No icon

தமிழ்நாட்டில் பிறந்த

போபால் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அலங்காரம் ஆரோக்கிய செபாஸ்டின் துரைராஜ்

இந்தியாவின் போபால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் பணி ஓய்வு பெற சமர்ப்பித்த விண்ணப்பத்தை, அக்டோபர் 4 திங்களன்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது கந்துவா மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் அலங்காரம் ஆரோக்கிய செபாஸ்டின் துரைராஜ் அவர்களை அப்பொறுப்பில் நியமித்துள்ளார்.

1945ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்தில் பிறந்த லியோ கொர்னேலியோ அவர்கள், இறைவார்த்தை துறவுச் சபையில் இணைந்து, 1972ம் ஆண்டு தன் 27வது வயதில் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.ஆங்கில இலக்கியத்திலும் பின்னர் உரோம் நகரில், ஆன்மீகம் மற்றும் இறையியலிலும் பட்டங்கள் பெற்ற கொர்னேலியோ அவர்கள், 1999ம் ஆண்டு கந்துவா மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்று, 2007ம் ஆண்டு போபால் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார். 14 ஆண்டுகள் பேராயராகப் பணியாற்றிய கொர்னேலியோ அவர்கள், தன் 77வது வயதில் பணி ஓய்வு பெறுகிறார்.

1957ம் ஆண்டு தமிழ்நாட்டில், மதுரைக்கருகே, திருநகரில் பிறந்த அலங்காரம் ஆரோக்கிய செபாஸ்டின் துரைராஜ் அவர்கள், இறைவார்த்தை துறவுச் சபையில் இணைந்து, 1985ம் ஆண்டு தன் 28வது வயதில் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். 2009ம் ஆண்டு, தன் 52வது வயதில் கந்துவா மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட துரைராஜ் அவர்கள், 12 ஆண்டுகள் அப்பணியை நிறைவு செய்து, தற்போது, போபால் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்கிறார்.

போபால் உயர் மறைமாவட்டத்தை வழிநடத்தும் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்களும், அப்பொறுப்பை தற்போது ஏற்கும் அலங்காரம் ஆரோக்கிய செபாஸ்டின் துரைராஜ் அவர்களும், இறைவார்த்தை துறவுச் சபையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment