No icon

கோலாகலமாக நடைபெற்ற

தஞ்சை ஆயர் மேதகு ஆ. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் ஆயர்நிலை வெள்ளிவிழா

தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டின் வெள்ளிவிழா தஞ்சையில் உள்ள வேளாங்கண்ணி கலைக் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெள்ளிவிழா நாயகர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, விழா மேடைக்கு மக்களின் ஆரவாரத்திற்கிடையே அழைத்துவரப்பட்டார். அதனைத் தொடர்ந்து விழா நாயகரை வாழ்த்தி, கலைநிகழ்ச்சிகளுடன் தஞ்சை மறைமாவட்ட குருக்களின் சார்பில் பேரருள்முனைவர். பெரியண்ணன் செபாஸ்டின் அவர்களும், பொதுநிலையினர் சார்பில் திரு. கிளமெண்ட் அவர்களும், துறவியர் சார்பில் அடைக்கல அன்னை சபைத் தலைமையன்னை மரியா பிலோமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழக ஆயர் பேரவை சார்பில் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும், சிறப்பு விருந்தினரும் ஆயர் அம்புரோஸ் அவர்களின் முன்னாள் குருமாணவருமான மேமிகு கர்தினால் அந்தோணி பூளா அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். ஆயரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒளிப்படம் திரையிடப்பட்டது. அருள்முனைவர் ஜோசப் லயோனல் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட வெள்ளிவிழா மலரை கர்தினால் அவர்கள் வெளியிட்டு மகிழ்ந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கும், ஆயர் பெருமக்களுக்கும் விழா நாயகர் நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து விழா நாயகர் மேதகு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் வெள்ளிவிழாத் திருப்பலி நடைபெற்றது. வெள்ளிவிழாவிற்கு மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் திரளான எண்ணிக்கையில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் 75வது பிறந்தநாளில் அக்டோபர் ஆறாம் தேதி நன்றியுடன் கூடிய நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள்திரு. ஜான் ஜோசப் சுந்தரம் அவர்களும் வேந்தர் பேரருள்திரு. ஜான் சக்கரியாஸ் அவர்களும் மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவிகளுடன் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.  ‘நம் வாழ்வு வார இதழும் பெரும் பொருட்செலவில் 64 பக்கங்கள் நிறைந்த முழு வண்ண சிறப்பிதழை வெளியிட்டது.

Comment