மரணம் மானிட வாழ்வின் தவிர்க்க இயலாத தருணம்
நவம்பர் 02 - இறந்த நம்பிக்கையாளர் நினைவு
மனித வாழ்வு மர்மம் நிறைந்தது
“மரணம் நம்மைத் தேடி வருவதில்லை; நாம்தான் மரணத்தைத் தேடிச் செல்கிறோம்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று உண்டு. உண்மையில் பிறப்பு என்பது சாவின் தொடக்கம். இது இயற்கையின் நியதி. “மனிதனுக்கு மரணம் மட்டும் இல்லாமல் போனால் என்னவாகும்? வாழ்க்கை வண்ணங்கள் இல்லாத வானவில்லாகி விடும்” என்று மொழிகிறார் தமிழருவிமணியன். ஆனால், இந்த மரணத்தை அடையும் மனித வாழ்க்கை மர்மம் நிறைந்தது. ஏனென்றால், கடைசி வரை, கடைசி நிமிடம் வரை, கடைசி வினாடி வரை அடுத்து என்ன நடக்கும்? எப்படி மாறும்? என்பது யாருக்குமே தெரியாது. ஆகவேதான் மனித வாழ்க்கை ஒரு மர்மம் நிறைந்த பயணமாக இருக்கிறது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை திங்கள் 29-ஆம் நாள் பூஞ்சிரத்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் சின்னாபின்னமாயின. அன்று இரவில் இவ்வூர்களில் வழக்கம்போல் உறங்கச் சென்றவர்களில் பல நூறுபேர் என்ன நிகழ்கிறது என்று தெரியாமலேயே நிரந்தரமாக உறங்கிப்போனார்கள். இதுதான் மனித வாழ்க்கை. இது மர்மமும் மறைபொருளும் நிறைந்தது.
மரணம் தவிர்க்க இயலாதது
ஆதிசங்கரர் மரணத்தைத் தழுவியபோது அவர் ஓர் இளைஞர்! சுவாமி விவேகானந்தர் மரணத்தை முத்தமிட்டபோது அவர் ஓர் இளைஞர்! மாவீரன் அலெக்சாண்டர் மரணத்தை அரவணைத்தபோது அவர் ஓர் இளைஞர்! எல்லாவற்றிற்கும் மேலாக, நம் ஆண்டவர் இயேசு சிலுவையில் மரணத்தைச் சந்தித்தபோது அவரும் ஓர் இளைஞர்! எனவேதான் வாழ்வியல் தத்துவஞானி ஆல்பர்ட் கேமஸ், “வாழ்வின் அர்த்தத்தையும் புரிதலையும் தேடுகின்ற நமது அடிப்படை ஆவலை நசுக்கிவிடுகிறது மரணம்” என்கிறார்.
மரணத்தின் கொடூரத்தைப் புரிந்துகொண்ட கவியரசு கண்ணதாசன், “சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ?” என்று சாபமிடுகிறார். ஆம், எவ்வளவுதான் நாம் சாபமிட்டாலும், ஆணையிட்டாலும் மரணம் வந்தே தீரும். ஒருவேளை சிறந்த மருத்துவத்தால் மரணத்தைத் தள்ளிப்போடலாம். ஆனால், தவிர்க்க இயலாது.
சிறு வயதிலேயே நம்மை அன்பு செய்தவர்கள் அல்லது நம்மால் அன்பு செய்யப்பட்டவர்கள் மரணமடையும்போது, நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வாழ்வு என்பது எத்தனை நாள் இம்மண்ணில் உயிரோடு இருந்தோம் என்பதல்ல; எத்தனை பேரின் இதயங்களில் உயர்வாய் இருந்தோம் என்பதுதான்.
மரணம் முத்தான முழுமையான மனிதச் செயல்
“மனிதன் சாப்பிடுகிறான், நடக்கிறான், ஓடுகிறான். இவைகளெல்லாம் மனிதன் தனக்குத்தானே நிகழ்த்துகின்ற செயல். இதைப் போன்றதுதான் மரணமும், ஒருவர் தனக்குத்தானே நிகழ்த்துகின்ற செயல்” என்கிறார் இறையியல் அறிஞர் லதிஸ்லாஸ் பொரொஸ் என்பவர். மரணத்தின்போது ஒருவர் குடும்பம், சமூகம், பண்பாடு போன்றவற்றிலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை முழுமையாக, நேருக்கு நேராகச் சந்திக்கிறார். அவ்வேளையில் மரணமடையும் நபர் முடிவில்லா வாழ்வுக்குச் சாதகமாகவோ அல்லது எதிராகவோ அவரே முடிவை எடுக்கிறார். எனவேதான் மரணம் என்பது முற்றான, முழுமையான மனிதச் செயல், உண்மை நிலையைச் சந்திக்கும் தருணம் (Moment of Truth) என்று மேலும் பகிர்கிறார் பொரொஸ்.
மரணம் வழியாக ஒருவர் அகிலமயமாகிறார்
மனிதன் இப்பூமியில் வாழ்கிறபோது காலத்திற்கும், இடத்திற்கும் (Time & Space) கட்டுப்பட்டவன். மரணிக்கும்போது பூமியினுள் (பு)விதைக்கப்படுவதால் அவன் காலத்தையும், இடத்தையும் கடந்து பூமி முழுவதும் சங்கமிக்கிறான். இந்து சகோதரர்கள் இறந்தவரின் உடலை எரித்து சாம்பலைக் கடலில், நதியில் கரைக்கின்றனர்; மலைமுகடுகளில், ஆகாயத்தில் தூவுகின்றனர். இதன் பொருள் என்ன? இறந்தவர் அகிலத்தோடு இரண்டறக் கலக்கிறார் என்பதுதான்.
ஒருவர் இறந்த பிறகுதான் அவரது இலட்சியம் விரைவாக நிறைவேற்றப்படுகிறது. அண்ணல் காந்தி இறந்த பிறகுதான் அவரது சீடர்கள் அவரது இலட்சியத்தை விரைவாகப் பரப்பினர். ஆண்டவர் இயேசு இறந்த பிறகுதான் அவரது சீடர்கள் திருமறையைத் திக்கெட்டும் சுமந்து சென்றனர். எனவே, “மரணத்தின் வழியாக ஒருவர் சமூகத் தொடர்பற்றவராக மாறுவதில்லை; அவர் அகிலத்தை விட்டு அகன்று விடுவதில்லை; மாறாக, அவர் அகிலமயமாகிறார்” என உரைக்கிறார் இறையியல் வல்லுநர் கார்ல் ரானர்.
மரணம் நிலைவாழ்வின் வாசல்
“ஆண்டவர் இயேசு நிலைவாழ்வில் மட்டுமன்று, உடலோடு உயிர்த்தெழுதலிலும் நம்பிக்கை உடையவராக இருக்கிறார்” (யோவா 5:29, 6:54; மாற் 12:18-27).
நிலைவாழ்வு இவ்வுலக வாழ்வின் தொடர்ச்சியல்ல; அதே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருப்பதுமல்ல. “நிலைவாழ்வில் மனிதர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை, விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்” (மாற் 12:25) என்பது இயேசுவின் செய்தி.
“அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையையும், சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையையும் அணிந்துகொள்ளும்” (1கொரி 15:53), “மதிப்பற்ற இவ்வுடல் மாண்புக்குரியதாய், வலுவற்ற உடல் வல்லமையுள்ளதாய், ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்றெழும்” (1கொரி 15:42-44) என்பது புனித பவுலின் எண்ணம். ஆக, மரணம் என்பது மனித வாழ்வின் முடிவல்ல; மாறாக, நிலைவாழ்வின் நுழைவு வாயில் என்பதுதான் கிறிஸ்தவ மறையின் முழக்கம்!!
இன்றே, இப்பொழுதே வாழ்வோம்!
மரணமும், உயிர்ப்பும் என்றோ எங்கேயோ நிகழ்வதல்ல. இன்றே, இப்பொழுதே நமது நடுவில் அவைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. “அவை உங்கள்மீது ஆட்சி செலுத்தக்கூடாது. ஏனெனில், நீங்கள் அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்” (உரோ 6:14) எனும் புனித பவுலின் வைரமிக்க வார்த்தைகளை ஆராயும்போது “பாவத்திலிருப்பவன் செத்தவன், அவன் ஒரு நடைபிணம். ஆண்டவர் இயேசுவின் கொள்கைகளைச் செயல்படுத்தி வாழ்பவன் உயிர்பெற்றவன். அவன்தான் அருளின் ஆட்சிக்கு உட்பட்டவன்” என்று பொருள்கொள்ளலாம் அல்லவா!
“உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” (யோவா 11:26) என்று இயேசு சொல்வதன் பொருள் என்ன? “உயிரோடு இருக்கும்போது இயேசுவின் விழுமியங்களை நிலைநிறுத்தி வாழ்பவர் நிலைவாழ்வை இவ்வுலகிலேயே பெற்றவராகின்றார் என்று அர்த்தம் கொள்ளலாமல்லவா!
எனவே, இயேசு ஆண்டவரின் இலட்சியப்படி இன்றே, இப்பொழுதே வாழ்வோம்! மரண நேரத்தில் நிகழவிருப்பதை அந்த ஆண்டவரே பார்த்துக்கொள்வார்!
Comment