No icon

Tamilnadu Church News

பெரிய வியாழனன்று நடைபெறும் வாக்குப் பதிவு

பெரிய வியாழனன்று நடைபெறும் வாக்குப் பதிவு

இந்தியத் தேர்தல் ஆணையம் கிறிஸ்தவச் சிறுபான்மையினரின் சமய உரிமைகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக புனித வாரத்தில் இன்னும் குறிப்பாக பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி 13 மாநிலங்களுக்குட்பட்ட 97 பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவை அறிவித்துள்ளது என்பதை நாம் அறிந்ததே. தமிழகம், புதுவை, மற்றும் கர்நாடக ஆயர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஏனைய பன்னிரு மாநிலங்களைப் போலன்றி தமிழகத் திருஅவைத் தலைவர்கள் குறிப்பாக தமிழக ஆயர்பேரவையின் தலைவர் மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி , தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நாளில் நடத்த வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் கிறிஸ்தவர்களின் செப வழிபாடுகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையருக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.  மார்ச் மாதம் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில். பெரிய வியாழக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், தேர்தல் ஆணையம் கிறிஸ்தவர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி வாக்குப்பதிவு நடைபெறும் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் செபிக்க அனுமதிப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பதை எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவப் பள்ளிகள் ஆலய வளாகத்திற்குள் அமைந்திருப்பதால் வாக்குப் பதிவு நாளன்று வழிபாட்டிற்கு இது இடையூறாக இருக்கும் என்பதாலும் கிறிஸ்தவர்களுக்கு பெரிய வெள்ளி, ஈஸ்டரைப் போல பெரிய வியாழக்கிழமையும் மிக முக்கியம் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது. 


பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஐம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம். மற்றும் புதுவை ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 97 பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


குருக்கள், கன்னியர்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ வாக்காளப் பெருங்குடி மக்கள் சிரமம் பாராமல்  இந்தப் பெரிய வியாழக்கிழமையன்று வாக்குச்சாவடி சென்று தங்கள் வாக்குகளைப் பதிவுச் செய்யும்படி நம் வாழ்வு வார இதழ் சமூக அக்கறையுடன் வலியுறுத்தி வேண்டுகிறது. 

Comment