எது விடுதலை?
வேள்வியில் சிந்திய குருதியே
வேர்பிடித் தெழுந்தது விடுதலை
ஆள்வினை ஊன்றியே வளர்ந்ததே
ஆட்சியில் அரசியல் விடுதலை
தாள்பணி யாதே வீரமாய்த்
தலைநிமிர்ந் தானதே விடுதலை
வாளெனும் கொல்லா நெறியே
வாய்க்கச் செய்ததே விடுதலை!
சிறையின் கதவே திறந்ததே
சிறகை விரித்தே விடுதலை
முறையில் மூச்சும் விடுவதே
முழுமை உரிமை விடுதலை
பறையொலிப் பண்ணும் இசைக்கவே
பிறந்ததாம் என்பதே விடுதலை
குறைவிலாக் குடியர சாட்சியே
கொடுக்கவே மலர்ந்ததே விடுதலை!
பன்மைத் தன்மை என்றுமே
பெருமை யாவதே விடுதலை
வன்மை ஒருமைப் பாடென
வகுத்து நிற்பதே விடுதலை
தன்மா னந்தான் உயிரென
தம்மை வளர்ப்பதே விடுதலை
நன்மதிப் போடே நாடுமே
நடையிடப் படுவதே விடுதலை!
உலகின் அரங்கும் உணரவே
உருவா னதே நம் விடுதலை
பலவிதத் தொழிலின் நுட்பமே
பல்கிப் பெருகிடும் விடுதலை
நிலவில் தடமும் பதித்துமே
நிறைவுடன் வளர்வதே விடுதலை
மலர்ந்ததாம் மக்களின் ஆட்சியே
மணந்திடும் மாட்சியே விடுதலை!
சரிந்து விழாத சமத்துவம்
சுமந்து காப்பதே விடுதலை
வரிந்து கட்டிடும் மதவெறி
விரட்டி யடிப்பதே விடுதலை
உரியதாய் மதநல் லிணக்கமே
உறவுடன் வளர்ப்பதே விடுதலை
பெரிதென் றெழுந்தே சனாதனம்
புகுவதைத் தடுப்பதே விடுதலை!
பஞ்சம் பசிப்பிணிப் போக்கிடும்
பயிர்த்தொழில் சிறப்பதே விடுதலை
கொஞ்சமும் மனித உரிமை
குறையா திருப்பதே விடுதலை
நெஞ்சமும் நேர்மை அன்பிலே
நிலைத்து நிற்பதே விடுதலை
அஞ்சிடாத் தோள்களின் வலிமை
ஆக்கம் பெறுவதே விடுதலை!
படுகுழி விழுந்திடும் பாமரன்
பயன்பெற வைப்பதே விடுதலை
அடுத்தவர் வாழ்வும் ஏற்றமே
அடைவதில் மகிழ்வதே விடுதலை
நடுநிலை பெயரா ஆட்சியே
நிலைநிறுத் துவதே விடுதலை
தடுத்திட இனமொழி வேற்றுமை
திறனதும் கொடுப்பதே விடுதலை!
பாலியல் வன்முறைத் தடுப்பதும்
பெண்ணியம் வாழ்வதும் விடுதலை
வாலினை நீட்டும் சனாதன
வஞ்சகம் அறுப்பதே விடுதலை
சூல்கொளும் வர்ணா சிரமமே
சதிகளை அழிப்பதே விடுதலை
வேலியே பயிரை மேய்வதை
வேரோடு சாய்ப்பதே விடுதலை!
அரசியல் சாசன ஆட்சியே
அமைக்கவே எழுந்ததே விடுதலை
முரண்படும் கொள்கைத் திணிப்பிலே
மூழ்கா திருப்பதே விடுதலை
உரம்பெற மக்களின் வாழ்வுமே
உகந்ததாய்ச் செய்வதே விடுதலை
இரக்கமும் பரிவும் பகிர்வும்
இணக்கமும் நிறைவதே விடுதலை!
வளரிளம் தலைமுறை உணரவே
விடுதலை வரலா(று) படியனும்
தெளிவுற நாட்டுப் பற்றுமே
தேடிடும் வீரமே பிறக்குமே
இளமைத் துடிப்பொடு தொடரவே
இனியெழும் காலமும் பாரதம்
வளமை பெற்றே ஒளிருமே
விடுதலை காத்திடல் வேண்டுமே!
Comment