தஞ்சை மறைமாவட்டம் பெற்ற தலைச் சீரா!
- Author தந்தை தஞ்சை டோமி --
- Wednesday, 14 Aug, 2024
தமிழ்நாடு திரு அவையில் தன்னிகரற்ற மறைமாவட்டமாகத் திகழும், தஞ்சை மறைமாவட்டத்திற்குக் கடவுள் வழங்கியுள்ள மற்றொரு கொடை புதிய ஆயர் மேதகு முனைவர் T. சகாயராஜ். திருச்சி மறைமாவட்டக் குருவாக எப்போதும் ஆன்மிகச் சிகரங்களில் வாழ்ந்தவர். ஒழுக்கத்தின் வடிவாகத் திகழ்ந்தவர். இவர் தனக்குள் வற்றாத ஜீவனை (இயேசு), சுனையைக் கொண்டு ‘அவரது இரக்கமிகு அன்புக்குச் சான்று பகர’ என்ற விருதுவாக்குடன் தஞ்சை ஆயராகப் பணி ஏற்கவுள்ளார். பண்பாளர், தாயுள்ளத்தோடு அனைவரையும் அன்பு செய்பவர், அனைவரையும் பாராட்டும் பேராண்மை கொண்டவர், தஞ்சை மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராவதை மகிழ்வு கலந்த எதிர்நோக்குடன் மக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
புதிய ஆயர் ஓர் இரக்கத்தின் தூதுவர்: தனது மேய்ப்புப் பணி, ஆன்மிகப் பணி, பேராசிரியர் பணியுடன் நின்றுவிடாது, குருத்துவப் பணியின் தொடக்கம் முதலே இரக்கச் செயல்கள் வழி இறையாட்சிப் பணியில் ஆழமான அன்பும் ஈர்ப்பும் கொண்டு, உலகினரும் திரு அவையும் எழுச்சி கண்டிட அன்பையே ஆயுதமாக்கி, ஆன்மிக மற்றும் சமூகத் தளங்களில் ‘இரக்கமிக்க தந்தை’ என்ற பெயருடன் தனக்கான இடத்தையும் தடத்தையும் பதித்தவர் புதிய ஆயர்! இவர் ஒரு கிறிஸ்தவ சமூக ஆர்வலர், அரசியல் ஆர்வலர், பேச்சாளர். இவர் தத்துவவியலாளர், இறையியலாளர் மட்டுமல்ல, மகத்தான ஒரு மாமனிதர்; தஞ்சை மறைமாவட்டம் தவமிருந்து பெற்று வந்துள்ள வரம்! தஞ்சைத் தரணி மனம் குளிர்ந்து அவரை வரவேற்கிறது.
புதிய ஆயரின் தனித்துவமான பண்புகள்: இவருடன் நான் அன்றாடம் அணுக்கமாயிருக்கும் பேற்றினைப் பெறவில்லை என்றாலும், மக்களுடன் அவர் கொண்டிருந்த அணுக்கம், அவரது மானுட வாழ்வின் மகத்தான பகுதிகளை வெளிச்சம் போட்டு விளங்க வைத்ததைப் பலர் கூற காது குளிரக் கேட்டவன் நான். புத்தகத்தில் பேசப்படும் தத்துவங்களை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமேயில்லை என்பார்கள் சராசரிகள். அது சாத்தியம்தான் என்பதற்கான கண்கண்ட சாட்சியம்தான் புதிய ஆயர். புதிய ஆயர் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயல்படும் தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமிக்க ஆன்மிகவாதி. ஏழை எளிய மக்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைப்பவர். திரு அவையின் வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் காண்பவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்ளும் ஓர் உயரிய பண்பாளர். ஒவ்வொரு மனிதனும் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என ஆவல் கொண்டவர்.
கிறிஸ்தவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியை மேய்ப்புப் பணிகள், போதனைப் பணிகள் வழியாக அரசியல் தளத்திலும், ஆன்மிகத் தளத்திலும் தடம் பதித்தவர். இப்போது கடவுள் அவரை மற்றொரு பெரும் பொறுப்பைச் சுமக்க அழைத்துள்ளார். தஞ்சை மறைமாவட்ட மக்கள் மத்தியில் அரசியல்-ஆன்மிக-சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் சாதியம் கடந்து, சமத்துவம் காத்து, கிறிஸ்தவ மக்களைக் கூட்டொருங்கியமிக்க இயக்கமாக அணிதிரட்டும் ஆற்றல்மிக்க ஆயர் சகாயராஜ் அவர்களை வாழ்த்துவோம், அவருக்காகச் செபிப்போம். கடும் உழைப்பாலும், செயலாற்றலினாலும், செப வாழ்வாலும், அசைக்க முடியாத இறைநம்பிக்கையாலும் இன்று உயர்ந்து பிரகாசிக்கும் புதிய ஆயர் தஞ்சை மறைமாவட்ட இறைநம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கைப் பயணத்தில் சிறந்த ஊக்க மருந்தாக இருப்பார் என்பது நமது உறுதியான நம்பிக்கை! அறிவும், ஆற்றலுமிக்க குருக்கள், துறவிகள், பொதுநிலையினரைக் கொண்ட தஞ்சைத் தலத்திரு அவை, புதிய ஆயர் தலைமையில் ஒன்றுபடும் கூட்டொருமித்தத் திரு அவையாகப் புதிய பாதையில் தனது இறையாட்சி வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை.
Comment