No icon

சமூகக் குரல்கள்

“தமிழ்நாட்டில் திறமை மிகுந்த பெண்கள், பெண் குழந்தைகள் வறுமையின் காரணமாக முடங்கியுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சாதனையாளர்களாக உருவாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும்.”

- திருமதி. ஏ.எஸ். குமாரி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி

“புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளும் மாதம் ரூ. 1,000 பெற கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டுவரை அரசு பள்ளி மாணவிகள் மட்டுமே இதில் பயன் பெற்றனர். இந்நிலையில், 2024 - 25 -ஆம் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உயர் கல்வி முடிக்கும்வரை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 1,000 நேரடியாகச் செலுத்தப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவிகள், ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் பயன்பெற, அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.”

- திரு. ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னை மாவட்ட ஆட்சியர்

“இந்தியாவில் திருமணமான பல பெண்களிடம் தனி வருமானம் என ஏதும் இல்லை. அவர்கள் தங்களின் தேவைகளுக்குக் குடும்பத்தினரிடம் கேட்டுப் பணத்தைப் பெற வேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் இல்லை. திருமணமாகிவிட்டால் கணவருடனோ அல்லது கணவரின் குடும்பத்தினருடனோ பெண்கள் தங்க வேண்டும் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் முறையாக உள்ளது. திருமணமாகி தன்னை நம்பி வந்த மனைவி உணர்வுப்பூர்வமாக மட்டுமின்றி, நிதி ரீதியாகவும் தன்னையே சார்ந்திருக்கிறாள் என்பதைக் கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. குடும்பத்தினரின் நலனுக்காக நாள்தோறும் உழைக்கும் பெண்கள், கணவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் பாசம் மட்டுமே. கணவரின் குடும்பத்தினரும் தன்னுடைய உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதே பெண்களின் சிறிய எதிர்பார்ப்பு. ஆனால், பல குடும்பங்களில் பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. குடும்பத்துக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் அல்லாமல் அவர்களுக்கென்று தேவைப்படும் தனிப்பட்ட செலவுகளுக்குத் தேவையான பணத்தைச் சற்றும் யோசிக்காமல் கணவர் வழங்கி அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை அளிக்க முன்வர வேண்டும்.”  

- திருமதி. பி.வி. நாகரத்னா, உச்சநீதிமன்ற பெண் நீதிபதி

Comment