திருத்தந்தையின் மறைபரப்பு ஞாயிறு செய்தி (20-10-2024)
சென்ற இதழ் தொடர்ச்சி...
அனைவரையும் அழைத்துவர...
பணியாளர்களாய் பயணப்பட...
3. எல்லாரையும்...
முழுமையான கூட்டியக்கமாக மறைபரப்பிற்கும் திரு அவையில் கிறிஸ்துவின் சீடர்களின் உலகளாவிய மறைபரப்புப் பணி - திருமண விருந்து உவமையில் அரசரின் அழைப்பு ‘எல்லாருக்குமானது’ என்பதே நம் சிந்தனையின் மூன்றாம் பகுதி.
நான் முன்னரே வலியுறுத்தியுள்ளதுபோல, “யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதே மறைபரப்புப் பணியின் முக்கிய நோக்கம், அதுவே இலக்கு. நம் மறைபரப்பு பணிகள் அனைத்தும் கிறிஸ்துவின் இதய ஆழத்தினின்றே பிறக்கின்றன. எதற்காக? ‘அனைவரையும் அவர்பால் ஈர்த்துக்கொள்ளவே” (திருத்தந்தையின் மறைபரப்புப் பணிக் கழகங்களின் பொது அமர்வில் உரை. 3 ஜூன், 2023).
பல முரண்பாடுகளாலும் பிரிவினைகளாலும் பிளவுண்டு கிடக்கிற இன்றைய உலகில், கிறிஸ்துவின் நற்செய்தி மானிடர் ஒருவரை ஒருவர் நேரிடையாக எதிர்கொண்டு சந்திக்க, ஒவ்வொருவரையும் மென்மையாக, ஆனால் உறுதியுடன் அழைக்கிறது; அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள், சகோதரிகள் என்று அடையாளம் கண்டுகொண்டு, வேற்றுமையிலும் இணக்கமான ஒற்றுமை கண்டு மகிழ அழைக்கிறது. ஏனெனில், “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துணரவும் அவர் விரும்புகிறார்” (1திமொ 2:4). எனவே, நமது மறைபரப்புப் பணி செயல்பாடுகளில் நற்செய்தியை ‘அனைவருக்குமே’ அறிவிக்கப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது. புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறவர்கள் போல் தோன்றுவதற்குப் பதிலாக, அழைப்புப் பெறுபவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களாக, இறை அழகின் தொடுவானத்தைச் சுட்டிக்காட்டுபவர்களாக, சுவைமிக்க பண்டங்கள் நிறைந்த பெருவிருந்திற்கு அழைப்பவர்களாகச் செயல்பட வேண்டும்” (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 14).
அனைவரும் அழைப்புப் பெற்றவர்களே. அவர்களின் சமூக நிலை, ஒழுக்க நிலை எப்படியிருப்பினும், கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியாளர்கள், அவர்கள்மீது எப்போதும் உள்ளார்ந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். உவமையில் வரும் அரசரின் கட்டளையை ஏற்ற பணியாளர்கள், “வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தார்கள்” (மத் 22:10). “ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர்....” (லூக் 14:21) என எல்லா நிலையினரையும் கூட்டி வந்தார்கள். சுருங்கக்கூறின், சமுதாயத்தில் மிகச் சிறியோர் எனக் கருதப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர் ஆகியோரே அரசரின் சிறப்பு விருந்தினர்கள். நம் ஒவ்வொருவர்மீதும் கடவுள் காட்டும் பேரன்பு அளவற்றதும், நிபந்தனையற்றதுமாயிருப்பதால் அவர் தம் மகன் திருமணத்திற்குத் தயார் செய்திருக்கும் பெருவிருந்து அனைத்துத் தரப்பினருக்கும் உரியது. “தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்” (யோவா 3:16).
ஆம், ஆண், பெண் ஒவ்வொருவரும் கடவுளின் அருளில் பங்கேற்க அழைக்கப்பெற்றுள்ளார்கள். இந்த அருள்தான் அவர்களை உருமாற்றி மீட்பை வழங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது ஒன்றே. இலவசமாகக் கிடைக்கும் இறையருள் என்னும் அந்தக் கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ‘திருமண ஆடையாக’ அணிந்துகொண்டு, அதன் வழியாக உருமாற்றம் அடைய நம்மைக் கையளிக்க வேண்டும்.
‘அனைவருக்கும்’ நற்செய்தி அறிவிக்க, நம் ‘அனைவருடைய’ உள்ளார்ந்த அர்ப்பணம் தேவைப்படுகிறது. இப்பணியில், முழுமையான கூட்டியக்கத் திரு அவையாக, மறைபரப்புப் பணியாற்றும் திரு அவையாக நாம் பயணிக்கத் தொடங்க வேண்டும். மறைபரப்புப் பணி, அடிப்படையில் கூட்டியக்க இயல்புடையது. எனவே, உலகளாவிய திரு அவையிலும், தலத் திரு அவைகளிலும் இன்று மிக அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படுவது ஒருங்கிணைந்த மறைபரப்புப் பணி ஒத்துழைப்பாகும்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அடிச்சுவடுகளையும், எனக்கு முந்தையத் திருத்தந்தையர்களின் செயல்முறைகளையும் கருத்தில் கொண்டு உலகின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் நான் பரிந்துரைப்பது, திருத்தந்தையின் மறைபரப்புப் பணிக்கழகங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ‘ஏனெனில், குழந்தைப் பருவம் தொடங்கி கத்தோலிக்கரை உண்மையான அனைத்துலக உணர்விலும், நற்செய்தி அறிவிப்புப் பணி உணர்விலும் தோய்ந்திருக்கச் செய்வதற்கும், நற்செய்தி அறிவிக்கப்படும் எல்லா நாடுகளுக்கும் பயன்படுவதற்காக, அவை ஒவ்வொன்றின் தேவைகளுக்கு ஏற்ப, தகுந்த அளவு நிதி திரட்டுவதற்கும் மேற்கூறிய கழகங்களின் செயல்பாடுகள், வழிகளாக அமைகின்றன’ (திருச்சபையின் நற்செய்திப்பணி, எண் 38).
இந்த நோக்கத்திற்காகவே உலக மறைபரப்புப் பணி நாளன்று எல்லாத் தலத் திரு அவைகளிலும் திரட்டப்படும் நிதி, உலகளாவிய நிதித் தொகுப்பிற்கு அனுப்பப்படுகிறது. அந்த நிதியைத் திருத்தந்தையின் நற்செய்தி அறிவிப்புக் கழகம், திருத்தந்தையின் பெயரால், உலகளாவிய திருச்சபையின் மறைபரப்புப் பணிச் செயல்பாடுகளுக்கெனப் பகிர்ந்தளிக்கிறது.
நாம் இன்னும் அதிகமாகக் கூட்டியக்கச் செயல்பாடுகளில் ஈடுபடவும், மறைபரப்புப் பணியாற்றும் திரு அவையாகச் செயலாற்றவும் வழிகாட்டி உதவிட இறைவனிடம் வேண்டுவோமாக.
இறுதியாக, நம் பார்வையை அன்னை மரியாமீது பதிய வைப்போம். அவர்தான் குறிப்பாக, யூதேயாவிலுள்ள கானாவில் நடைபெற்ற திருமண விருந்தின்போது இயேசு தம் முதல் அரும் அடையாளத்தைச் செய்யத் தூண்டுதலாக இருந்தார் (காண். யோவா 2:1-12). இயேசு புதுமணத் தம்பதியருக்கும், அந்தத் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கும் புதிய, சுவை மிகுந்த திராட்சை இரசத்தை அபரிமிதமாக வழங்கினார். இது நிறைவுக் காலத்தில் அனைவருக்கும் வழங்க, இறைவன் தயார் செய்து கொண்டிருக்கும் தம் மகனுடைய திருமணப் பெருவிருந்தின் அறிகுறியாகும்.
இன்றைய நாள்களில் கிறிஸ்துவின் சீடர்கள் ஆற்றும் நற்செய்திப் பணி சிறக்க அன்னை மரியாவின் தாயன்பின் பரிந்துரையை இறைஞ்சிக் கேட்போமாக. நம் அன்னையினுடைய அன்பில் கனிந்திடும் அக்கறையில் நனைந்தவர்களாக, அவருடைய கனிவு. பாசம் ஆகியவற்றினின்று பிறக்கும் ஆற்றலைப் பெற்றவர்களாக (காண். நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 288), நம் அரசரும் மீட்பருமான இறைவன் வழங்கும் பெருவிருந்திற்கான அழைப்பை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போமாக!
அன்னை மரியே!
நற்செய்தி அறிவிப்புப் பணியின் விண்மீனே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
உரோமை - திருத்தந்தை பிரான்சிஸ்
25 ஜனவரி 2024
Comment