No icon

​​​​​​​ஓலக்கோடு ஜான்

புனிதரின் பூர்வீக நிலத்தில் நட்டாலம் திருத்தலம்

“புனிதரின் பொற்பாதங்கள் பதிந்த இடம்

பூவுலகின் மாந்தரெல்லாம் உற்று நோக்குமிடம்

வாழ்வின் வசந்தங்கள் வா வாவென்று அழைக்குமிடம்

குவலயத்தின் வரைபடத்தில் வளம் பெற்ற இடம்” ஆம்!

அந்த இடம் நட்டாலம். இந்திய ஒன்றியத்தின் தென்கோடி சமஸ்தானம் இது இன்றைய குமரி மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம். அன்றைய தொன்மை மாறா வனப்புகள் உள்ளூர்மக்கள் புனிதரை இந்த பூவுலகிற்கு தந்த புனித மண் என்று, பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். அவர் பிறந்து, வாழ்ந்து, கொஞ்சிக்குலாவிய பூர்வீகம். இன்று திரு அவையில் அங்கமாகி, அண்டிவருவோரை அரவணைத்து அருள் பாலிக்குமிடமாக விளங்குகின்றது.

கடந்த 15-05-2022 இல் புனிதராக நம் மறைசாட்சி உலகுக்கு அறிவிக்கப்பட்டாலும், அவர் வாழ்ந்த காலத்திலும், இறைமடியில் சங்கமம் ஆனப்பின்னும் என்றும் மக்கள் மனதில் அவர் புனிதராக வாழ்ந்துக் கொண்டேதான் இருந்தார்.

புனிதரின் பூர்வீக நிலம்

நம் புனிதர் தேவசகாயத்தின் பூர்வீக நிலத்தில் ஒரு சென்ட் நிலமாவது வாங்கி, அதில் ஓர் சிலுவை நட்டு, அதில் நினைவிடம் ஒன்று அமைக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய பேராவல். இவ்வாறு ஏங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் திரு. ஞானப்பிரகாசம். இவர் அஞ்சல்துறையில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மருமகன் கனகப்பன். திருவாளர் கனகப்பனும், புனிதரின் குடும்ப வாரிசுகளில் ஒருவரான அப்புக்குட்டன் நாயரும் ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள். தபால்காரர் ஞானபிரகாசம் தனது மருமகன் கனகப்பன் மூலம் அப்புக்குட்டன் நாயரிடம் (கனகப்பனுக்கு) வீடு கட்ட நிலத்தை விலைக்கு கேட்டார். ஏற்கனவே பலரும் கேட்டு நிலத்தை விலைக்கு கொடுக்காத நிலையில், நண்பருக்கு வீடு கட்டுவதற்கல்லவா நிலம் கேட்கிறார் என்றுணர்ந்த அப்புக்குட்டன் நாயரும், இறுதியில் சம்மதித்தார். நிலம் பத்திரப் பதிவுச் செய்யும் நேரத்தில் இப்பகுதி எல்லைக்குட்பட்ட முள்ளங்கினாவிளை பங்கு அருள்பணியாளர் ஜோசப் அடிகளார் அப்புக்குட்டன் நாயரிடம் நேரில் வந்து, அன்பான வேண்டுகோளை முன்வைத்தார்.

அதாவது “உங்கள் தாத்தா தேவசகாயம் அவர்கள் ஒருநாள் புனிதராக உலக மக்களால் போற்றப்படவிருக்கிறார். அந்நேரம் அவர் பிறந்த மண்ணில் அவருக்கு ஒரு பேராலயம் அல்லது அவரது பிறப்பை மையமாகக்கொண்டு, இங்கு ஏதாவது உருவாக்கப்பட வேண்டியிருக்கும். நீங்கள் இந்த நிலத்தை எமக்குத் தருவதாக இருந்தால் இறைவனும் உங்கள் தாத்தாவும் உங்கள் மேலும், உங்கள் குழந்தைகள் மேலும் அளவின்றி அருள்மழைப் பொழிவார். இந்த இடம் உலக மக்களின் போற்றுதலுக்குரிய இடமாக மாறும். எமக்கு தருவதாக இருந்தால் நீங்கள் பேறு பெற்றவர்கள்” என்றார். (இன்று இது இவ்வாறே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது) சுமார் ஒரு மணி நேரம் பேசினார் அருள்தந்தை ஜோசப் அடிகள், அடுத்து நண்பர் என்ற முறையில் தனது மனநிலையை எடுத்துச் சொன்னார் கனகப்பன். இதன் பின்னர், அருள் தந்தையின் பெயரில் பத்திரப்பதிவு செய்ய சம்மதித்தார். இவ்வாறாக 06.05.1976 இல் புனிதரின் பூர்வீகச் சொத்தில் 14 சென்ட் நிலம் முதன் முதலாக திரு அவைக்கு வாங்கப்பட்டது.

இயேசுவின் திருஇருதய ஆலயம்

இவ்விடத்தில் இயேசுவின் திருஇருதய ஆலயம் என்ற பெயரில் ஒரு குருசடி (சிற்றாலயம்) அமைக்கப்பட்டு, 30.12.1976 இல் கோட்டாறு ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. (கேரளா மாநிலம் திருச்சூரில் செய்யப்பட்டு முதன்முதலாக 02.12.2012 ஆம் நாள் பேராயர் சூசைபாக்கியம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட புனிதரின் ஏழு சுரூபங்களில் ஒன்று இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது). இந்த ஆலயத்தின் அருகில் அப்புக்குட்டன் நாயரின் மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான 36 சென்ட் நிலம் இருந்தது. இவர்கள் இந்நிலத்தை விற்றால் அதை வாங்குவதற்கென ஒருகுழு உருவாக்கப்பட்டது.

நிர்வாகிகள் விவரம்

இதில் தலைவராக அருள்பணி.ஜோசப் (முள்ளங்கினாவிளை பங்கு பணியாளர்), துணை தலைவராக திரு. கே. அம்புரோஸ், செயலராக திரு. ஜி. செல்வராஜ், பொருளராக திரு.ஜி. அமிர்தப்பன், உறுப்பினர்களாக திருவாளர்கள் எ. சிங்காராயன், மரியசிசில், பிரான்சிஸ், தேவசகாயம், அந்தோணிமுத்து ஆகியோர் பொறுப்பேற்றனர். இதில் திரு. அம்புரோஸ், திரு. செல்வராஜ், திரு. அமிர்தப்பன், திரு. சிங்காராயன் ஆகியோர் 28.11.1984 முதல் புனிதர் பட்ட குழுவிலும் அங்கம் வகித்தனர். இவர்கள் ஊர்ஊராகச் சென்று, நன்கொடைகள் வசூலித்தனர்.

இதில் வெள்ளிகோடு ஊரில் கற்றாழை தும்பை சீர் செய்துக்கொண்டிருந்த குடிசை வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருந்த பெண் ஒருத்தி, அன்றைய தேவைக்கு என வைத்திருந்த எட்டு அனா (50 காசு) வை புனிதருக்கு காணிக்கையாக வழங்கினார். இதுபோல் ஏழைகள் தங்கள் சூழ்நிலைகளுக்கேற்றவாறு அள்ளி வழங்கினர். இதில் குலசேகரம் ஊரில் மேத்யூ என்பவர் ரூ.101 வழங்கினார். இதுதான் அன்று கிடைத்த மிக உயர்ந்த தொகை. இவ்வாறாக, பெற்றத்தொகையைக் கொண்டு, அப்புக்குட்டன் நாயரின் சகோதரர்களிடமிருந்து 12.04.1979 இல் அந்த 36 சென்ட் நிலத்தை வாங்கினர்.

அருள்பணி. ஜோசப் அவர்களைத் தொடர்ந்து, அருள்பணியாளர்கள் அல்போன்ஸ், ஸ்தனிஸ்லாஸ், அருளப்பா, கஸ்பார் ஆகியோர் பணியாற்றினர். இக்காலங்களிலும் இக்குழு சிறப்பாக 17 ஆண்டுகள் பணிசெய்து, பல வளர்ச்சி திட்டங்களைக் கண்டுள்ளது. தொடர்ந்து வந்தவர்களும் சிறப்பாகப் பணிச்செய்து, இன்று காண்போர் வியந்துப் போற்றும் வகையில் வளர்ச்சிப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.

புனிதரின் வீடு               

புனிதர் பிறந்து வளர்ந்த வீடு புனரமைக்கப்பட்டு, ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. புனிதர் பயன்படுத்திய வாள், கண்டகோடாரி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய திருத்தல அதிபராக அருள்பணி. ரசல்ராஜ், இணை அதிபராக அருள்பணி. ரோமரிக் ததேயு ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

திருத்தல வளர்ச்சிக்குழுவும் இதில் முக்கிய பங்காற்றிவருகிறது. புனிதரின் பூர்வீக நிலத்தில் புனிதரின் ஆலயம் அமைந்துள்ளது. அவரும், அவர் குடும்பத்தினரும் குடிநீருக்குப் பயன்படுத்திய கிணற்று நீரை மக்கள் புதுமை நீராக அருந்தி, நலன்கள் பல பெற்று வருகின்றனர். புனிதர் பட்டத்திற்கு காரணமானவர் அருந்திய நீரும் இதுவே.

Comment