திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதர் முன்னிலையில்
பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயருக்கு பாலியம் அணிவிக்கும் விழா
- Author குடந்தை ஞானி --
- Monday, 31 Oct, 2022
ஏப்ரல் 29, 2022 அன்று பாண்டிச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், பேராயருக்குரிய பாலியம் எனப்படும் பேராயர் திருநேரியலைத் (தோள்துகிலைத்) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருத்தூதர்களான புனித பேதுரு - புனித பவுல் திருநாளன்று பெற்றுக்கொண்டார். அப்படி திருத்தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட பாலியத்தை முறைப்படி அணிவிக்கும் விழா அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி புதுவை புனித ஜென்மராக்கினி உயர்மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் தூதரான பேராயர் மேதகு லியோ போல்தோ ஜிர்ரெல்லி அவர்கள் முன்னிலையில், பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கு பாலியம் அணிவிக்கும் விழா நடைபெற்றது. பேராயர் அவர்களும் திரு அவைமீதான தன் நம்பிக்கை அறிக்கையையும் மெய்யுறுதி உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் வழங்கி கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து பாலியம் குறித்து தகுந்த விளக்கங்களைத் தெரிவித்து, செபச் சிந்தனையுடன் பாலியத்தை அணிவித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேராயரின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது; தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் மறையுரையாற்றினார். இத்திருப்பலியில் பணி நிறைவுப்பெற்ற ஆயர்கள் மேதகு சூசைமாணிக்கம், மேதகு பீட்டர் ரெமிஜியுஸ், பாளை ஆயர் மேதகு அந்தோனிசாமி சவரிமுத்து, சேலம் ஆயர் மேதகு இராயப்பன், திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியராஜ், வேலூர் மறைமாவட்ட நிர்வாகி பேரருள்திரு. ஜான் ராபர்ட், மீரட் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி வலேரியன் பின்ட்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். ஜூன் 29 ஆம் தேதி திருத்தந்தையிடமிருந்து பாலியத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில், வத்திக்கானில் பத்து நாட்களுக்கு கோவிட் பாசிட்டிவ்வால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் பேராயரின் பொறுப்பேற்பு விழாவிலும் இந்தப் பாலியம் அணிவிக்கும் விழாவிலும் திருத்தந்தையின் தூதர் மேதகு லியோ போல்தோ அவர்கள் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Comment