No icon

வியக்க வைக்கும் எளிமை

அமைதியான பேச்சு, சாந்தமான பார்வை, சத்தம் இல்லாத சேவை, பலராலும் அறியப்படாத முகம்! இவர்தான் தஞ்சை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு முனைவர் த. சகாயராஜ்.

‘First impression is the best impression’ என்று சொல்வார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என்னை யார் என்று அவருக்குத் தெரியாத நிலையில், ஒரு மாணவிக்கு திருச்சி புனித வளனார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிக்க இடம் கேட்டு, பரிந்துரைக்காகத் தந்தையைச் சந்திக்கச் சென்றேன். ‘சரி பார்க்கிறேன்’, ‘கேட்டுச் சொல்கிறேன்’, ‘கடிதம் தருகிறேன், பார்ப்போம்’, ‘எம்.எஸ்.சி. என்றால் பெண்களுக்குக் கிடைப்பது கஷ்டம்’ போன்றவற்றில் ஏதாவது ஒன்று பதிலாகத் தந்தையிடமிருந்து வரலாம் என்று நினைத்தேன். ஆனால், அவ்வாறு சொல்லாமல், உடனே தந்தை தன் அலுவலக நாற்காலியிலிருந்து எழுந்து, ‘வாருங்கள், கல்லூரி முதல்வரை நேரில் சென்று சந்தித்து விடுவோம். காலதாமதம் வேண்டாம்’ என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். கல்லூரி அலுவலகத்தில் முதல்வர் வரும்வரை உடன் அமர்ந்து காத்திருந்தார். வந்தவுடன் நேரில் பேசி பரிந்துரை செய்ததோடு அல்லாமல், அவ்விசயத்தை அக்கறையோடு பின்தொடர்ந்து, விண்ணப்ப நிலவரம் குறித்து அவ்வப்போது நான் கேட்காமலே எனக்குத் தெரியப்படுத்தி, அந்த மாணவியைக் கல்லூரியில் சேர்த்து விட்டார். வேறு எந்தக் குருவிடமும் நான் காணாத ஒரு பண்பு இது.

என்னை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை பார்த்தபோதே என்னைப் பற்றி, தான் கவனித்ததை மிகச்சரியான வார்த்தைகளில் கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு இயல்பாகவே பிறரைத் தெளிவாகக் கணிக்கும் திறன் இருக்கிறது. பிறருடைய நற்குணங்களை அவர் தாராளமாகப் பாராட்டுவதை நான் கண்டு இரசித்திருக்கிறேன். தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்று ஏங்கும் உலகில், பிறரைக் கவனித்து, அவர்களைப் பற்றி கவலைகொண்டு, அவர்களுடைய நற்பண்புகளைப் பற்றி பேசும் இவரது குணம் ஒரு நல்ல தலைவருக்கான அடையாளம். நேர்மறையான சிந்தனை கொண்டவர். இவரின் உற்சாகமான மனப்பான்மையும், எப்போதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் இவருடனான உரையாடல் கணங்களை ஒரு புதிய அனுபவமாக மாற்றுகின்றன.

ஒருமுறை இவரோடு தஞ்சை மறைமாவட்டப் பங்கிற்குத் திருப்பலிக்காக ஒன்றரை மணி நேரம் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இடையிடையே வருகின்ற குக்கிராமங்கள் மற்றும் ஆலயத்தின் பெயர்களையெல்லாம் கூறினார். ஒரு முறை பார்த்தாலே இடங்களையும், மனிதர்களையும் நினைவில் பதித்துக்கொள்ளக்கூடிய இந்தச் சிறப்பு ஆற்றல், புதிய மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணியில் ஆயருக்கு மிகவும் கைகொடுக்கும்.

‘சொந்த ஊரிலும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு’ என்பதைத் தேர்வு ஆயரின் ஊரில் அறிய முடிந்தது. இவரைப் பற்றி பேசுகின்ற பொழுது அந்தக் கிராமமே மகிழ்வதை நான் கண்டேன். அந்த அளவுக்குத் தன் முன்மாதிரியான வாழ்க்கையாலும், அன்பாலும், பாசத்தாலும், இறைவேண்டலாலும், தான் பிறந்த ஊரிலும் மதிப்பிற்குரியவராக இவர் கருதப்படுகிறார். 

ஒருமுறை நான் திருச்சி சென்றபோது என் வாகனத்தை அவர் பயிற்றுவித்துக் கொண்டிருந்த புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் தன் வேலையைப் பார்த்திருக்கலாம். ஆனால் அவர், எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டு வந்து, எங்கு நிறுத்துகிறோம், எப்படி நிறுத்துகிறோம் என்றெல்லாம் கவனித்து வழிகாட்டிவிட்டு, எங்களை அனுப்பி வைத்தார். எந்தச் சூழ்நிலையிலும் ஓடிவந்து பிறருக்கு உதவி செய்கின்ற பண்பு இவருடைய இயல்பிலேயே இருப்பதைக் கண்டு நான் வியந்தேன்.

‘நீங்கள்தான் ஆயர் ஆவீர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்’ என்று ஒருசில மாதங்களுக்கு முன்பாக அவரிடம் கேட்டோம். அவர் மௌனத்தை மட்டுமே அதற்குப் பதிலாகத் தந்துவிட்டு, அதைப் பற்றி கேள்விப்படாதவர் போல, அதற்குச் சம்பந்தமில்லாதவர் போல மற்ற விஷயங்களைப் பேசினார். ‘தன்னைப் பற்றி பிறர் என்ன கூறுவார்கள்? யார் எப்படிச் சொல்வார்கள்? என்ன நிலவரம்?” என்று கேட்டறியும் ஆர்வம் அவரிடம் இல்லை. எது நடந்தாலும் அது கடவுளின் செயல் என்பதை மட்டும் மனத்தில் நிறுத்தியவராக, அந்தத் தகவலை அவர் நிதானமாகக் கடந்து சென்றது அவருடைய மனமுதிர்ச்சியின் அடையாளமாக எனக்குப் பட்டது.

மேலே எழுதப்பட்டவை யாவும் புதிய ஆயரிடம் நான் பெற்ற நேரடி அனுபவம். பிறர் கூறக் கேட்டதோ ஏராளம். “சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, பசியோடு வந்தவருக்கும், படிக்க வேண்டும் என்று அவரிடத்தில் போய் நின்றவருக்கும், உடல் சுகமின்றிப் போனாலும், மனக்கலக்கத்தோடு சென்றாலும், சாதி, மதம் பார்க்காமல், சமத்துவப் பார்வையில் பலரின் தேவைகளைத் தீர்த்து வைத்தவர். சென்ற இடமெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து, பலரை நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட ஏணி இவர். மரியநாதபுரம் மக்களுக்கு நடமாடும் கோயில் இவர். மணப்பாறை மக்களின் ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்திசெய்து பொறுப்போடு பணி செய்தவர் இவர். ஏழை மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவேற்றி பலருக்கு வாழ்வின் கலங்கரை விளக்காகத் திகழ்பவர்.

அது மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க உதவி செய்தவர். திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் ஆறு ஆண்டுகள் ஆழமான, அற்புதமான, இறையாட்சிப் பணியைச் செய்து, அனைவரின் மனங்களையும் அன்பாலும், கனிவான செயல்களாலும் கொள்ளை கொண்டவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் குரு மாணவர்களின் வழிகாட்டியாகப் பயணிக்கிறார்.

அன்னை மரியா மீதான அளவு கடந்த பக்தியும், ஆண்டவர் இயேசுவின் மீதான ஆழமான நம்பிக்கையும், தாழ்ச்சியான மனநிலையும், அப்பழுக்கற்ற சேவையும் இன்று இவரை ஆயர் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

இறை ஆசிக்கும், அர்ப்பண உணர்வுக்கும், ஓயாத உழைப்பிற்கும் சொந்தக்காரரான புதிய ஆயர், தஞ்சை மறைமாவட்டத்திற்குச் சொந்தமாகி உள்ளார். இவருடைய பணியும் வாழ்வும் இந்த மறைமாவட்டத்தைப் பல துறைகளில் உயர்த்திப் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

புதிய ஆயரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Comment