மதுரை எஸ்.எஸ்.காலனி,
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!
- Author குடந்தை ஞானி --
- Monday, 14 Nov, 2022
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பாலகிருஷ்ணன்-மாலதி தம்பதியர் இரு மகன்களுடன் வசித்துவந்துள்ளளனர்.
பாலகிருஷ்ணன் தனியார் ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளைய மகன் சிவசங்கர் எம்.பி.பி.எஸ் படித்துவருகிறார். சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்கள்.
கடந்த வாரம் மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
மாலதியின் உடலை வீட்டுக்குக் கொண்டுவந்தவர்கள், உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஜெபம் செய்துள்ளனர்.
உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலயே வைத்திருந்ததைப் பார்த்து அருகில் குடியிருந்தவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மூன்றாவது நாளாக உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்ததால் மீண்டும் போலீஸார் போய்க் கேட்டதற்கு பாலகிருஷ்ணன் தகராறு செய்திருக்கிறார். அதன் பின்பு அவர்களின் உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசி, வரவழைத்து சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டுக்குக் கொண்டு செல்ல வைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "பாலகிருஷ்ணன், மாலதி தம்பதியர் இரு மகன்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி பிரார்த்தனையின் மூலமாக இறந்துபோனவரை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்தது தெரியவருகிறது" என்றனர்.
Comment