No icon

SPECIAL INTERVIEW - குடந்தை ஞானி

ஒரு சிறப்பு நேர்காணல்!

தூத்துக்குடியின் புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி
                        

ஆசிரியர் குடந்தை ஞானி 

உங்களுடைய குடும்பத்தைப் பற்றி?
கோட்டாறு மறைமாவட்டத்தில் கீழமணக்குடியில் எங்கள் குடும்பமும் ஒரு நல்ல விசுவாசமிக்க கத்தோலிக்க குடும்பம். நான் ஐந்தாவது பிள்ளை.
மூத்தவர் பெஞ்சமின். இரண்டாவது கிருபாசனதாஸ். மூன்றாவதாகப் பிறந்தவர் உடனே இறந்து விட்டார். நான்காவது ஹென்றி. ஐந்தாவதாக நான். ஆறாவதாக டேவிட் ஜோப் (சலேசிய குரு). அடுத்து என் தாய் தவமிருந்து பெற்ற தங்கை செல்வக் கிளி என்று செல்லமாக அழைத்த எமிமாள். எட்டாவதாக இன்னொரு தங்கை. ஆக எங்கள் குடும்பத்தில் எட்டுப்பேர். இருவர்  இப்போது இறைவனில் இளைப்பாறுகின்றனர்.   
தங்கள் இறையழைத்தல் பற்றி?
என்னுடைய பெற்றோர் அந்தோனிபிள்ளை- ஸ்கொலாஸ் டிக்கா ஆகிய இருவருக் குமே விவிலியத்தின் மீது தீராத ஆர்வம்.  நான் சிறு பிள்ளையாக இருந்த போதே சங்கீதம் 23 ஐ மனப்பாடமாகச் சொல்ல என் தாய் கற்றுத்தந்தார். ‘கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன். அவர் புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து, அடர்ந்த தண்ணீரண்டையில் கொண்டுபோய் விடுகிறார்’ என்று நான் அனு தினமும் செபிப்பேன்.
என்னுடைய பெற்றோர்கள் கொஞ்சம் படித்தவர்கள். எட்டாம் ஆம் வகுப்பு முடிப்பதற்கு முன்பாக என் தாய்க்கு திருமணம் ஆகிவிட்டது. என் பெற்றோரின்  வளர்ப்பு எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது.  தினமும் குடும்ப செபம் செபிப்போம். விவிலியம் வாசிப்போம். 
நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுது தான் திருமுழுக்கு பெற் றேன். அதன்பிறகு பீடச் சிறுவனாக இருந்தேன். அப்பொழுதிருந்தே எங்க அம்மா நாங்கள் குருவாகவேண்டும் என்ற அந்த விதையை விதைத்தார்கள்.  எங்கப்பாவுக்கும் அதேஎண்ணம்  இருந்தது.  எங்க அம்மாவுக்குப்  நாலுப் பசங்க எல்லாருமே சாமியாராப் போக னும்னுதான் ஆசை.  என் தந்தை என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே இறந்த விட்ட
காரணத்தால்  மூத்த அண் ணங்க ரெண்டுபேரும்படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டாங்க. அதனால எங்க அம்மா என்கிட்டயும் என் தம்பிகிட்டயும் இறையழைத் தலை எதிர்பார்த்தாங்க.  நான் குருவானேன். எங்கம்மாவுக்கு  அளவு
கடந்த  சந்தோஷம்.  என் தம்பி டேவிட் ஜோப்-ம் சலேசிய சபையில் சேர்ந்து குருவானார்.  நாலு பேருல ரெண்டு பேரு குருவானவராக ஆனதுல அவ்வளவு சந்தோஷம். சுருக்கமாச் சொல்லனும்னா கற்ற இறையியலும், படித்த விவிலியமும்தான். நான் இளைஞனாக இருந்தபோது விடுதலை இறையியல் சிந்தனைகள் எழுந்தன. ஏழைகளுக்காக இயேசுவைபோல போராடவேண்டும். பணி செய்யவேண்டும் என்ற கருத்து என்னைப் போன்ற இளைஞர்களைக் கவர்ந்திருந்தது. நான் குருவாக அபிஷேகம் செய்யப்பட்ட அதே நாளில் (மே 7 ஆம் தேதி) எங்க அம்மா இறந்தது அவங்க செஞ்ச பாக்கியம். ஒரு பூரணத்துவம். 
கோட்டாரிலிருந்து தூத்துக் குடிக்கும், தூத்துக்குடியிலிருந்து வேலூருக்கும் சென்றது எப்படி?
கோட்டார் மறைமாவட்டத்தில் நான் பிறந்திருந்தாலும், என்னை அருள்பணி.கபிரியேல் தந்தை அவர்கள் முறைப்படி அனுமதிபெற்று என்னைக் குருமடத்தில் சேர்த்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். அப்போது சிறுமலர் குருமட அதிபராக இன்றும் முதுமையின் காரணமாக பணி ஓய்வுப் பெற்று வடக்கன்குளத்தில் வசிக்கும் அருள்பணி. ஜோசப் சேவியர் இருந்தார்.  நான் என்  படிப்பை தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு முடிவில் என் உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி மறைமாவட்டத்திற்காகத் தொடர்ந்து படிக்க இயலவில்லை. அருள்பணியாளர்கள் ஜேரோசின், ஜேம்ஸ் விக்டர், அன்டோ ஆகியோர் என்னுடன் படித்தவர்கள். அதன் பின்னர் நான் என் படிப்பைத் தொடர்ந்தேன். 1968 ஆம் ஆண்டு . நான் அந்தக் காலத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, வேலூர் மறைமாவட்டத்திலிருந்து இறையழைத்தல் இயக்குநர் என் பங்கிற்கு வந்திருந்தார்.  என் பங்குத்தந்தை என்னைப் பரிந்துரை செய்தார். ஆட்டுக்குட்டி ஆயர் என்று அழைக்கப்பட்ட வேலூர் ஆயர்  டேவிட் மரிய நாயகம் ச.ச (கும்பகோணத்துக்காரர்) என்னை வேலூர் மறைமாவட்டத்திற்காகத் தேர்ந்துகொண்டார். நான் உட்பட ஏழுபேர் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து வேலூர்மறைமாவட்டத்தில் குருமாணவராகச் சேர்ந்தோம்.பின்னர் இளங்குருமட வாழ்வை சென்னை சாந்தோம் புனித தாமஸ் குருமடத்தில் தொடர்ந்தோம்.  
கல்லூரி வாழ்வுப் பற்றி?
இரண்டு வருடம் சென்னை இளங்குருமட படிப்பிற்குப் பிறகு எங்களைக் கருமாத்தூரில் உள்ள புனித அருளானந்தர் கல்லூரிக்கு பியுசி படிப்பிற்கு அனுப்பினார்கள். என் கல்லூரிப் பருவத்தில் தமிழ் பேராசிரியர் சுகுநா என்கிற குழந்தைநாதன், பேரா.தேவசகாயம், பேரா.ஞானப்பிரகாசம், பேரா.மைக்கேல்சாமி போன்றவர்கள் மிகுந்த தாக்கத்தைக் கொடுத்தனர். அதை முடித்தவுடனே என்னை மட்டும் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க (1970-1974)அனுமதித்த என் ஆயர், என் சக குருமாணவர்களை மேல் குருமடத்திற்கு அனுப்பிவிட்டார்.  நான்மட்டும் தத்துவயியல் அங்கு படித்துவிட்டு, திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரிக்கு  1974 ஆம் ஆண்டு வந்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஓராண்டு தத்துவவியல் படித்துவிட்டு, என் சக குருமாணவ நண்பர்களை இழக்காமல் இருப்பதற்காக  ஆயர் அந்தோணிமுத்து அவர்களின் அனுமதியுடன் களப்பணிக்குச் செல்லாம லேயே  தொடர்ந்து திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்தேன்.  
அங்கு அருள்பணி.லூர்து சாமிஅடிகளார்.சே.ச. அருள்பணி.ராஜாஅருள்பணி.லெக்ராந்த் ஆநுஞ போன்றவர் கள் இறையியலும், விவிலியமும் ஆர்வத்தோடு கற்றுக்கொடுத்தனர்.  இறையியல் படித்து முடித்தேன்.  என் சொந்த ஊரான மணக்குடிக்கு அன்றைய வேலூர் ஆயர் அந்தோணி முத்து  அவர்களே வருகை தந்து  ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க அந்தப் பொன்மாலைப் பொழுதில் (07.05.1979) என்னைக்   குருவாக அருட்பொழிவுச் செய்தார். என் பெற்றோருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. என் தாயின் கனவு நிறைவேறியது. 
இளம்குருவாக, வேலூர் மறை மாவட்டத்தில் சேத்துப்பட்டு புனித லூர்து அன்னை திருத்தலம், போளூர் ஆகிய பங்குகளில் பணிசெய்தேன். பின்னர் பெங்களூரூ புனித பேதுரு குருமடத்தில் (1981-83)  விவிலியத்தில்  முனைவர் படிப்பைத் தொடர்ந்தேன்.  பின்னர் தச்சாம்பாடி பங்கில் (1983-1986) பங்குத்தந்தையாகப் பணியாற்றினேன். பின்னர் உரோமைக்குச் சென்று உர்பானியா பல்கலைக்கழகத்தில்  விவிலியத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். திருத்தூதர் பணி 17 ஆம் அதிகாரத்தில் புனித பவுல்  அரயோபாகு மன்றத்தில் ஆற்றிய உரையையும் நம் சைவசித்தாந்தத்தத்தையும் ‘அருள்’ என்ற அடிப்படையில் ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் (1986-89)பெற்றேன்.  
தங்களுடைய மிஷனரி அனுபவம் பற்றி ?
அப்போது எம் வேலூர் ஆயர் மேதகுமைக்கேல் அகஸ்டின் அவர்களின் ஆணைக் கிணங்க, மேற்கிந்திய தீவுகளில் குவாதலுப்பே (கருகேரா) என்ற தீவுக்கு மறைபணி ஆற்ற மனமுவந்து சென்றேன். இங்கே 4 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள். இதில் 80 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள்.  கறுப்பர்கள் அதிகம். நம்முடைய பாண்டிச்சேரி உள்ளிட்ட பிரெஞ்ச் காலனிப் பகுதிகளிலிருந்து பிரான்ஸ் நாட்டவர்கள் கூட்டிச் சென்ற தமிழர்களிடம் நிலங்களை விட்டுவிட்டு அவர்கள் பிரான்ஸ் திரும்பிவிட்டனர். கறுப்பர்களுடைய ஆதிக்கம் மேலோங்க மேலோங்க புலம் பெயர்ந்த தமிழ்க்குடிகள், இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர்.  
எனவே அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பாரிஸ் வேதபோதக சபையின் குருவானவர் ரோஷிங்க்யோர் விருப்பப்பட, எம் ஆயர் மேதகு மைக்கேல் அகஸ்டின் என்னையும், மறைந்த அருள்பணி.பிரான்சிஸ் சேவியர் அவர்களையும் குவாதலுப்பே தீவுக்கு அனுப்பினார்.  கீழ்ப்படிந்து அங்கு சென்று, பிரெஞ்ச் படித்துக் கொண்டே பணியை ஆரம்பித்தேன். இத்தாலி மொழி ஏற்கெனவே எனக்கு நன்றாகத் தெரியும்.   
பிரெஞ்ச் சீக்கிரமா கற்றுக் கொள்ள வீடு சந்திக்க ஆரம்பித்தேன். நன்மை (நற்கருணை) கொண்டு சென்று நோயாளிகளைச் சந்தித்தேன். ஆறுதல் சொன்னேன். பிரெஞ்ச் சரளமாக பேச வந்தது. கள்ளம் கபடம் இல்லாத அந்த மக்களும் அன்பா இருந்தாங்க. எளிமையா இருந்தாங்க. பிரெஞ்ச் காலனியா இருந்ததனால எல்லாருமே வசதியானவங்க.  இந்தியக் குடும்பங்களெல்லாம் என்னை கூப் பிடுவாங்க. 
ஒன்றரை வருஷத்தில் அந்த மறைமாவட்ட ஆயர்  எர்னஸ்ட் காபோ என் பணியைப் பார்த்துட்டு. என் மேல  நம்பிக்கை வைச்சு இன்னொரு பகுதியான  மோர்னாலோ  அனுப்பினாரு. இப்படி பல இடங்களில் ஆர்வமாகப் பணி செய்தேன். ஆங்கிலத் திருப்பலி வைக்க ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விமானப் பயணம் மேற்கொண்டதுகூட உண்டு.  
இந்த மிஷனரி அனுபவம் நான் எதிர்பாராத மிகச் சிறந்த அனுபவம். நிறையக் குருக்களுக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  மோர்னாலோவில மக்கள் எல்லாம் நல்லா ஒத்துழைத்தாங்க. பிரெஞ்ச உச்சரிப்புல கொஞ்சம் சிரமம் இருந்தாலும் மக்கள் அதை புரிஞ்சுகிட்டாங்க.  ஆரம்பத்துல நான் எழுதி வெச்சுதான் வாசிச்சேன். அப்புறம் சரளமா பார்க்காம பேச ஆரம்பிச்சேன். பிரசங்கம் வைச்சேன். நண்பர் அருள்பணி.சேவியர் அருள்ராஜ்கூட என்னைப்
பார்க்க அங்கு வந்தார்.  ஆறு வருடங்கள் (1990-1996)அங்கே மகிழ்ச்சியாக மனநிறைவுடன் பணியாற்றினேன். 
மறைப்பணி இயக்குநராக தாங்கள் பெற்ற அனுபவம் பற்றி.. வேதியர்களுக்கு வீடு கட்டி கொடுத்தது பற்றி? 
மிஷனரி பணி முடிந்த வுடனே 1996 ஆம் ஆண்டு  இங்க வேலூர் மறைமாவட்டத்திற்கு  ஆயரின் அழைப்பின் பேரில் 1996ல் வந்தேன்.  இங்க வந்தவுடனே  மேய்ப்புப் பணி இயக்குநராக (1996-1999) நியமிக்கப்பட்டேன். இரண்டு வருடங்களில் நிறையத் தியானங்களை வழிநடத்தினேன். பிரசங்கத்திற்குச் செல்வேன். வேதியர்களை ஊக்குவித்தேன். நிதி வசதி இல்லாமல் அவர்கள்
இருந்ததால் குவாதுலுப்பே விலிருந்து நான் கொண்டுவந்த என் சேமிப்பிலிருந்து அவர்களுக்கு தலா 40000 ரூபாய் செலவில் 36 வேதியர்களுக்கு  வீடு கட்டிக் கொடுத்தேன். நிதி வசதி குறைந்த அவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவி.   குவாதுலுப்ல மிஷனரியா பணியாற்றிவிட்டு வரும்போது என்கிட்ட கொஞ்சம் காசு இருந்தது. எனவே  வீடு இல்லாம இருந்த இந்த வேதியர் களுக்கு என்னால முடிந்த சிறு
உதவியா   வீடு கட்டிகொடுத்தேன். சின்ன உதவிதான். பெருமை பேச ஒன்றுமில்லை. என்மேல உள்ள அன்பால அந்த வேதியர்கள் எல்லாம் என்னைய அவங்க குடும்பத்துல ஒருத்தராக் கருதி என் போட்டோவ அவங்க வீட்ல வெச்சிருக்கிறாங்களாம். நல்லது செஞ்சேங்கிற ஒரு மன நிறைவு. சந்தோசம்.  
பேராசிரியராக தாங்கள் பெற்ற அனுபவம் பற்றி ..
பிறகு திருச்சி புனித பவுல்குருத்துவக் கல்லூரியில பேராசிரியப் பணியை முதல் முறையாக  இரண்டுஆண்டுகள் (1999-2001) மனதிருப்தியோடும், அர்ப்பணிப்போடும் செய்தேன்.   பின்னர் ஐந்து ஆண்டுகள் வேலூர் மறைமாவட்டப் பேராலயப் பங்குத்தந்தையாகவும் முதன்மைக் குருவாகவும் பணியாற்றினேன். மீண்டும் புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபராகவும் பேராசிரியராகவும் (2006-2010).  ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். விவிலியத்தோடு மரியியலையும் நேசித்துக் கற்பித்தேன். 
திடீரென்று  செவ்வாய்க்கிழமை என் ஆயர் சின்னப்பா அவர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு, நான் உங்களை சேத்துப்பட்டுப் பங்கிற்கு பங்குத்தந்தையாக நியமித்து இருக் கிறேன் என்றார். அதற்கு நான், ‘ஆண்டவரே! இது உங்கள் விருப்பம். நான் உடனே கீழ்ப்படிகிறேன்‘  என்று சொல்லிவிட்டு, அவர் விருப்பப்படி அந்த ஞாயிற்றுக்கிழமையே பொறுப் பேற்றுக்கொண்டேன்.  
பங்குத்தந்தையாக தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் பற்றி ?
மீண்டும் மறைமாவட்டத்திற்கு திரும்ப வந்து மறைமாவட்டப் பேராலயப் பங்குத் தந்தையாகப் பணியாற்றினேன். அங்கு சேரிட்டி டே கொண்டாடி ஏழை மாணவ, மாணவியருக்கு நாங்களே உதவ
முயற்சியெடுத்தோம்.  எம் மறை மாவட்டத்திலிருந்து அருள்பணி. தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் கோயம்புத்தூருக்காக ஆயராக தேர்ந்தெடுக்கப் பட்டார். முதன்மைக் குருவாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய குருத்துவ வெள்ளிவிழாவைக் கொண்டாடினேன். எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே. சாவது ஆதாயமே என்ற புனித பவுலின் போதனையை மையப்படுத்தினேன்.  
"கனிவும் மனத்தாழ்மையும்" என்று தங்கள் ஆயர்நிலை விருது வாக்கைப் பற்றி? 
குருத்துவத்தில் முப்பணிகளைப் பற்றி சொல்லும்போது கற்பித்தல், புனிதப்படுத்துதல். ஆளுதல் ஆகியவற்றைச் சொல்வார்கள். இதில் ஆள்வது  என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலத்தில் படிஎநசniபே என்று சொன்னால் வழிகாட்டுவது என்று தான் பொருள்கொள்ள வேண்டும். அதில் எளிமைத் தன்மையும் இல்லை. தாழ்ந்த நிலையும் இல்லை. நம்  திருச்சபையும் ஆளுதல் என்பதைத் தவறாக அரசியல் போக்கோடு  உள்வாங்கிக் கொண்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.  குருக்களும் ஆயர்களும் தொண்டாற்றவே அழைக்கப் பட்டிருக்கிறார்கள். அதிகாரம் செலுத்துவதைவிட அன்பு செய்வது
தான் சிறந்தது. இன்றைய அதிகாரப்பசியைப் போக்க சிறந்த ஒரே வழி,  மனத்தாழ்ச்சி. இரண்டே இரண்டுமுறைதான் நம் ஆண்டவர் இயேசு ‘ நீங்கள் என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். முதலாவதாக,     ‘நான் உங்களை அன்பு செய்வது போல்.. என்று  தன்னையே ஒரு முன்மாதிரியாகக்  காட்டியும், இரண்டாவதாக என்னிடம் இருந்துகற்றுக் கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும்  உடைய வன் என்றும் சொல்லுவார். 
இங்கே  எளிமை என்பது கோழைத்தனம் அல்ல. எளிமை என்பது துணிவு. துணிவு இல்லாத பணிவு, பணிவல்ல. ழரஅடைவைல அநயளே nடிவ நெiபே உடிறயசன, சயவாநச உடிரசயபநடிரள. அதைத்தான் இயேசு செய்தார். இதயம் எப்பொழுதும் அன்பை உருவாக்கும். புத்தி எப்பொழுதும் ஆணவத்தை உருவாக்கும்.  இதயம் - புத்தி ஆகிய இந்த இரண்டுக்கும் உள்ள மோதலைச் சமநிலைப்படுத்தி ஒருங்கிணைப்பதுதான் தாழ்ச்சி. அதிகாரமும் ஆணவமும் கிறிஸ்தவத்திற்கு  எதிரானது. அதைஎதிர்த்துப் போராடும் திருஅவை யையே நான் விரும்புகிறேன்.  வறட்டுக் கௌரவங்களுக்கும் வீர  ஆவேசத்திற்கும்,  நான் கலகம் பண்ணினால் சாதித்து முடிப்பேன் என்று சொல்லுவதற்கும், எதிர்ப்பு சக்தியாக இருக்க வேண்டும். நீ போராடித் தோற்றாலும் உன் போராட்டமே வெற்றி. தண்ணீரில் நீந்தும் வரைக்கும்தான் மீன். நீந்தவில்லை என்றால் அது இறந்த மீன். தண்ணீர் கொண்டு போய்விடும். நீ உயிரோடு இருக்கும்வரைக்கும் எதிர்நீச்சல் போட்டுதான் ஆக வேண்டும். அதுதான் வாழ்வு. அதுனால போராட்டம் இல்லாம வாழ்றோம்னு சொல்ல முடியாது. போராட்டங்களும் துன்பங்களும் வரும். அவற்றை எல்லாம் சமாளிக்க வேண்டிதான் நாம் இருக்கிறோம். ஏனென்றால் நம்முடையச் வாழ்வே சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின் செல்லவில்லை என்றால் நீ என் சீடனாக இருக்க முடியாது என்று ஆண்டவர் சொல்கிறார் இல்லையா? அதுனால துன்பங்கள் வரும்.  அப்போது ஆண்டவரே.பலம் தாரும். வரம் தாரும் உம்மோடுகூடவும் உம்மைநோக்கியும் நாங்க சுமந்துவந்தால் நல்லாயிருக்கும். அந்த சிலுவை தான். சிலுவையை மறந்துவிட்டோம் என்றால் நமக்கு எல்லாமே கஷ்டங்களாக, துன்பங்களாக உண்டாகும். அப்ப உங்களுக்குக் கவலைகள் உண்டாகும். மனஅழுத்தங்கள் ஏற்படும். நீங்களாகவே உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்திகொள்கிறீர்கள். சிலுவையை வாழ்க்கை யுடையது என்று நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என் றால் இவைகள் எல்லாம் பறந்தே போய்விடும். இன்னும் செய்யமுடியாது.  இவைகளுக்கு சிம்மசொப்பனமாக நீங்களே மாறமுடியும்.  சேத்துப்பட்டு பங்குத்தந்தையாக நான் பெற்றுக்கொண்ட அனுபவமும் அதுதான். 
தங்கள் இலட்சினைக்கான விளக்கம்?  
கனிவும் மனத்தாழ்மை யும் என்ற பண்புகள் விவிலியத்திலிருந்து இறைவார்த்தையிலிருந்து சுரக்கின்றன. அந்த இறைவார்த்தையை நான் வாழ்பவனாக, ஒளிர்விக்கின்றவனாக  இருக்க வேண்டும்.  இரவீந்திரநாத் தாகூர் தாம் எழுதிய ஒரு கவிதையில், உன் அருட்பேரொளி நடுவினிலே என் சிறு விளக்கையும் ஏற்றி வைப்பேன். என்று குறிப்பிடுவார்.  நீ ஒரு சிறு விளக்குதான்.  இயேசுவைப் போல உன் தாழ்மையை நீ வெளிப் படுத்தனும்.  அந்த தாழ்மை கனிவு என்பதற்கு அடையாளம் அந்த அன்பு இதயத்திலிருந்து கசிந்து வருகின்ற இரத்தம். கனிவும் அன்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். அருள் பணியாளர்களில்கூட மிகுதியாகப் படித்தவர்கள் இருக்கலாம்.  சிறந்த நிர்வாகிகள் இருக்கலாம். பலதிறமை வாய்ந்தவர்கள் இருக்கலாம். ஓர் ஆயர் என்பவர் எல்லாத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டவர் அல்லர். தனக்குத் தெரியாததை மற்றவரிடம் கேட்க வேண்டும். சொல்லித் தருபவரும் ஆயரே என்னுகிட்ட கேட்டாருடா என்று தலைக்கணம் கொள்ளக் கூடாது. உன்னிடம் உள்ள திறமையும் கொடையும் பொதுநன்மைக்காகத்தான். நீங்க நம் வாழ்வு ஆசிரியர். பத்திரிகை துறையில்  உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஜேர்னலிசத்தில் உயர் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறீங்க.  அதை நீங்கள் உங்களுக்காக வைத்திருந்தால் என்ன பயன்?  நம் வாழ்வு வழியாக எத்தனையோ கோடி மக்களைச் சென்றடைகிறது. இப்படி எல்லாக் குருவும் தங்களுக்கிட்ட இருக்கிற திறமையை பொதுநலனுக்காக வைச்சிட்டாங்கன்னா..அகங்காரம் ஆணவம் வறட்டு கௌரவம் எல்லாம் மறைஞ்சிடும். நல்லவைகளுக்காகப் போராட வேண்டும். மையத்தில் விவிலியம் நீ உலகிற்கு ஒளியாக இருக்கிறாய் என்று சொல்கிறது. இந்த இறைவார்த்தையை நீ வாழ்வாக்க வேண்டும்.  என்னைப் பொருத்தவரை பணிவு இல்லாமல் எந்தப் புண்ணியமும் புண்ணியம் ஆக முடியாது. (ஒவ்வொரு புண்ணியமும் தாழ்ச்சி என்ற புண்ணியத்தோடு இணையும்போது தான் முழுமையடைகின்றன. எல்லா புண்ணியங்களுக்கும் அஸ்திவாரமும் அடிப் படையும் தாழ்ச்சியே ஆகும்). பணிவோடு செய்வதுதான் பணி.
தூத்துக்குடி மறைமாவட்ட மக்கள் பற்றி?
தூத்துக்குடி மறைமாவட்டம்  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மறைமாவட்டமாகும். ஆழமான பாரம்பர்ய் விசுவாச மிக்கது. இதனை இன்னும் விசுவாசத்தில் பயிற்சி கொடுக்கப் பட வேண்டும். விவிலியத்தில் விளக்கம் கொடுக்கப்படவேண்டும். ஆன்மிகத்தில் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும். கடற்கரையோர மக்கள் உள்நாட்டு மக்கள் என்று இருக்கிறார்கள். கடற் கரையோர மக்களுடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. புயலோடு கடல் அலையோடு, மீனோடு...என எப்பவுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இயல்பாகவே அவர்களிடம் போராட்டத்தின் தன்மை அதிகமாக இருக்கும்.  அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழுவாக வருவார்கள். விவாதிப்பார்கள். இதெல்லாம் இயல்பு. அவர்களைப் போல அன்புக்கும் அரவணைப்புக்கும் சொந்தக்காரர்கள் யாரும் இருக்க முடியாது. உயிரையும் கொடுத்து ஆயர்களைக் காக்கக் கூடியவர்கள். முதல் சுதேசி ஆயர் மேதகு ரோச் ஆண்டவரே இந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறார் என்று சொன்னால் அது அவர்களின் பெருமை. பாரம்பர்யம். உள்நாட்டு மக்களும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். விசுவாசத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இருவரும் இணைந்து திருச்சபையைக் கட்டிக் காக்க வேண்டும். மனித உணர்வுகள், முரண்பட்ட கருத்துகள் தான் என்ற எண்ணங்கள் எதிர்ப்புக் குரல்களாக மாறிவிடுகின்றன. ஆன்மிகத்தைப் பாதிக்கிறது. எந்த நோக்கத்திற்காக குருக்களானோமோ எந்த நோக்கத்திற்காக கிறிஸ்தவர்களானோமோ அந்த அடிப்படையையே தகர்த்துவிடுகிறது. இது எல்லா மறைமாவட்டங்களில் உள்ள ஒன்றுதான். இதனை மனிதர்களான நம்மால் களைய முடியும் கடவுள் துணையிருக்கிறார். தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவருக்கு செவிசாய்த்தாலே போதும்.
ஞானமிக்கவர்களின் துணையோடு ஒத்துழைப் போடும் இம்மறைமாவட்டத்தை ஆன்மிகத்திலும் பொருளாதாரத்திலும் அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் இன்னும் பல கோணங்களில் இதனை வளர்த்தெடுக்க முடியும். 
இன்னும் எட்டு ஆண்டுகள்தான் எனக்கு உள்ளன. இந்த எட்டு ஆண்டுகளே எனக்கு ஒரு யுகம்.  பங்குத்தந்தையாக எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து. அவர்களைக் கேட்டு அவர்களுக்கு என்னால் அன்போடும் கனிவோடும் பணி செய்ய முடியும். இறைவார்த்தையை வாழ வேண்டும். நற்கருணையை மையப்படுத்த சூவண்டும். மாதா வணக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எல்லா மனித ஆற்றலால் முடியும் என்று சொல்ல இயலாது.  கடவுளின் துணையால் எல்லாம் இயலும். கடவுளைப் போல மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் அவா. எல்லாரும் பிரிவினைகளைத் தகர்த்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து சமத்துவத்தை மலரச் செய்ய வேண்டும். 


நம் வாழ்வு வார இதழைப் பற்றி? 
தமிழ் கூறும் நல்லுலகில் கிறிஸ்தவர்களின்  ஒரே வாரப்பத்திரிகையாக  இறைமக்களின்  குரலாக வெளிவரும்  நம் வாழ்வு வார பத்திரிகையின் பணி மிகவும் பணி மேலானது. சிறப்பானது. திருச்சபையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நாட்டு நடப்புகளைப் பற்றியும் அரசியல் பற்றியும் விழிப்புணர்வூட்டி  கிறிஸ்தவர்களை சிறப்பாக வழிநடத்துகிறீர்கள். ஆன்மிகத்திற்கும் மறையுரைக்கும் எல்லாத்துக்குமே நல்ல நல்ல கட்டுரைகள் நம் வாழ்வில் வெளி வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பணியை நீங்கள் இன்னும் உத்வேகத்தோடு செய்யுங்கள். அதுவும் இல்லாமல் போனால் திருச்சபை இருண்டுபோய்டும்னு நினைக்கிறேன்.  உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள். உங்கள் உடன் பணியாளர்கள் அனைவருக்கும் என் ஆசிர். நான் ஆயராக இருப்பதனால் என் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் இருக்கும்.  எம் மறைமாவட்ட இறைமக்களும் நம் வாழ்வின் சந்தாதாரர்களாகி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.. 

 

Comment