No icon

அரும்புகள் மலரும் சூழலை உருவாக்குவோம்!

செப்டம்பர் 8, 2024 பெண் குழந்தைகள் தினம்

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! அனைவருக்கும் அன்னை மரியாவின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு சார்பாகப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியச் சமூகத்தில் குடும்பங்களில் ஒரு பெண் குழந்தை எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பெண் குழந்தைகள் தினம்’ அன்னை மரியாவின் பிறந்த நாளில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது. பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்வதும், உறவுகளாலும் சமுதாயத்தில் உள்ள ஒரு சில ஆண்களாலும் பாலியல் பலாத்காரத்தால் துன்புறுத்தப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. திரு அவையும் தாய்த்திருநாடும் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைக் கண்டிக்கின்றன.

இவ்வுலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் அமைதியான, பாதுகாப்பான குழந்தைப் பருவத்தைப் பெறுவதற்கும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பிற்கும் தகுதியானவர்கள். உலகெங்கிலும் குழந்தைத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் 63 மில்லியன் பெண் குழந்தைகளுக்கு இவை அன்றும் மறுக்கப்பட்டன. தற்போது 5 வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பெண் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாய்ப் பணிபுரிவதால் சுமைகள் சிறு வயதிலேயே அவர்கள்மீது சுமத்தப்படுகின்றன.

குழந்தைத் தொழிலாளர்களில் சிறுமிகளின் நிலையை எண்ணிப் பார்ப்போம். இவர்கள் வேலை செய்யும் இடங்களில் சில குறிப்பிட்ட அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வீடுகளைச் சுத்தம் செய்தல், சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளுக்குப் பொறுப்பற்ற பெற்றோர்களால் அவர்கள் அனுப்பப்படுகின்றார்கள். இது கண்டனத்துக்குரியது. கிராமங்களில் விவசாயத்திலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், நகரங்களில் வீட்டு வேலைகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள். தொழிலாளர் ஆய்வாளர்களின் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும் பத்திரிகைகளின் கண்களுக்கு எட்டாத வகையிலும் மறைமுகமாகப் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்குச் செல்லும் போது குறைவான ஊதியமே பெறுகிறார்கள் அல்லது ஊதியத்துக்குப் பதிலாக உண்ண உணவும், தங்க இடமும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.

பெண் குழந்தைகள் இத்தகைய பணிகள் செய்யும்போது, கல்வியறிவு பெற வாய்ப்பில்லாமல் போகிறது. உடல்நலம் குன்றிப் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் பல வசந்தங்களை இழந்து விடுகிறார்கள்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைகளின் மறுவாழ்வுக்கும் அரசு சட்டங்கள் இயற்றியுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் 1948, தொழிற்சாலைகளில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது. குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்கு முறை) சட்டம் 1986, குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1994, குழந்தைகள் இளம் நீதிச் சட்டம் 2000 ஆகிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன. இறுதியாக, 2009-ஆம் ஆண்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்விச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வாயிலாக 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் தொடக்கக் கல்வியை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாலினம், சாதி, மதம், குடும்ப வருமானம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒவ்வோர் இந்தியக் குழந்தையும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முக்கியப் பங்காற்ற முடியும். வறுமையில் வாடும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வியறிவையும், எண்ணியல் திறன்களையும் வளர்க்க அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.

பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்ட சிறுதொழில்களில் ஈடுபடுத்தி, கூடுதல் வருமானம் ஈட்டுவதால் குடும்பங்கள் வறுமையிலிருந்து மீள முடியும். இது வருவாய்க்காகக் குழந்தைகளை நம்பியிருக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டங்களில் பெண்கள் தீவிரமாகவும் சமமாகவும் ஈடுபட வேண்டும். குழந்தைகள் தொழிலில் ஈடுபடுவதை ஒழிக்க பெண்களின் தலைமையும் அர்ப்பணிப்பும் தேவை. இவ்வாறு பெண்கள் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியும்.

என்ன சட்டம் இயற்றினாலும், இன்றும் நடைமுறையில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தொழிலாளர்களை வைத்திருப்பது ஒரு நாட்டின் பொருளாதார நலனுக்கு மோசமானது. பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைவிட பள்ளிக்குச் சென்றால் பெரும் நன்மை உண்டாகிறது. அவர்கள் உடலும் உள்ளமும் வளர்ச்சி பெற்று, வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.

இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான திட்டங்கள், செயல்படுத்தும் அரசு நிறுவனம், தன்னார்வத் தொண்டு நிறுவனம், திரு அவையின் பங்களிப்பு ஆகியவை மிக மிகத் தேவை. எல்லாரும் தாம் வாழும் வீட்டிலும் சமுதாயத்திலும் பெண் குழந்தைகள் கல்வியை ஆதரிப்பது அவசியம்.

கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்ட ஆட்சியர் இராணி சோயாமோய் ஒப்பனை அணிவதில்லை. சிறுவயதில் அவருடைய பெற்றோர், உடன்பிறப்புகள் மைக்கா சுரங்கத்தில் பணிபுரிந்து விபத்தில் இறந்து போனார்கள். எனவே, அவர் அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார். அங்கே அவர் படித்து முன்னேறினார். ஒப்பனைப் பொருள்களில் பெரும் பங்கு மைக்கா பயன்படுத்தப்படுகிறது. சுரங்கத்தில் மைக்கா தோண்டி எடுப்பவர், உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்யும் குழந்தைத் தொழிலாளர் அமைப்புக்கு எதிர்ப்பைக் காட்ட விரும்பினார். இதுவே அவர் ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தாததற்குக் காரணமாகும்.

இதுபோன்ற பிரச்சினை குறித்து நமக்குத் தெரிந்த வகையில், நாமும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். சமுதாயமாய் ஒன்றுகூடி எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன், ஏற்ற நடவடிக்கைகள் எடுத்தால், இப்பிரச்சினைக்குத் தீர்வுகளைக் காணலாம். பெண் குழந்தைகள் தினமான இன்று நமது பெண் குழந்தைகளுக்குத் தேவையான விழிப்புணர்வுகளை அளித்து அவர்கள் வாழ, வளர வழிசெய்வோம் என்று உறுதி கூறுவோம்.

Comment