன்முகத் திறன் கொண்ட இவரைத் தமிழ்நாடு அரசு, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது. இயேசு சபையின் மதிப்புகளோடு, சமூகத்திற்குச் சேவை செய்யும் இலட்சிய வேட்கையோடு பொறுப்பேற்றிருக்கும் அருள்முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்களைத் தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ மிக அன்போடு வாழ்த்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராகச் சிறப்புறப் பணியாற்றிய திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களையும் ‘நம் வாழ்வு’ வெகுவாகப் பாராட்டி, நன்றிகூறி மகிழ்கிறது.
- முதன்மை ஆசிரியர்
Comment