தஞ்சைத் தரணிக்குப் புதிய ஆயர்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக அருள்முனைவர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களை ஜூலை 13 சனிக்கிழமை அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
அருள்முனைவர் த. சகாயராஜ் திருச்சி மறைமாவட்டக் குரு. திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் அமைநதுள்ள அய்யம்பட்டி கிராமத்தில் நினைவில் வாழும் திரு. தம்புராஜ், திருமதி. சூசை அடைக்கல மேரி பெற்றோருக்குக் கடைசி மகனாக 1969 -ஆம் ஆண்டு மார்ச் 14 -ஆம் தேதி பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர்.
சென்னை-பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற இவர், 1996 -ஆம் ஆண்டு ஏப்ரல் 17 -ஆம் நாள் அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தை, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். முனைவர் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
புதிய ஆயர் ஆற்றியுள்ள பணிகள்
திருச்சி புனித அன்னை மரியா பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை (1996-1997), மரியநாதபுரம் பங்குத்தந்தை (1997-2004), மறைமாவட்டக் குருக்கள் செனட்டின் செயலர் (2001-2007), மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குநர் மற்றும் மறைமாவட்ட ஆணையங்களின் ஒருங்கிணைப்பாளர் (2007-2012), மணப்பாறை பங்குத்தந்தை (2012), அன்னை மரியா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்குத்தந்தை, சென்னை, திருச்சிராப்பள்ளி குருத்துவக் கல்லூரிகளில் (External Professor) பேராசிரியர் (2017-2023), திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் (2023-2024) எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.
புதிய ஆயரின் ஆயர் பணி சிறக்க ‘நம் வாழ்வு’ வாசகர்கள், சந்தாதாரர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறது.
- முதன்மை ஆசிரியர்
Comment