No icon

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம்

அத்திபாளையம் பிரிவு, அசிசி நகர், கணபதி, கோவை-641 006

புனித அசிசியார் பங்கு உருவான விதம்

1972 ஆம் ஆண்டு, 25 குடும்பங்கள் கணபதி கிராமத்தில் வசித்து வந்தன. கோவில் இல்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற மூத்தோர் சொல்லுக்கிணங்க சிற்றாலயம் கட்டிட ஆலோசிக்கப்பட்டது. அதன் விளைவாக 1980 ஆம் ஆண்டு, மேதகு ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களைச் சந்தித்து, தங்களது விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆயர் அவர்களும் தேவையை உணர்ந்து, உடனடியாக அத்திபாளையம் பிரிவில் 50 சென்ட் நிலத்தை தாராளமாக வாங்கி கொடுத்தார். அதன் பின்பு, சிற்றாலயம் கட்டிட 1987 ஆம் ஆண்டு மே 3-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. காந்திபுரம் பங்கு தாய் பங்காக செயல்பட்டு, கப்புச்சின் அருள்தந்தையர்களால் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கணபதி பங்கு மக்கள் வழிநடத்தப்பட்டடார்கள். கணபதி பங்கில் மக்கள் தொகை அதிகமாகவும், தொழில் ரீதியாக வளர்ந்து வருகின்ற நகரமாகவும் கோவை மறைவட்டத்தில் முதன்மை இடமாக உருவாகிவந்ததன் காரணமாக, 500 குடும்பங்கள் இங்கு வந்து குடியமர்ந்தார்கள். எனவே, ஆலய விரிவாக்கம் தேவைப்பட்டது. மீண்டும் ஆயர் அவர்களை அணுகியபோது, அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்தார். ஜூன் 1, 1990 ஆம் ஆண்டு, காந்திபுரம் பங்கிலிருந்து கணபதி புதிய தனிப்பங்காக உருவானது. புனித பிரான்சிஸ் அசிசியாரைப் பாதுகாவலராகக் கொண்டு, ஆலய விரிவாக்கப்பணி தொடங்கப்பட்டு, அக்டோபர் 9, 1994 ஆம் ஆண்டு, கோவை மேதகு ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது.

தற்போது 1500 குடும்பங்கள் கணபதி பங்கில், அசிசியாரின் பாதுகாவலில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது ஆலய இடப்பற்றாக்குறையின் காரணமாக பழைய ஆலயம் 2014 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய ஆலயத்திற்கான கட்டுமான பணி தொடங்கியது. துரதிஷ்டவசமாக பல்வேறு தடங்கல் ஏற்பட்டது. ஆயர் அவர்கள் உடனடியாக பரிசீலனை செய்து கட்டிட பணியை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தார்கள். குறைபாடுகளையும், விதிமீறல்களையும் கண்டறிய சிறப்பு ஏழு பேர்கொண்ட அருள்தந்தையர்களை நியமனம்  செய்தார். ஆய்வுசெய்த பிறகு குறைபாடுகளும், விதிமீறல்களும் உறுதிப்படுத்தப்பட்டன. எனவே, புதிய ஆலயம் கட்டுகிற அனைத்து பணிகளையும் நிறுத்தி விடும்படி அப்போதைய பங்குத்தந்தையிடம் ஆயர் கட்டளை பிறப்பித்தார். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக ஆலயம் இல்லாமல் பங்கு மக்கள் படுசிரமங்களுக்கும் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகிற நிலை ஏற்பட்டது. ஆன்மிக வழிபாடு இல்லாமல் மக்கள் உறவுகளும் சிதைந்து போயின.

அதன் பின்பு, ஆயர் அவர்கள் அருள்தந்தை ஜான்பால் வின்சென்ட் அவர்களைப் பங்குத்தந்தையாக பணி நியமனம் செய்தார்கள். 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஆலய வரைவுபடத்தை தயாரிக்கும்படியும், அதன் தொடர்ச்சியாக புதிய ஆலயத்திற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் விரைவுபடுத்தும்படி ஆயர் அவர்கள் பங்குத்தந்தையிடம் கூறினார்கள். அதன் முயற்சியாக இறையருளால் அரசாங்கக் கட்டிட அனுமதி முறையாக பெறப்பட்டது. விதிமீறல் செய்யப்பட்ட பழைய கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. டிசம்பர் 9, 2018 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைந்து ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கார் பார்க்கிங் வசதி மற்றும் கான்கிரீட் மேற்கூரை என சகல அடிப்படை வசதிகளோடு, மக்களின் எதிர்பார்ப்புகளோடு புதிய ஆலய கட்டிட பணி நடைபெற்று வருகிறது. மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ், முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பங்கு பேரவை உறுப்பினர்கள், கணபதி பங்கு மக்கள், மறைமாவட்ட மக்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது உதவியுடன் பிரமாண்டமான ஆலயம் இறையருளால் முழுமையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.

எம் மறைமாவட்ட ஆயராக 20 ஆண்டுகளை இறைவனின் அருள்துணையுடன் நிறைவுச் செய்யும் ஆகஸ்டு 28, 2022 அன்று ஆலய பிரதான நுழைவாயிலில் நிலைக்கதவு பொருத்தி புனிதப்படுத்தும் சடங்கு எம் ஆயரின் தலைமையில் நடைபெற உள்ளது. முற்றுப்பெறாத ஒரு சில பணிகளுக்கு உங்கள் அனைவரது தாராள நன்கொடைகளையும், பொருளுதவிகளையும் எதிர்பார்க்கிறோம். இந்தப் புனித பணிக்கென உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். நன்கொடையாளர்களாக புதிய ஆலய பணிக்கென அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்.

கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

தொடர்புக்கு:

அருட்பணி. ஜான் பால் வின்சென்ட்

பங்குத்தந்தை

போன் : 94427 64539

 

Comment