புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்
வேளாங்கண்ணியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டுத் திருவிழா
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 14 Sep, 2022
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 7 ஆம் தேதி அலங்காரத் தேர்பவனியுடன் நிறைவுபெற்றது. ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சியாக தினமும் பகல் 12 மணிக்கு கொடியேற்றமும், பல்வேறு மொழிகளில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அலங்காரத் தேர்பவனி செப். 7 ஆம் தேதி இரவு நடைபெற்றது.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், மாலை 5.15 மணிக்கு சிறப்புக் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேரை புனிதம் செய்விக்கும் வழிபாட்டுக்குப் பின்னர், இரவு 8.00 மணிக்கு அலங்காரத்தேர் பவனி தொடங்கியது. கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இரவு 8.50 மணியளவில் தேர்பவனி நிறைவடைந்தது. தேர் பவனியில் குழந்தை இயேசுவுடன் கூடிய வேளாங்கண்ணி மாதா உருவம் தாங்கிய பெரிய தேர், அதிதூதுரான புனித மிக்கேல், புனித அந்தோனியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா உள்ளிட்ட 7 தேர்கள் இடம் பெற்றன.
கொரோனா பொதுமுடக்கம் தளர்வுகள் காரணமாக, 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர் பவனியில் மிக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர். வேளாங்கண்ணியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆண்டுப் பெருவிழாவில் அன்னைப் பிறந்தநாள் சிறப்பு வழிபாடுகள் பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடைபெற்றது. விழாவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன் ஆண்டுப் பெருவிழா நிறைவடைந்தது..
Comment